உபத்திரவம் Vs இளைப்பாறுதல்:-

II தெசலோனிக்கேயர் 1 : 6. உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.

முதலாவதாக இந்த வசனத்தில் உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும் என்று வாசிக்கிறோம். குறிப்பாக இந்த வசனத்தில் பவுல் குறிப்பிடுகிற உபத்திரவம் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அனுபவிக்கிறவர்களுக்கு என்று எழுதப்பட்டதாக காணப்படுகிறது. யேசுகிருஸ்துவிலிருந்து, அவருடைய பன்னிரண்டு சீஷர்கள், பவுல் மற்றும் இன்று வாழும் அநேக தேவ மனிதர்கள் வரை பலர் சுவிசேஷத்தினால் பல உபத்திரவங்களை கடந்து வந்திருக்கிறார்கள் என்று சரித்திரத்தின் வாயிலாக அறிந்துகொள்ளுகிறோம். இன்று, ஏ.சி.என் ஆராய்ச்சியின் படி, உலகெங்கிலும் கிட்டத்தட்ட 300 மில்லியன் கிறிஸ்தவர்கள்அல்லது ஒவ்வொரு 7 பேரில் 1 பேர் தன்னிச்சையான கைது, வன்முறை, முழு அளவிலான மனித உரிமை மீறல்கள் மற்றும் கொலை போன்ற ஒருவித துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஒரு நாட்டில் வாழ்கின்றனர். 2018 ஆம் ஆண்டில் தங்கள் நம்பிக்கைக்காக கொலை செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை 4,000 க்கும் அதிகம், மேலும் 50 மோசமான நாடுகளில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 11 கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதாகவும் தெரிவிக்கிறது. எது எப்படியாக இருந்தாலும் கிறிஸ்துவர்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவம் வரும் என்று இந்த வசனம் சொல்லுவதை பார்க்கலாம். தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும் என்று பிந்தைய வசனங்களில் வாசிக்கிறோம்.

அடுத்ததாக உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் என்று எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம். பவுல் சுவிசேஷத்தினிமித்தம் அநேக உபத்திரவங்களை சந்தித்தார். கீழ்காணும் வசனங்களில் பவுல் பட்ட உபத்திரவத்தை பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது.II கொரிந்தியர் 11 : 23 – 27ல் அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.

இவ்வளவு உபாத்திரவத்திலும் பவுல் சொன்னார் கிருஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்று. கடைசில் பவுல் மரிப்பதற்கு முன்பாக சொன்னார் II தீமோத்தேயு 4 : 7. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார் என்று. ஆண்டவர் சொன்னார் இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்று. ஆனாலும் திடன்கொள்ளுங்கள். உலகத்தை ஜெயித்தவர் உங்களோடு கூடு இருக்கிறார்.

சுவிசேஷத்தின் மூலமாக உபாத்திரவப்படலாம். ஆனால் ஒரு நாள் வரும்; அது யேசுவோடுகூட இளைப்பாறுதலில் பிரவேசிக்கிற நாள். உங்களுக்கு கர்த்தர் இளைப்பாறுதலை கொடுப்பார்.

கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.

Bro. Robert Jegadheesh. R
Word of God Church
Doha- Qatar
www.wogim.org