…நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது! (யாக்கோபு 3:5)
கர்த்தருடைய பிள்ளைகள் நாவைப் நன்மைக்கேதுவானவைகளைப் பேசப் பழக்குவிக்கவேண்டும். இயேசுவைப் போலக் கிருபை பொருந்தின, உப்பால் சாரமேறின வார்த்தைகளைப் பேச பழக்குவிக்கவேண்டும். ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். வாயின் பலனால் வயிறுகூட நிரம்பும். மருத்துவர்கள் நாவைச் சோதித்து சரீர பலவீனங்களை அறிந்துகொள்ளுவதைப் போல, நம்முடைய நாவின் வார்த்தைகள் நாம் எப்படிப் பட்டவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
கர்த்தருடைய பிள்ளைகள் நாவை அடக்கவும் கற்றுக் கொள்ளவேண்டும். நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது@ அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது என்று வேதம் கூறுகிறது. குதிரைகளைப் பழக்குவிப்பது கடினம், ஆனால் அவைகளின் வாயில் கடிவாளத்தைப் போட்டால், அதன் முழுச்சரீரமும் அடங்கிவிடும். கப்பல்கள் காற்று அடிக்கும் திசைகளில் செல்லுபவை. ஆனால் மாலுமிகள் சிறிய சுக்கானை வைத்து, பெரிய கப்பல்களைத் திருப்பி, செல்லவேண்டிய துறைமுகங்களுக்குக் கடந்துசெல்கிறார்கள். நம்முடைய நாவுகளும் கூட, குதிரைகளைப் போல எளிதாய் அடங்குவதில்லை, கப்பல்களைப் போல விருப்பம் போல வார்த்தைகளைப் பேச விரும்பும். ஆனால் கர்த்தருக்குள், அவருடைய வார்த்தைகளுக்குள் நாம் பழக்குவிக்கும் போது, அடங்கி, மிகுந்த பலனைக் கொண்டுவரும்.
நாவை அடக்கி, ஆளுகைச் செய்யவில்லையென்றால், நாவு முழுச் சரீரத்தையும் கறைப்படுத்தி, நம்முடைய ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடும். ஆகையால் தான் நாவை நெருப்புக்கு ஒப்பாக வேதம் கூறுகிறது. நாவு எப்பொழுதும் பெருமையானவற்றைப் பேசும், ஆனால் கர்த்தர் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். அவர் நமக்கு எதிராய் நின்றால், நாம் ஆசீர்வாதமாய் காணப்படமுடியாது. நாவு பொல்லாங்கானதும், சாவுக்கேதுவான விஷம் நிறைந்தது என்றும் வேதம் எச்சரிக்கிறது, சரியாய் பழக்குவிக்கவில்லையென்றால் கொடிய விஷத்தைப் போல அழிவைக் கொண்டுவந்துவிடும். நாவைப் பயன்படுத்தி பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம், அவர் சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனைச் சபிக்கிறோம், சுவையும், கசப்பும் ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து வெளிப்படுவதில்லையே. ஆகையால் நாவைச் சரியாய் பழக்குவிக்க கர்த்தருடைய ஜனங்கள் பிரயாசப்படவேண்டும்.
நாவைச் சரியாய் பழக்குவிப்பதற்கு நாம் செய்யவேண்டியதென்ன? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் (மத். 12:34) என்று வேதம் கூறுகிறது. ஆகையால் இருதயம் கர்த்தருடைய வார்த்தையினால் நிறைந்ததாய் காணப்படவேண்டும், இருதயம் ஆட்டுக்குட்டியானவருடைய ரத்தத்தினால் கழுவப்பட்டதாகவும், கர்த்தருடைய ஆலயமாகவும் காணப்படவேண்டும். மனுஷன் பேசுகிற வார்த்தைகளுக்குக் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்றும் வேதம் கூறுகிறது. ஆகையால் தான் அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக என்றும் வேதம் எச்சரிக்கிறது. ஆகையால் தேவபயத்தோடு, என்னத்தை பேசுகிறோம் என்ற உணர்வோடு நாம் பேசப் பழகவேண்டும். உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள், உங்கள் நாவை நீதியின் ஆயுதமாய் பழக்குவியுங்கள், கர்த்தரைத் துதித்து, ஆராதித்து, அவருடைய மகத்துவங்களைக் குறித்துப் பேசப் பழக்குவிக்கும் போது, அதுவே உங்களுக்கு ஜீவனாகவும், நன்மையாகவும் மாறும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

