நம்பிக்கையோடு காத்திருங்கள்.

கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது (புல. 3:26).

நம்முடைய வாழ்க்கையில் அனேக நன்மைகளுக்காக நாம் காத்திருக்கிறோம். நல்ல ஒரு திருமண வாழ்க்கைக்காய்,  கற்பத்தின் கனிக்காய்,  வேலை வாய்ப்புகளுக்காக,  பலவிதமான ஆசீர்வாதங்களுக்காய் காத்திருக்கிறவர்கள் உண்டு. வியாதிகளிலிருந்தும்,  வாழ்க்கையில் காணப்படுகிற பலவிதமான பிரச்சினைகளிலிருந்து விடிவுக்காய் காத்திருக்கிறவர்களும் திரளாய் காணப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தருடைய ஜனங்கள்,  கர்த்தருடைய விடுதலைக்காக,  அற்புதத்திற்காக,  அவருடைய இரட்சிப்பிற்காக நம்பிக்கையோடு காத்திருக்கவேண்டும் என்று மேற்குறிப்பிட்ட வசனம் குறிப்பிடுகிறது. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களுக்கு அவர் செய்பவைகளை  உலகத்தோற்றம்முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை,  செவியால் உணர்ந்ததுமில்லை,  அவைகளைக் கண்டதுமில்லை. கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன், அவர் என்னிடமாய்ச் சாய்ந்து,  என் கூப்பிடுதலைக் கேட்டார் என்றான் சங்கீதக்காரன். இந்த நாட்களில் பொறுமையோடு நாம் காத்திருக்கும் போது,  கர்த்தர் நம்முடைய கூப்பிடுதலின் சத்தத்தைக் கேட்டு,  தேசங்களின் சூழ்நிலைகளை மாற்றுவார்,  கொள்ளை நோய்கள் மாறும்,  விடியல் உண்டாகும். இக்காலத்தின் பாடுகள் இனி வரும் மகிமைக்கு ஒப்பானதல்ல. ஆகையால் கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருங்கள்.

காத்திருப்பது என்பது பொறுமையாயிருப்பதையும் குறிக்கிறது.  இதோ,  பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள், கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுள்ளவராயிருக்கிறாரே என்று யாக். 5:11-ல் எழுதப்பட்டிருக்கிறது. யோபுவின் வாழ்க்கையில் பல இழப்புகளும்,  நஷ்டங்களும் வந்தது. அவன் மனைவி தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் படிக்குக் கூறினாள். நண்பர்கள் யோபின் உத்தமத்தைக் குறித்து சந்தேகம் கொண்டு கேள்வி கேட்டார்கள். ஆனால் யோபு பொறுமையாய் கர்த்தருடைய இரட்சிப்பிற்காய் காத்திருந்தான். அவன் முறுமுறுக்கவில்லை. ஏன் ஆண்டவரே என்று கேள்விகள் கேட்கவில்லை. கர்த்தர் கொடுத்தார்,  கர்த்தர் எடுத்தார் என்று அறிக்கையிட்டான். அதின் நிமித்தம் அவன் இழந்து போன எல்லாவற்றையும் கர்த்தர் இரட்டிப்பாய் அவனுக்குக் கொடுத்து அவனை மகிழப்பண்ணினார்,  பூரண வயதுள்ளவனாய் மரிக்கும்படிக்குச் செய்தார். கர்த்தருடைய பிள்ளைகளே,  நீங்களும் கடினமான சூழ்நிலைகளிலும்,  கர்த்தரை உண்மையையாய் பின்பற்றும் போது,  கர்த்தருடைய இரட்சிப்பிற்காக  பொறுமையோடு காத்திருக்கும் போது,  கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். 

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து,  கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள்,  நடந்தாலும் சோர்ந்துபோகார்கள என்று ஏசா. 40:31 கூறுகிறது, காத்திருப்பின் நாட்கள்,  நம்முடைய பெலனைப் புதுப்பிக்கிற நாட்களாய் காணட்டும்,  கர்த்தரில் பலப்படுகிற நாட்களாய் காணட்டும். வேதத்தை வாசிப்பதிலும்,  தியானிப்பதிலும்,  ஜெபிப்பதிலும் நேரத்தைச் செலவுசெய்யுங்கள். அப்போது கர்த்தருடைய பெலன் உங்களை நிரப்பும். உன்னதத்தின் பெலனால் கர்த்தர் உங்களை இடைகட்டுவார்.  நிச்சயமாக முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது என்று வாக்களித்தவர், உங்களைத் துரிதமாய் விடுவித்து மகிழப்பண்ணுவார். விழுந்து போன தாவீதின் கூடாரத்தைத் திரும்ப எடுத்து கட்டுவேன் என்று வாக்களித்தவர்,  உங்கள் ஒவ்வொருவரையும் எடுத்துக் கட்டுவார்,  விடுதலையைக் கொடுத்து இரட்சிப்பார்,  உங்களை மகிழப்பண்ணுவார், கண்மணிப் போல காத்தருள்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org