நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென் (எபேசியர் 3:20,21).
நம்முடைய தேவன் சர்வ வல்லமையுள்ளவர், எல்ஷடாய் என்பது அவருடைய நாமம். நம்முடைய நினைவுகளைப் பார்க்கிலும் அவருடைய நினைவுகள் மகா பெரியது. அவரால் செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. அவர் எதைச் செய்ய விரும்புகிறாரோ அதை ஒருவனாலும் தடை செய்ய முடியாது. அவர் உங்களைப் பார்த்து, நீங்கள் வேண்டுவதற்கும் நினைக்கிறதற்கும் அதிகமாய் உங்களுக்கு நான் செய்வேன் என்று வாக்கு கொடுக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகளே! இதுவரை நீங்கள் அனேக காரியங்களுக்காக வேண்டுதல் செய்திருக்கக் கூடும், அனேக நன்மைகளை விரும்பியிருக்கக் கூடும். காலதாமதமானதால் நீங்கள் சோர்ந்து போயிருக்கவும் கூடும். அனேக நாட்கள் காத்திருப்பது இருதயத்தை இளைத்துப் போகப் பண்ணும். ஆனால் நீங்கள் விரும்புகிற நன்மைகள் உங்களுக்கு வருகிறது. கர்த்தர் அதைத் துரிதமாய் செய்வார்.
அன்னாளுக்குப் பிள்ளைகள் இல்லாத வேதனை காணப்பட்டது. அவள் சக்களத்தி பெனின்னாள் அவளுக்கு மிகவும் மனமடிவு உண்டாக்கினாள். ஒருநாள் ஆண்டவருடைய சமூகத்தில் கடந்து சென்று அவளுடைய இருதயத்தின் வாஞ்சையெல்லாம் ஆண்டவரிடம் கூறினாள். சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன், அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணி ஜெபித்தாள் (1 சாமு. 1:11). கர்த்தர் அவளுடைய விண்ணப்பத்தின் சத்தத்தைக் கேட்டு, சாமுவேலைக் கொடுத்தார். அதோடு மூன்று குமாரர்களையும், இரண்டு குமாரத்திகளையும் அதிகமாய் கூட்டிக் கொடுத்தார். கர்த்தருடைய பிள்ளைகளே! நீங்கள் ஒருவேளை ஒரு ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் அதிகமான ஆசீர்வாதங்கள் துரிதமாய் வருகிறது.
சாலொமோன் ராஜாவானவுடன் கிபியோனிலிருந்த ஆசரிப்புக் கூடாரத்திற்கு கர்த்தாரைத் தொழுதுகொள்ளுவதற்குப் போனான். அவன் ஆண்டவரிடத்தில் அதிகமாய் அன்பு கூர்ந்ததினால் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி கர்த்தரைத் தொழுது கொண்டான். அன்று ராத்திரி கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று கூறினார். உடனே அவன் பூமியின் தூளைப்போலிருக்கும் இஸ்ரவேல் ஜனங்களை விசாரிப்பதற்கு ஞானத்தையும் அறிவையும் தந்தருளும் என்று கேட்டான். அவனுடைய ஜெபம் ஆண்டவருடைய பார்வைக்குப் பிரியமாயிருந்தது. ஆகையால் ஆண்டவர் கூறினார், நீ ஐசுவரியத்தையும், சம்பத்தையும், கனத்தையும், பகைஞரின் ஜீவனையும், உனக்கு நீடித்த ஆயுளையும் கேளாமல் ஜனங்களை நியாயம் விசாரிக்க ஞானத்தையும் விவேகத்தையும் கேட்டதினால், உனக்கு மனோவிருத்தியையும் அதோடு அதிக ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கட்டளையிட்டேன் என்று வாக்குக் கொடுத்தார். கர்த்தர் நீஙகள் வேண்டிக்கொள்ளுவதற்கு அதிகமாய் உங்களுக்குச் செய்வார். இரட்டிப்பான நன்மைகளைத் தந்தருளுவார்.
உலகத்தின் தகப்பன்மார்கள் தாங்கள் பொல்லாதவர்களாயிருந்தும் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, உங்கள் பரம தகப்பன், உங்களை அதிகமாய் நேசிக்கிறவர், உங்களுக்காக தன் ஜீவனைக் கொடுத்தவர் உங்களுக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும் தருவது உறுதி. நீங்கள் ஜெபித்த அனேக காரியங்களை நீங்கள் ஒருவேளை மறந்திருக்கலாம், ஆனால் கர்த்தர் எல்லாவற்றையும் தன்னுடைய கணக்கில் வைத்திருக்கிறார். நீங்கள் வேண்டிக்கொண்டதற்கு அதிகமான நன்மைகள் வருகிறது. ஆகையால் மகிழ்ந்து களிகூருங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org

