உன். 1:4. என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப்பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
நேசம் எப்பொழுதும் ஒருவரை தள்ளாது, மாறாக இழுத்துக்கொள்ளும். பொல்லாத சத்துரு தான் ஜனங்களை பொய்யான மாய்மாலமான அன்பை காட்டி கடைசியில் பாதாளத்தில் தள்ளுகிறவனாக காணப்படுவான். ஆனால் இயேசுவோ தன்னுடைய நேசம் என்னும் ஜமுக்காலத்தினால் இழுத்துக்கொள்ளுகிறவர். போவாஸ் நேசம் என்னும் ஜமுக்காலத்தினால் ரூத்தை இழுத்துக்கொண்டான். காந்தம் எப்படி இரும்பை தன்னிடம் இழுத்துக்கொள்ளுமோ அதுபோல இயேசுவின் மாறாத அன்பு நம்மை அவரிடம் கிட்டி சேர்க்கிறதாக இழுத்துக்கொள்ளும்.
இயேசு தன்னுடைய சிலுவையின் பாதையில் கடந்து செல்லும்போது சொன்னார் நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார் (யோவா 12:32). சிலுவையில் இயேசு உயர்த்தப்பட்ட போது நம்மை அவர் இழுத்துக்கொண்டார். அன்பினால் இழுத்துக்கொண்டார். சிலுவை அன்பை நாம் அனுதினமும் தியானிக்கும்போது அந்த அன்பு இயேசுவிடம் இழுத்துக்கொள்ளும்.
நாமும் நம்முடைய சொந்த காரியங்களை மற்றவர்களிடம் திணிக்காமல், அவர்களை தள்ளாமல் இருக்க வேண்டும். மாறாக இழுத்துக்கொள்ளுகிறவர்களாக காணப்பட வேண்டும். கணவன் தன்னுடைய மனைவியை இதை செய் அதை செய் என்று எப்பொழுதுமே கட்டளையிடுகிறவனாக இருக்கலாகாது. மாறாக உங்கள் நடக்கையின் மூலம், நீங்கள் மாதிரியாக செயல்படும்போது அவர்களை உங்கள் பக்கம் இழுத்துக்கொள்ளுகிறவர்களாக காணப்பட முடியும். இயேசுவும் அப்படிதான் நமக்கு அநேக மாதிரியை வைத்து தன்னிடம் இழுத்துக்கொண்டார். பவுல் சொல்லும்போதும் கூட ஒருமுறை சொல்லுவார் என்னை பின்பற்றுங்கள் என்று. அப்படியாக மாதிரியுள்ள வாழ்க்கை வாழ்ந்ததினால் அநேகரை பவுல் கிறிஸ்துவுக்குள் இழுத்துக்கொண்டார்.
உங்கள் வாழ்க்கையில் யாரும் உங்களை தள்ளுவதற்கு இடம் கொடாதிருங்கள். தள்ளுவது பிசாசின் சுபாவம். இழுத்துக்கொள்ளுவது இயேசுவின் சுபாவம். இயேசு உங்களை தன்னிடம் இழுத்துக்கொண்டபிறகு உங்களை விருந்து சாலைக்குள் அழைத்துச்செல்வார். விருந்துசாலையில் அநேகருக்கு முன்பாக நீங்கள் அவருடைய மணவாட்டி என்பதை காண்பிக்கும் வண்ணம் அழைத்து செல்வார். விருந்து சாலை ஐக்கியத்தை குறிக்கிறது. கெட்ட குமாரன் மனம் திரும்பி வந்த போது தகப்பன் விருந்து செய்தான். இயேசு தன்னுடைய சீஷர்களோடு பந்தியில் அமர்ந்திருந்தார். ஆதாம் சிருஷ்டிக்கப்பட்ட பிறகு அவனுடைய முதல் நாள் ஆண்டவர் அவனோடு ஐக்கியத்தை ஏற்படுத்தி ஓய்ந்திருந்தார். இயேசு நம்மை இழுத்துக்கொள்ளுவது, நாம் அவரோடும், அவர் நம்மோடும் ஐக்கியத்தை வளர்த்துக்கொள்வதற்காக என்பதை தேவ ஜனங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

