இம்மையும் மறுமையும்.

இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம் (1 கொரி. 15:19).

நம் ஒவ்வொருவருக்கும் முன்பாக இரண்டு விதமான ஜீவியங்கள் காணப்படுகிறது. ஒன்று இம்மைக்குரிய ஜீவியம், மற்றொன்று மறுமைக்குரிய ஜீவியம். இம்மைக்குரிய, பூமிக்குரிய இந்த வாழ்க்கையானது குறுகிய நாட்களில் எல்லாருக்கும் முடிந்துவிடும். ஆனால் மறுமைக்குரிய, நித்தியத்திற்குரிய வாழ்வானது அழிவில்லாதது, என்றும் நிலையானது. நாம் உயிரோடிருக்கிற இந்த நாட்களில் நித்தியத்திற்குரியவைகளை நாம் தேடவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். தேவனுடைய ராஜ்யத்திற்குரியவைகளை நாம் தேடும் போது பூமிக்குரிய மற்ற எல்லா நன்மைகளையும் கர்த்தர் நமக்கு அருளிச்செய்வார்.

இம்மைக்குரிய வாழ்க்கைக்காய் மாத்திரம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையை வைத்தால் எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். இஸ்ரவேல் ஜனங்கள் கானானை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார்கள். வாக்குத்தத்தின் பூமியது, பாலும் தேனும் ஓடும் தேசம். ஆனாலும் எகிப்தில் தாங்கள் விட்டுவந்த மச்சங்கள், வெள்ளரிக்காய்கள், கோமட்டிக்காய்கள், கீரைகள், வெங்காயங்கள், வெள்ளைப்பூண்டுகளை நினைத்து அவர்கள் இருதயம் வாடிப்போனது. ஆகையால் அவர்களில் அனேகர் மேல் கர்த்தர் பிரியமாயிருக்கவில்லை. கானான் சென்றடையவும் இல்லை. அது போல பரம கானானை நோக்கி பிரயாணம் செய்துகொண்டிருக்கிறோம். இம்மையில் காணப்படுகிற சில காரியங்கள் மேல் சிந்தையை வைத்து பரலோகத்திற்குரியவைகளை இழந்து விடக்கூடாது. கர்த்தருடைய வருகையில் பரிதபிக்ப்படத்தக்க பாத்திரங்களாக மாறிவிடக் கூடாது.

பிலேயாம் என்ற தீர்க்கதரிசி அநீதியின் கூலிக்காக, இம்மைக்குரிய ஆதாயத்திற்காக, கர்த்தருடைய செம்மையான வழிகளை விட்டு விலகி, கர்த்தருடைய ஜனங்களைச் சபிக்கும்படியாக சென்றான். கர்த்தருடைய ஜனங்கள் பாவம் செய்யும்படிக்கு துர்ஆலோசனைகளை கொடுத்தான். ஆகையால் கர்த்தருடைய ஊழியத்தை இழந்து இஸ்ரவேலருடைய பட்டயத்திற்குப் பலியானான். அதுபோல கேயாசி என்ற எலிசாவின் ஊழியக்காரன், எலியாவின் கைக்கு தண்ணீர்வார்த்த எலிசா என்ற ஊழியக்காரன் இரட்டிப்பான அபிஷேகத்தைப் பெற்று ஊழியம் செய்தது போல, எலிசாவின் ஊழியக்காரனான கேயாசி நான்குமடங்கு அபிஷேகத்தைப் பெற்று ஊழியம் செய்திருக்க வேண்டும். ஆனால் நாகமானின் ஒரு தாலந்து வெள்ளி  இரண்டு மாற்று வஸ்திரங்களுக்காக பொய் சொன்னதன் நிமித்தம் நாகமானின் குஷ்டரோகத்தை தனக்கும் தன் சந்ததிக்கும் சம்பாதித்துக்கொண்டான். ஆகையால் இம்மைக்குரிய நன்மைகளுக்காக மாத்திரம் இயேசுவைப் பின்பற்றாதிருங்கள்.

நித்தியத்திற்குரியவைகளை நாடுங்கள். உன்னதங்களுக்குரிய மேலானவைகளை நாடுங்கள். தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நிலையான ஆசீர்வாதங்களைத் தேடுங்கள். காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள் (2 கொரி. 4:18). நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம்,  விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்; ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான் (எபி. 11:9-10). பூமியில் ஐசுவரியவானாக ஆபிரகாம் காணப்பட்டிருந்தும் அவற்றின் மேல் கண்களை வைக்காமல் தேவன் தாமே கட்டி உண்டாக்கின புதிய எருசலேம் என்ற நகரத்திற்காகக் காத்திருந்தான். மறுமைக்குரியவைகளுக்காகக் காத்திருந்தான். அப்போஸ்தலனாகிய பவுல் எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகவேண்டும், கர்த்தருடைய வருகையில் பங்குபெறவேண்டும் என்பதே அவனுடைய வாஞ்சையாகக் காணப்பட்டது.

நாம் மறுமைக்குரியவைகளுக்காக கர்த்தர் பேரில் நம்பிக்கை உடையவர்களாக ஜீவிக்கக் கர்த்தர் நமக்கு உதவிசெய்வாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar