உங்கள் தலை சத்துருவுக்கு மேலாக உயர்த்தப்படும்:-

சங் 27:6. இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

தாவீது சொல்லுகிறான் அவன் தலை சத்துருவுக்கு மேலாக உயர்த்தப்படும். அவனுடைய நாட்களில் தாவீதுக்கு விரோதமாக அநேக சத்துருக்குள் எழும்பினார்கள். கோலியாத் மாத்திரம் தான் தாவீதின் சத்துரு என்று நினைத்துவிடலாகாது. அவன் வாழ்க்கையில் அநேகர் சத்துருக்கலாக எழும்பினார்கள். என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது (சங் 57:4) என்று தாவீது கூறுகிறான். எப்பக்கமும் விழத்தள்ள விரோதிகள் இருந்தார்கள். ஆனால் கர்த்தர் எல்லா சத்துருவுக்கும் மேலாக தாவீதின் தலையை உயர்த்தினார்.

உங்கள் வாழ்க்கையிலும் சத்துருக்கள் எழும்பலாம். சத்துருக்கள் என்றால் எதோ உங்கள் அருகில் இருப்பவர்கள், உங்களோடு கூட வேலை செய்பவர்கள், உங்கள் நண்பர்களாக இருந்து விரோதித்தவர்கள் என்று நினைத்துவிட கூடாது. காரணம் நமக்கு மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யுத்தம் அல்ல. இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் நமக்கு சத்துருக்கள் அல்ல. ஒரு வேளை உங்கள் வேலையில் உங்களுக்கு விரோதமாக யாராவது எழும்பலாம், உங்கள் உறவினர்கள் விரோதிகளாக மாறலாம். ஆனால் அவர்கள் அல்ல உங்கள் சத்துரு. உங்கள் ஒவ்வொருவருக்கும் பொல்லாத சாத்தான் தான் சத்துரு. அவன் தான் பகையை உண்டு பண்ணுபவன். அவன் தான் உங்கள் வாழ்க்கையில் வீழ்ச்சிகளை கொண்டு வரும்படியாக செய்பவன்.

இப்படியாக உங்களுக்கு விரோதமாக சத்துரு அநேக விதங்களில் செயல்படலாம். இச்சைகளை கொண்டு வருகிற சத்துரு, மீண்டும் மீண்டும் பாவத்தை செய்ய தூண்டும் சத்துரு, ஆபாச படங்களை பார்க்க தூண்டும் சத்துரு, பெருமைகளை உள்ளத்தில் விதைக்கும் சத்துரு, பண ஆசையை தூண்டும் சத்துரு, கோபங்களை தூண்டும் சத்துரு, பிரிவினைகளை கொண்டு வரும் சத்துரு, வேதத்தின் படி நடக்க தடை செய்யும் சத்துரு என்று பல விதங்களில் சத்துரு உங்கள் வாழ்க்கையில் கிரியை செய்யலாம். ஆனால் ஒன்று நிச்சயம் நீங்கள் ஆண்டவருடைய இருதயத்திற்கு ஏற்ற பாத்திரமாக இருக்கும்படி அற்பணிக்கும்போது, இந்த எல்லா பொல்லாத சத்துருக்களுக்கு மேலாக உங்கள் தலை உயர்த்தப்படும். கோலியாத்திற்கு மேலாக தாவீதின் தலை உயர்த்தப்பட்டது. அது போல மாம்சீக இச்சைகளை உண்டுபண்ணுகிற சத்துருவுக்கு மேலாக உங்கள் தலை உயர்த்தப்படும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org