கர்த்தர்மேல் உங்கள் நம்பிக்கையை வையுங்கள்.

மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.  கர்த்தர்மேல்  நம்பிக்கைவைத்து,  கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். (எரேமியா 17:5,7).

இரண்டு விதமான ஜனங்களைக் குறித்து மேற்குறிப்பிட்ட இரண்டு வசனங்கள் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, அவரை சார்ந்து வாழ்கிற ஒரு கூட்டம். அவர்களைப் பாக்கியவான்கள் என்று வேதம் கூறுகிறது. மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு கர்த்தரை விட்டு விலகுகிற இன்னொரு கூட்டம். இவர்களைச் சபிக்கப்பட்டவர்கள் என்று வேதம் அழைக்கிறது. நாம் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்?. மாம்சம் புல்லைப் போலவும், அதின் மகிமையெல்லாம் புல்லின் பூவைப் போலவும் ஒழிந்து போய்விடும். நம்பக் கூடாதவைகளின்மேல், அனேக வேளைகளில் நாம் நம்பிக்கையை வைக்கிறவர்களாகக் காணப்படுகிறோம்.

தாவீது, கோலியாத்தைக் குறித்து 1 சாமுவேல் 17-வது அதிகாரத்தில் வாசிக்கமுடியும். தாவீது கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, அவரை நிந்தித்த கோலியாத்திற்கு விரோதமாக யுத்தத்திற்கு எழும்பினான். ஆனால் கோலியாத்தோ தன் மாம்சபெலனை நம்பினான். தான் 9 அடி உயரமுடையவன் என்று எண்ணி மேட்டிமைக் கொண்டான். தன்னுடைய ஈட்டியையும், பட்டயத்தையும் நம்பினான். தாவீதோ குள்ளன், இளைஞன் என்று கண்டு அவனை நிந்தித்தான். ஆனால் கடைசியில் தாவீதின் கையினால் மரித்துப் போய்விட்டான். மாம்சத்தை மண்ணென்று நினைவு கூறுங்கள், அதின் பெலன் குறுகினது. ஆகையால் கர்த்தரைச் சார்ந்து ஜீவியுங்கள்.

மனுஷனையும், மாம்சத்தையும் நம்புகிறவர்கள் எப்படிப்பட்டவர்களாய் காணப்படுவார்கள்,  அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்(எரே. 17:6).  அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையானது வறட்சியாக போய்விடும், நன்மைகள் வருவதைக் காண்பதில்லை. ஆசீர்வாதங்கள் இல்லாத சாபத்தின் வாழ்வாகப் போய்விடும். ஒருவேளை நம்முடைய வாழ்க்கைகள் வறட்சியாக, பற்றாக்குறையில் காணப்படுகிறது என்றால், நம்முடைய நம்பிக்கை யார்மேல் இருக்கிறது என்பதைச் சோதித்துப் பார்க்கவேண்டும்.

மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் நம்பிக்கையாய் இருப்பதே நல்லது. அவர்கள், தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத்தன்வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பார்கள் (எரே. 17:8). எசேக்கியா ராஜாவைக் குறித்து வேதம் சொல்லுகிறது, கர்த்தர் பேரில் அவன் வைத்த நம்பிக்கையில் அவனுக்கு ஒத்த ராஜா, அவனுக்கு முன்னும் பின்னும் எழும்பினதில்லை. ஆகையால் அவனுடைய மரணத்தருவாயில், அவனுடைய ஆயுசின் நாட்களில் 15 வருடங்களைக் கர்த்தர் கூட்டிக்கொடுத்தார். கர்த்தர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாய் இருப்பேன் என்று யோபு சொன்னார், ஆகையால் கர்த்தர் இரட்டிப்பான ஆசீர்வாதங்களைக் கொடுத்து பாக்கியவானாக மாற்றினார்.

நம்முடைய நம்பிக்கையும் கர்த்தர் பேரில் எப்போதும் இருக்கட்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar