நாட்களை எண்ணும் அறிவு

நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். சங்கீதம் 90:12

உலகில் பலவிதமான காரியங்களை நாம் கற்றுக்கொள்ளுவதினாலும், பழகிக்கொள்ளுவதினாலும் நமக்கு அறிவு வளருகிறது. மேற்குறிப்பிட்ட வசனம் நமக்குக் காணப்படவேண்டிய வேறொரு அறிவைக் குறித்து போதிக்கிறது, நாட்களை எண்ணும் அறிவு, அது எல்லா அறிவுகளை விட மேலானது. அந்த அறிவை எங்களுக்குத் தந்தருளும் என்று தேவனுடைய மனுஷனான மோசே ஜெபித்தான். கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும் (சங். 39:4) என்று சங்கீதக்காரனாகிய தாவீது வேண்டுவதையும் பார்க்கமுடிகிறது. என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர் என்று அவர் கூறுவதின் நிமித்தம், மனுஷனுடைய ஆயுசின் நாட்கள் மிகவும் குறுகினது என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. யோபு பக்தனும், என் நாட்கள் அஞ்சல்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது (யோபு. 9:25) என்று கூறுகிறார். ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள் இதை உணர்ந்து ஜீவிக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். வாலிபர்கள் நினைப்பதுண்டு, எங்கள் நாட்களுக்கு முடிவே இல்லை என்று, எந்நாட்களும் இப்படியே இருப்போம் என்ற கனவுலகத்தில் வாழ்கிறவர்களாகக் காணப்படுவதுண்டு. 

கர்த்தருடைய பிள்ளைகளே, நாட்கள் குறைவாக காணப்படுவதினால், நித்தியத்திற்குரியவவைகளைக் நீங்கள் தேடவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். இயேசு தன்னுடைய முதல் பிரசங்கத்தில்: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கித்தார் (மத். 4:17). மனந்திரும்புதல் என்பது, நமக்குள் ஒரு மாற்றம் உண்டாகி, பாவ ஜீவயத்தை விட்டு விலகி, தேவனுக்கு நேராக திரும்புவதாய் காணப்படுகிறது. பாவத்தின் சம்பளம் மரணம், பாவம் செய்கிற ஆத்துமா சாகும், பாவம் உங்கள் வாசல் படியில் படுத்துக்கொள்ளும் என்று வேதம் எச்சரிக்கிறது.  ஆகையால், நாட்கள் குறுகினதாய் காணப்படுவதினால், மனம் திரும்புவதற்கு காலதாமதம் செய்யாதிருங்கள். அதன் பின்பு, மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள் (லூக்கா 3:8) என்று வேதம் கூறுகிறது. உங்கள் கனிகளை வைத்து தான் உண்மையாய் மனந்திரும்பினீர்களா என்பதை அறியமுடியும். முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன் (அப். 26:20), என்று அப்போஸ்தலனாகிய பவுல் நாம் மனந்திரும்ம்பி, குணப்பட்டு, மனம்திரும்புதலுக்கேற்ற கிரியைகளையும் செய்யவேண்டும் என்று கூறுகிறார். ஆனால், இந்நாட்களில் கனிகளையும், கிரியைகளையும் பார்க்க முடியாததினால்,  அனேகருடைய மனம்திரும்புதலே கேள்விக்குறியாய் காணப்பபடுகிறது.

காலம் கடைசியாக காணப்படுவதினாலும், சத்துருவும் தனக்கு கொஞ்சம் காலம் தான் காணப்படுகிறது என்பதை அறிந்து தீவிரமாய் செயல்படுவதினாலும், கர்த்தருடைய ஜனங்கள் நாட்களை எண்ணும் அறிவை அடைந்து, மெய் மனம்திரும்புதலோடு, கனிகளையும், கிரியைகளையும் வெளிப்படுத்தி, கர்த்தருடைய வருகைக்காய் நம்மை ஆயத்தப்படுத்த வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar