மேகத்திலிருந்து உண்டான சத்தம்.

அப்பொழுது ஒரு மேகம் அவர்கள் மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன்,  இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று (மாற்கு 9:7). 

பலவிதமான செய்திகளும்,  பலருடைய பேட்டிகளும் எங்கும் தொனிக்கிற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மின்னணு ஊடகங்கள் எல்லாம்  இருபத்துநான்கு  மணிநேரமும்  செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. வேதாகம போதனைகளும்,  வியாக்கியானங்களும்,  தேவச்செய்திகளும்  உலகளாவிய வலைத்தளங்களில் குவிந்து காணப்படுகிறது. நூதன உபதேசங்களும்,  அந்நிய போதனைகளும் கூட பரம்பிக் காணப்படுகிறது. ஆனால் பிதாவாகிய தேவனுடைய சத்தம் என்ன சொல்லுகிறது என்றால்,  இயேசுவுக்குச் செவி கொடுங்கள் என்று நம்மை எச்சரிக்கிறது. கடைசி நாட்களில் கர்த்தருடைய பிள்ளைகள் ஆண்டவருடைய சத்தத்திற்கு நேராக நம்முடைய செவிகளைத் திருப்பவேண்டும்.

ஒருநாள் இயேசு  பேதுருவையும்  யாக்கோபையும்  யோவானையும்  அழைத்துக் கொண்டு உயர்ந்த மலையின்மேல் தனியே கூட்டிக்கொண்டுபோய்,  அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அங்கே அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது. அப்பொழுது  மோசேயும்  எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். உடனே பேதுரு இயேசுவை நோக்கி,  போதகரே,  நாம் இங்கே இருக்கிறது நல்லது,  உமக்கு ஒரு கூடாரமும்,  மேசேக்கு ஒரு கூடாரமும்,  எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக,  மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று பயந்து தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான். இயேசுவை மோசே,  எலியாவோடு அவன் ஒப்பிட்டு மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். அனேக வேளைகளில் நாமும்  என்னத்தை பேசுகிறோம் என்று அறியாமலேயே பேசுகிறோம். இயேசுவைத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்று சொல்லுகிறவர்கள் உண்டு. வேதம் காட்டாத வேறொரு இயேசுவைக்  குறித்துப்  பிரசங்கிக்கிறவர்களும் உண்டு. இயேசுவின் வல்லமையை மட்டுப்படுத்தி,  அவரை சாதாரண நபரைப் போலக் கருதுகிறவர்களும் காணப்படுகிறார்கள். 

அந்தவேளையில் மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது,  அது மகிமையுள்ள தேவனின் முழக்கத்தின் சத்தம்,  அது வல்லமையும் மகத்துவமுள்ள சத்தம்,  கேதுரு மரங்களை முறிக்கிற சத்தம்,  அக்கினி ஜுவாலைகளைப் பிளக்கும் சத்தம்,  காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணும் சத்தம்,  பெண்மான்களை  ஈனும்படி செய்கிற சத்தம் அது. அந்த சத்தம் மேகத்திலிருந்து உண்டானது. மேகஸ்தம்பமாக இஸ்ரவேல் ஜனங்கள் மேல் நிழலிட்ட மேகமது,  அந்த மேகத்திலிருந்து  இஸ்ரவேல் ஜனங்களோடு அனேக வேளைகளில் தேவன் பேசினார். சாலமோன் தேவாலயத்தைப் பிரதிஷ்டை செய்த வேளையில் இறங்கி ஆலயத்தை நிறைத்த மேகம்,  அந்த மேகத்தின் வழியாய் தான் இயேசுவும் எடுத்துக் கொள்ளப்பட்டார். அதே மேகத்திலிருந்து தேவன் பேதுருவையும்,  யாக்கோபையும்,  யோவானையும் பாத்து கூறினார்,  என்னுடைய நேச குமாரனாகிய இயேசுவுக்குச் செவிகொடுங்கள் என்று. மோசே தீர்க்கதரிசி கூட,  உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்,  அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் செவிகொடுப்பீர்களாக(அப். 3:22) என்றார். கர்த்தருடைய பிள்ளைகளே,  ஆண்டவருக்குச் செவிகொடுங்கள். அவர் வேத வசனங்கள் மூலம் உங்களோடு பேசும் போது கீழ்ப்படியுங்கள். அவருடைய  சத்தத்திற்குச்  செவிகொடுக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. இயேசுவின் சத்தத்தைக் கேட்டு, அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கும் போது நீங்கள் அசைக்கப்படுவதில்லை.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar