விசுவாசிக்கிறவன் பதறான்.

ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ,  அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன், அது பரீட்சிக்கப்பட்டதும்,  விலையேறப்பெற்றதும்,  திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும்,  விசுவாசிக்கிறவன் பதறான் (ஏசாயா 28:16).

சீயோனின் அஸ்திபாரக் கல் இயேசுவாகக் காணப்படுகிறார். சீயோன் என்பது மணவாட்டி சபையையும்,  கறைதிரை ஒன்றும் இல்லாத கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்காக நியமிக்கப்பட்ட கர்த்தருடைய பிள்ளைகளையும் குறிக்கிறது. நம்முடைய அஸ்திபாரம் கர்த்தராகிய இயேசுவாகக் காணப்படுகிறார். அவரே திட அஸ்திபாரமான மூலைக்கல்லாய் காணப்படுகிறார். உலகில் காணப்படுகிறவைகள் எல்லாம் அஸ்திபாரங்கள் இல்லாதது,  நிலையற்றது. அதையறிந்த விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம்,  தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு காத்திருந்தான் (எபி. 11:10). நாம் காண்கிறவைகள் அத்தனையும் அக்கினிக்கு நேராக வைக்கப்பட்டிருக்கிறது என்று 2 பேதுரு 3:7ல் வாசிக்கிறோம். ஆகையால் உங்களுடைய வாழ்க்கையை அழிவுக்கு நேராக வைக்கப்பட்டிருக்கிறவைகள் மேல் கட்டாதபடி,  அவைகளின் மேல் நம்பிக்கையை வைக்காதபடி,  நிலையான அஸ்திபாரமாகிய கிறிஸ்துவின் மேல் கட்டுங்கள். அப்போது எந்த சூழ்நிலைகளிலும் நீங்கள் அசைக்கப்படுவதில்லை. அவர் மேல் விசுவாசத்தை வைக்கிறவன் ஒருநாளும் பதறுவதில்லை.

இயேசு பரீட்சிக்கப்பட்ட கல் என்றும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள வசனம் கூறுகிறது. பொதுவாக உலோகங்களின் தரத்தைச் சோதித்து அறிவதற்கு அக்கினிக்குட்படுத்துவார்கள். பிதாவாகிய தேவன் பரீட்சிக்கப்படாத ஒருவரை மணவாட்டி சபையின் அஸ்திபாரக்கல்லாய் வைப்பதில்லை. இயேசு ஞானஸ்நானம் பெற்று,  ஜலத்திலிருந்து கரையேறியவுடனே,   வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி,  இவர் என்னுடைய நேசகுமாரன்,  இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. பிதாவாகிய தேவன் இயேசுவைப் பரீட்சித்துப் பார்த்து ஒரு குறையும் கண்டறியாததினால் இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று சாட்சி கொடுத்தார். ஞானஸ்நானம் பெற்ற பின்பும்,  இயேசுவின் ஊழியத்தின் பாதையிலும் உலகத்தின் அதிபதியாகிய பிசாசு பரீட்சித்தான்,  ஒரு குற்றத்தையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் இயேசுவைப் பலமுறை பரீட்சித்தார்கள்,  ஒரு குறைவையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. கர்த்தருடைய பிள்ளைகளே,  உங்கள் விசுவாசத்தைப் பரீட்சிக்கப்பட்ட ஆண்டவரின் பேரில் வையுங்கள்,  பதறாத வாழ்வை அவர் உங்களுக்குக் கட்டளையிடுவார்.

இயேசு விலையேறப்பெற்ற மூலைக்கல்லாகவும் காணப்படுகிறார். மேசியாவாகிய இயேசு விலையேறப்பெற்றவர்,  அவர் உங்களுக்காகச் சிந்தின ரத்தம் விலையேறப்பெற்றது. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஜீவனை,  ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபமென்ன என்று கேட்கிறவர். உலகத்தின் அத்தனை ஆசீர்வாதங்களையும் தராசின் ஒரு தட்டிலும்,  மறு தட்டில் ஒருவருடைய ஆத்துமாவையும் வைத்தால்,  ஆண்டவருடைய பார்வையில் அந்த ஆத்துமா தான் விலையேறப்பெற்றது. அப்படியென்றால் அந்த ஆத்துமாவை மீட்கும்படியாக சிந்தப்பட்ட இரத்தம் எவ்வளவு விலையேறப் பெற்றதாயிருக்கும். சபையும், கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்களும், கிறிஸ்துவின் இரத்தத்தினால் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டவர்கள். ஆகையால் இயேசுவைப் போல நீங்களும் விஷேசித்தவர்களாய் காணப்படுகிறீர்கள். மாத்திரமல்ல அவரே மூலைக்கல்லாகவும் காணப்படுகிறார். மூலைக்கல் நேராகவும்,  முறையாகவும் காணப்படும் போது கட்டிடம் ஒழுங்காகவும்,  நேர்த்தியாகவும் காணப்படும்.  நம்முடைய மூலைக்கல்லாகிய இயேசு,  நமக்கு முன்னோடினவர்,  கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப் பாருங்கள் என்றும் வேதம் கூறுகிறது. நமக்கு மாதிரியை வைத்துப் போனவர். மூலைக்கல்லாகிய அவரின் மேல் நம்முடைய வாழ்க்கை கட்டப்படும் போது,  நாமும் சாட்சியுள்ளவர்களாகவும்,  பூமிக்கு உப்பாகவும்,  உலகத்திற்கு வெளிச்சமாகவும் காணப்பட முடியும். கடினமான காலகட்டத்தில் நாம் காணப்படுகிறோம். இந்நாட்களில் அஸ்திபாரமுள்ளதும்,  பரீட்சிக்கப்பட்டதும்,  விலையேறப்பெற்றதும்,  திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாகிய இயேசுவின் மேல் நம்முடைய விசுவாசம் காணப்படும் போது,  நாம் ஒரு நாளும் பதறிப்போவதில்லை. நீதிமான் சிங்கத்தைப் போல தைரியமாயிருப்பான் என்ற வசனத்தின்படி நீங்கள் தைரியமாயிருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org