பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்:-

யோவா 2:14-16: தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, புறா விற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.

இயேசு ஒருநாள் தேவாலத்திற்குள் சென்றபோது அங்கே ஒரு பெரிய சந்தை உள்ளே காணப்பட்டதை பார்த்தார். இப்பொழுது இருக்கும் வணிக சந்தை இல்லை பங்கு சந்தை போல வணிகர்கள் உள்ளே காணப்பட்டார்கள். நல்ல ஊழியர்கள் காணப்படுவதை பார்க்கிலும் தொழில் செய்பவர்கள் சபைக்குள் இருந்தார்கள். இதை பார்த்த இயேசு அநேக கயிறுகளை ஒவ்வொன்றாக சேர்த்து சவுக்கை உண்டுபண்ணிக்கொண்டிருந்தார். இங்கும் அங்குமாக இருக்கும் கயிறுகளை சேர்த்து சவுக்கை உண்டு பண்ண இயேசுவுக்கு சில மணி நேரங்கள் ஆகியிருக்க கூடும். இயேசு என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று சீஷர்களும் பார்த்துக்கொண்டே இருந்திருப்பார்கள். எல்லாரும் எதிர் பாராத வண்ணம் இயேசு சவுக்கை உண்டு பண்ணி எல்லாரையும் தனி ஒருவராக தேவாலயத்தை விட்டு துரத்தினார். அங்கே இருக்கும் எல்லாவற்றையும் கவிழ்த்துப்போட்டார். தேவாலயம் தொழிற்கூடமாக மாறுவதை பார்த்தபோது மிகுந்த கோபம் கொண்டவராக காணப்பட்டார்.

இன்று அநேக இடங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் காணப்படுவதை நாம் பார்க்கிறோம். பிதாவின் வீடு ஜெப வீடு என்று நினையாமல், அவர்கள் கள்ளர் குகையாகவும், அரசியல் செய்பவர்களாகவும், ஏலம் விடுபவர்களாகவும் காணப்படுவதுண்டு. இப்படிப்பட்ட சபைக்கு எச்சரிக்கையாயிருங்கள். இன்று இருக்கும் சபை இயேசு தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி சம்பாதித்த சபை. இதை ஒருபோதும் தொழில் கூடமாக, வணிக ஸ்தலமாக மாறுவதற்கு தேவ ஜனங்கள் இடம் கொடாதிருங்கள். தொழில் செய்வதற்கும், வணிகம் செய்வதற்கும் அநேக இடங்கள் உலகத்தில் காணப்படுகிறது. சபையில் இப்படிப்பட்ட துணிச்சலான காரியங்களை செய்ய இணங்கிவிடலாகாது. சபை தேவன் உலாவுகிற இடம். பயபக்தியோடு அவரை தொழுதுகொள்ள வேண்டும் என்று வசனம் சொல்லுகிறது. பயத்துடன் நடுக்கத்துடன் அவரை சேவிக்கவேண்டும். நான் கர்த்தாரென்றால் எனக்கு பயப்படும் பயம் எங்கே என்று கர்த்தர் கேக்கிறவராக காணப்படுகிறார்.

பிதாவின் வீடு இந்த பூலோகத்தில் மேன்மையான வீடு, உன்னத வீடு, பல ஊழியர்களை அப்போஸ்தர்களை எழுப்புகிற வீடு, அந்த வீட்டை பாழ்படுத்த நினைக்கும் யாராக இருந்தாலும் அதற்கு உடந்தையாக செல்லாதிருங்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இயேசு உண்டாக்கின சவுக்கே அவர்களுக்கு பதிலாக மாறும்.

மாறாக பிதாவின் வீட்டை பாதுகாக்கிறவர்களாக, அழகு படுத்துபவர்களாக, வேண்டிய நற்காரியங்களை செய்பவர்களாக நீங்கள் இருப்பீர்களென்றால் அதற்கான பலனை நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் பெற்றுகொள்ளுவீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org