ஞானம், அறிவு, ஐசுவரியம், சம்பத்து, கனம்:-

யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

2 நாளாகமம் முதலாம் அதிகாரத்திலிருந்து ஒரு சம்பவத்தின் மூலமாக நாம் ஞானத்தை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்ளுவதை குறித்து அறிந்துகொள்ளலாம். தாவீதுக்கு பிறகு அவனுடைய குமாரனாகிய சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலையும் ஆளுகை செய்யும்படி கர்த்தர் அவனை ராஜ்யத்தில் அமர்த்தினார். சாலொமோன் ஞானத்தை பெற்றுக்கொண்டதின் ரகசியமென்னவென்றால், முதலாவது அவன் தேவனுடைய பெட்டி இருக்கும் இடத்திற்கு போனான். அங்கே ஆசரிப்பு கூடாரத்திற்கு முன்பாக வெண்கல பலிபீடத்தின் மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளை செலுத்தினான். என்று அவன் சர்வாங்க தகன பலிகளை செலுத்தினானோ அன்று இரவு கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று சொன்னார். அது வரைக்கும் ஆண்டவர் அவனுக்கு தரிசனமாகவில்லை.

முதலாவது நீங்கள் செய்ய வேண்டியது சாலொமோனை போல உங்களை சர்வாங்க பலியாக ஆண்டவருக்கு ஒப்பு கொடுக்க வேண்டும். என்று நீங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உங்களையே நீங்கள் சர்வாங்க பலியாக ஒப்பு கொடுக்கிறீர்களோ அன்று இதே கேள்வியை  கர்த்தர் உங்களை பார்த்தும் கேப்பார். மகனே நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று.

இந்த கேள்வியை கர்த்தர் இன்று உங்களிடம் கேப்பாரென்றால் அநேகர் உண்மையாக சொல்லப்போனால் சிலர் ஆண்டவரே எனக்கு ஒரு பங்களா வேண்டும், எனக்கு ஒரு நான்கு சக்கர வாகனம் வேண்டும், எனக்கு ஐந்து ஏக்கர் நிலம் வேண்டுமென்று தான் கேப்போம். ஆனால் சாலொமோன் என்ன கேட்டானென்றால் ஆண்டவரே எனக்கு உம்முடைய ஜனங்களை நடத்த ஞானத்தையும், அறிவையும் தாரும் என்று கேட்டான். சாலொமோன் நினைத்தால் நம்மை போல அநேக காரியங்களை கேட்டிருக்கலாம். ஆனால் அவன் கேட்ட காரியம் கர்த்தரின் உள்ளதை தொட்டது. அது கர்த்தருக்கு பிரியமாகவும் அவருடைய சித்தமாகவும் இருந்தது. கர்த்தர் என்ன செய்தாரென்று தெரியுமா, அவர் சாலொமோனுக்கு ஞானத்தையும் அறிவையும் கொடுத்தது மாத்திரமல்ல, அவன் கேளாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் அவர் தந்தார்.

இந்த சம்பவத்தை படிக்கிற நமக்கு ஒரு எண்ணம் வரலாம். சரி, நமக்கு ஐசுவரியம் கிடைப்பதற்கு எளிதான வழி ஆண்டவரிடம் ஞானத்தை கேட்பது; நாம் ஞானத்தை ஆண்டவரிடம் கேட்டால், ஐசுவரியத்தையும் தருவார், ஆகையால் ஆண்டவரே எனக்கு ஞானத்தை தாரும் என்று சுயநலமுள்ள விண்ணப்பத்தை கேட்கிறவர்களாக காணப்படுவோம். ஆண்டவர் ஞானத்தை கேட்டால் ஐசுவரியத்தையும் தருவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் எப்படி கேட்கிறோம் என்பது தான் முக்கியம். சாலொமோன் ஆண்டவரிடம் இந்த விண்ணப்பத்தை ஏறெடுக்கும்போது, கர்த்தரிடம் ஞானத்தை கேட்டால் ஐசுவரியத்தையும் கொடுப்பார் என்று அறியாதவனாக காணப்பட்டான், அவனுடைய விண்ணப்பம் சுயநலமில்லாத விண்ணப்பமாக இருந்தது. ஆகையால் ஆண்டவர் அவனுக்கு ஐசுவரியத்தையும் சேர்த்து கொடுத்தார். இன்று நீங்கள் சுயநலமில்லாமல் ஆண்டவரிடம் விண்ணப்பத்தை ஏறெடுங்கள், அவர் ஐசுவரியத்தை கொடுப்பாரென்று ஞானத்தை கேளாதேயுங்கள். மாறாக சுயநலமில்லாமல் சாலொமோனை போல ஆண்டவரே எனக்கு உம்முடைய ஜனங்களை நடத்த ஞானத்தை தாருமென்று கேளுங்கள். அப்பொழுது உங்களுக்கு கர்த்தர் ஞானத்தையும் அறிவையும் மாத்திரமல்ல நீங்கள் கேளாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் நிச்சயமாக தருவார்.

கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.

Bro. Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org