இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன், நான் மரிக்கும் பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும், தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக (நீதிமொழிகள் 30:7, 8).
செம்மையானவர்களுடைய ஜெபம் கர்த்தருக்குப் பிரியம். அப்படிப்பட்ட ஜெபங்களில் ஒன்று ஆகூரின் விண்ணப்ப ஜெபமாய் காணப்படுகிறது. இவரைக்குறித்து இந்த அதிகாரத்தில் மாத்திரம் தான் வாசிக்கிறோம். வேதத்தில் காணப்படுகிற அனேக சிறிய பாத்திரங்களிலிருந்து பல ஆவிக்குரிய பாடங்களை நாம் கற்றுக்கொள்ளமுடியும், ஆனால் அவர்களை நாம் அனேக வேளைகளில் கவனிப்பதில்லை. நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த நாட்களில் அனேகர் ஐசுவரியங்களுக்குப் பின்னாலும், பொருள்களுக்குப் பின்னாலும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதனிமித்தம் தங்கள் உத்தமத்தை இழந்து, பொய்களைப் பேசி, லஞ்சங்களை வாங்கி தங்களைக் கெடுத்துக் கொள்ளுகிறவர்களாய் காணப்படுகிறார்கள். விசுவாசிகளிலும், ஊழியர்களிலும் கூட அனேகர் இதே நிலையில் இன்று காணப்படுகிறார்கள். ஆகூர் தான் கேட்கிற இரண்டு மனுக்களையும் அவன் மரிக்கும் பரியந்தமும் மறுக்காமல் தாரும் என்று கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்கிறான். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் மரணம் மட்டும், ஒருவேளை கர்த்தருடைய வருகை முந்துமானால் அதுவரைக்கும் உத்தமமான ஒரு ஜீவியம் செய்ய நம்மை அர்பணிக்கவேண்டும், அதுவே நம்முடைய ஜெபங்களாய் காணட்டும்.
இரண்டு வேண்டுதல்கள், அதில் நான்கு காரியங்கள் காணப்படுகிறது. முதலாவது மாயையை எனக்குத் தூரப்படுத்தும். மாயை என்பது எபிரேய பதத்தில் நீராவி என்று அர்த்தம்கொள்ளுகிறது, திடீரென்று தோன்றி காணாமல் போய்விடும். உலகில் காண்கிறவை எல்லாம் மாயையாய் காணப்படுகிறது, அக்கினிக்கு நேராய் வைக்கப்பட்டிருக்கிறது. மாயைகளின் மேல் கண்களை வைத்து வாழ்நாள் முழுவதும் அதன்பின்பாக ஓடிக்கொண்டிருக்கிறோம். அதுபோல, நம்மிலும் மாயை காணப்படுகிறது, அசல் முகத்தை மறைத்து, மாய்மாலத்தை வெளிப்படுத்துகிறோம். அப்சலோம் ஜனங்களிடத்தில் அதிக அன்பைக் காட்டுகிறவன் போல மாயையான தோற்றத்தை வெளிப்படுத்தினான், அவனுடைய நோக்கம் ஜனங்களை தன் தகப்பனாகிய தாவீதைவிட்டு பிரித்துவிடவேண்டும் என்பதே, கடைசியில் அவனோடு அவனை பின்பற்றின அனேக ஜனங்களும் சங்காரமானார்கள். பிசாசும் ஜனங்களுக்கு நன்மை செய்கிறவன் போல தன்னைக் காட்டி, கர்த்தரிடத்திலிருந்து ஜனங்களைப் பிரித்து, கடைசியில் தன்னோடு அக்கினி கடலில் சேர்க்கிறான். நம்மிலும் மாய்மாலங்கள் இல்லாதபடி, பிசாசின் மாயவலையில் விழுந்து விடாதபடிக்கு, அவற்றிற்கு என்னைத் தூரப்படுத்தும் என்று ஜெபிக்கவேண்டும்.
இரண்டாவது, பொய் வசனிப்பை எனக்குத் தூரப்படுத்தும் என்று வேண்டுதல் செய்கிறான். சில நன்மைகள் கிடைக்க, காரியங்கள் வாய்ப்பதற்குப் பொய்களைப் பேசுகிறோம். அதனிமித்தம் பிசாசின் பிள்ளைகளாகி விடுகிறோம். அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான். பொய் பேசுகிற அத்தனை பேருக்கும் அவன் தகப்பன். ஏதேனில் பொய் பேசி ஆதி பெற்றோரை வஞ்சித்தான், ஆதி சபையின் நாட்களில் அனனியா, சப்பீரா அவர்களை பொய் பேசும் படிக்குச் செய்தான். நம்முடைய தேவன் சத்தியபரர், அவருடைய வார்த்தை சமூலமும் சத்தியம், நமக்குள் வாசம் பண்ணுகிறவர் சத்திய ஆவியானவர். ஆகையால் பொய்வசனிப்பையும், நூதனமான பொய் உபதேசங்களைப் போதித்து ஜனங்களை வஞ்சிப்பதையும் விட்டு, கர்த்தருடைய ஜனங்களும் ஊழியர்களும் விட்டு விலகவேண்டும்.
மூன்றாவது, தரித்திரத்தை எனக்கு கொடாதிரும் என்று ஜெபித்தான். தரித்திரப்படுகிறதினால் திருடி, தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்கிவிடக் கூடாது. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக, கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார் என்றும் வேதம் எச்சரிக்கிறது. தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் கர்த்தர் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார் (ரோமர் 10:12). கர்த்தருடைய பிள்ளைகள் தரித்திரத்தில் எப்போதும் காணப்பட வேண்டும் என்பது கர்த்தருடைய சித்தமல்ல. ஆகையால் தரித்திரத்தில், பற்றாக்குறைகளில் இப்போது காணப்பட்டாலும், கர்த்தரை உண்மையாய் சேவிக்கும் போது, சூரியனைக்கண்ட பனிபோல தரித்திரங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களைவிட்டு விலகிவிடும். கர்த்தர் நம்முடைய பேராசைகளை சந்திப்பதில்லை, ஆனால் நம்முடைய அனுதின தேவைகளை நிச்சயமாய் சந்திப்பார், நம்முடைய படிகளை நமக்கு நிச்சயமாய் அளந்து நம்மைப் போஷிப்பார்.
நான்காவது, ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிரும் என்று ஜெபித்தார், காரணம் பரிபூரணம் அடைகிறதினால் கர்த்தரை மறுதலித்து, அவர் யார் என்று சொல்லிவிடக்கூடாது. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் (மத். 19:24 ) என்று இயேசு கூறினார். கர்த்தருடைய பிள்ளைகள் ஐசுவரியவான்களாய் காணப்படலாம், ஆனால் நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கையை வைத்துவிடக்கூடாது. ஐசுவரியங்களின் மேல் கண்களை வைக்காமல், ஐசுவரியத்தைக் கொடுக்கிற கர்த்தரையே சார்ந்து கடைசி மட்டும் ஜீவிக்க நம்மை அர்பணிக்கவேண்டும். இதுவே நம்முடைய ஜெபங்களாய் கூட காணப்படக் கர்த்தா அருள்புரியட்டும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org

