அன்புகூருகிற கடன்.

ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல்,மற்றென்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்@ பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான் (ரோமர் 13:8).

கடன் என்று கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஒன்று காணப்படுகிறது என்றால் அது அன்பு கூருகிற கடனாக மாத்திரம் காணப்படவேண்டும். உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே என்று கர்த்தராகிய ஆண்டவர் கூறியிருந்தாலும், கடனைத் திரும்பத் திரும்ப வாங்குவதையே நம்முடைய பழக்கமாய் மாற்றிவிடக் கூடாது. கடன் வாங்கவே கூடாது என்று கர்த்தருடைய வார்த்தைக் கூறவில்லையென்றாலும், கடன் வாங்குவதையும் கர்த்தருடைய வார்த்தை ஊக்குவிக்கவில்லை என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை (உபா.15:6) என்றும், கல்வாரிச் சிலுவையில் இயேசு தரித்திரராய் தொங்கினதின் காரணம், அவருடைய தரித்திரத்தால் நம்மை ஐசுவரியவான்களாய் மாற்றுவதற்கு என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து,அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக என்று கர்த்தருடைய பிரமாணம் நமக்கு கற்றுக்கொடுப்பதின் நோக்கம் எளியவர்களுக்கும், விதவைகளுக்கும், திக்கற்ற பிள்ளைகளுக்கும் அவர்களுடைய அவசரங்களில் உதவிசெய்ய வேண்டும் என்பதற்காய் மாத்திரம் காணப்படுகிறது. அதையே வசதி படைத்தவர்களும், வேலை செய்கிறவர்களும் தங்களுடைய தவறான பயன்பாட்டிற்கு காரணமாக்கிவிடக் கூடாது. 

கடன்வாங்கினவன் கடன்கொடுத்தவனுக்கு அடிமை என்று நீதி. 22:7ல் எழுதப்பட்டிருக்கிறது. தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து, உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான், உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர், கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் (2இராஜா.4:1) என்று வேதனையோடு கூறுவதிலிருந்து கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை என்பதை அறிந்துகொள்ள முடியும். நம்முடைய தேசங்களிலும் அதிக கடன்களை வாங்கி, அதனிமித்தம் கொத்தடிமைகளாய் மாறின குடும்பங்கள் உண்டு. கடன் வாங்கி வட்டி கட்டக் கூடாதினால் தற்கொலைகள் செய்து கொண்ட திரளான ஜனங்களும் உண்டு.  பிசாசு ஜனங்களை அடிமைப்படுத்துகிறவன், அனேகரை கடன் என்ற நுகத்தினால் அடிமைப் படுத்தி வைத்திருக்கிறான். தேவனுடைய ஜனங்கள் அடிமைத்தன நுகத்திற்கு உட்பட்டவர்களாக அல்ல, விடுதலையோடு காணப்படவேண்டும் என்பது கர்த்தருடைய சித்தமாகவும், விருப்பமாகவும் காணப்படுகிறது.  ஊழியர்கள் கடன்களை வாங்கி சபைக்கு நிலம் வாங்குவதும், சபைகளைக் கட்டுவதும் தேவசித்தமல்ல, அதுபோல ஒருநாளும் உங்கள் விசுவாசிகளிடத்தில் கடன்களை வாங்கி அடிமைகளாகிவிடாதிருங்கள். அனேக விசுவாசிகளும் கூட கடன்களை வாங்குவதையும், அதை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவதையும், திருப்பிக் கேட்கும் போது சபைகளுக்கு வருவதை நிறுத்துவதையும் பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் சபையென்னும்  அழகிய திராட்சைத் தோட்டத்தைக் கெடுக்கிற பாத்திரங்களாக காணப்படுகிறார்கள்.  

கர்த்தருடைய பிள்ளைகள் தங்களுடைய வருமானங்களில் ஜீவிக்க பழகிக் கொள்ளுங்கள். வங்கிக் கடன்களினாலும் (loan, கடன் அட்டைகளினாலும் (credit card) உங்களைப் பாரப்படுத்திக் கொள்ளாதிருங்கள்.  பூமியில் கடனை வைத்துக்கொண்டு, மற்றவர்களுக்குரியதைத் திருப்பிச் செலுத்தாதபடிக்கு, கர்த்தருடைய வருகையில்கூட பரலோகத்திற்குச் செல்ல முடியாது. ஆகையால் மற்றவர்களிடத்தில் அன்பு கூறுகிற கடனேயன்றி வேறொன்றிலும் ஒருபோதும் கடன்படாதிருங்கள். அன்பு கூறுகிற கடன் ஒன்று மாத்திரம் நம்முடைய வாழ்க்கையின் கடைசிவரைக்கும் கடனாகவே இருக்கட்டும். அப்படிப்பட்ட தேவனுக்கு உகந்த ஜீவியம் செய்ய கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org