கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம்.

இதோ,  நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும், ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல,  ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல,  கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் (ஆமோஸ் 8:11).

உணவு பற்றாக்குறைகளும்,  தண்ணீர் பற்றாக்குறைகளும் வரும் போது தேசத்தின் குடிகள் பஞ்சத்திற்குள்ளாய் கடந்துசெல்லுவதுண்டு. ஆனால் ஆமோஸ் தீர்க்கதரிசியின் மூலம் கர்த்தர், வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம் வரப்போகிறது என்று எச்சரிக்கிறார். உணவுத் தட்டுப்பாடுகள் வரும்போது அது வெளிப்புறமான சரீரத்தைப் பாதிக்கிறது. ஆனால் வசனம் கேட்கக் கிடைக்காமல் போகும் போது உள்ளான மனுஷன் பலவீனப்பட்டுப் போய்விடுவான்,  கடைசியில் நித்தியத்தையும் இழந்துவிடுவான். ஆகையால் தான் இயேசு மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல,  தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்றார். உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன், உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும்,  என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது என்று எரேமியா தீர்க்கன் வசனத்தை ஆகாரத்தைப் போலப் புசித்தேன் என்று கூறுகிறார். அரசாங்கங்களின் தவறான கொள்கைகளால்,  மழையின்மையினால்,  யுத்தங்கள் நிமித்தம் உணவு பஞ்சங்கள் கூட வரலாம்,   ஆனால் வசனம் கேட்கக் கூடாத பஞ்சகாலம் வந்து விடக்கூடாது.

ஆமோஸ் தீர்க்கதரிசியின் நாட்களில் யூதா,  இஸ்ரவேலின் குடிகள் வேதத்தை வெறுத்தார்கள்,  கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை,  பொய்களை நம்பி மோசம் போகிறவர்களாய் காணப்பட்டார்கள். ஆகையால் வசனம் கேட்டக் கிடையாத பஞ்சத்தைக் கர்த்தர் தண்டனையாய் அனுப்பினார். அதுபோல நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த கடைசி நாட்களும் காணப்படுகிறது. ஆரோக்கியமான வசனங்களைக் கற்றுக்கொடுக்கிறவர்களில் பஞ்சம் காணப்படுகிறது. சத்திய வசனத்திற்குத் தூணும் ஆதாரமுமாய் காணப்படுகிற சபைகளின் பலிபீடங்களிலிருந்து கர்த்தருடைய வசனம் வெளிப்படுவதில் பஞ்சம் காணப்படுகிறது. பெராயா பட்டணத்தின் ஜனங்களைப் போல,  வசனங்களைக் கேட்டு காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கிற ஜனங்களில் பஞ்சம் காணப்படுகிறது. ஜனங்கள் செவித்தினர்வு உள்ளவர்களாகிய தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தெரிந்தெடுக்கிற நாட்களாய் இந்நாட்கள் காணப்படுகிறது. ஒருவேளை எல்லா மீடியாக்கள் வாயிலாகவும் கர்த்தருடைய வார்த்தைகள் திரளாய் புறப்பட்டு வந்தாலும்,  வேதத்தின்படி சமச்சீரான கர்த்தருடைய எல்லா ஆலோசனைகளும் வருகிறதா என்றால் அனேக நேரங்ககளில் இல்லை என்றுதான் கூறமுடியும். 

அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு தான் மரிப்பதற்கு முன்பு எழுதும் போது,  நான் தேவனுக்கு முன்பாகவும்,  உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும்,  அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:  சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு, எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி,  கடிந்துகொண்டு,  புத்திசொல்லு.  ஏனென்றால்,  அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல்,  செவித்தினவுள்ளவர்களாகி,  தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு. சத்தியத்துக்குச் செவியை விலக்கி,  கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு,  தீங்கநுபவி,  சுவிசேஷகனுடைய வேலையைச் செய்,  உன் ஊழியத்தை நிறைவேற்று என்று கட்டளைக் கொடுத்தார் (2 தீமோத்தேயு 4:1-5). அந்த நாட்கள் இந்த நாட்களாய் காணப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை.

கர்த்தருடைய பிள்ளைகளே,  கர்த்தருடைய வார்த்தைக்கு நேராகத் திரும்புங்கள்,  வேதத்தில் தேறினவர்களாய் காணப்படுங்கள்.  உங்கள் இருதயங்கள் நல்ல நிலங்களாய் காணட்டும்,  வசனத்தைக் கேட்டு உணர்வடைந்து நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் கொடுங்கள். அப்போது நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org