ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்படியாதவனாயிருக்கவில்லை (அப். 26:19).
அப்போஸ்தலனாகிய பவுல், கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தும் படிக்கு ஆசாரியர்களிடத்திலிருந்து கடிதங்களைப் பெற்றுக்கொண்டு தமஸ்குவுக்கு போகிற வழியில் தான் இயேசுவைக் கண்ட தரிசனத்தை (அப்.9), முதலாவது தன்னுடைய சொந்த சகோதரர்களாகிய யூதர்களுக்கு முன்பாகவும் (அப்.22), அதன்பின்பு ரோமர்களால் நியமிக்கப்பட்ட ஏரோதுவின் வரிசையில் வந்த அகிரிப்பா ராஜாவுக்கு முன்பாகவும் அறிக்கையிட்டார். ஆண்டவருடைய பரம தரிசனத்திற்குக் கீழ்ப்படிந்தமையால் எருசலேமையும், அந்தியோகியாவை மையமாக வைத்து ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் கர்த்தரைக் குறித்து சுமார் இருபது வருஷங்களுக்கு மேலாக பலமாக சாட்சி பகிர்ந்தார். தமஸ்குவிலும், எருசலேமிலும், யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதி யாரிடத்திலும் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தார். பல பாடுகளையும் உபத்திரவங்களையும் ஊழியத்தின் பாதைகளில் சகித்தாலும், கர்த்தருடைய தரிசனம் அவரை முன்னேறிச் செல்லுவதற்கு ஒரு உந்து விசையாகக் காணப்பட்டது. ஆகையால் தான் பவுலின் வார்த்தைகளைக் கேட்ட அகிரிப்பா ராஜா பவுலை நோக்கி, நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறாய் என்ற வேளையில், பவுல், நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றார். ஆத்துமாக்களின் இரட்சிப்பு அவருடைய வாஞ்சையாகக் காணப்பட்டது. பவுல், அதின் பின்பு கர்த்தரிடமிருந்து பல தரிசனங்களைக் கண்டாலும் இதைப் பரம தரிசனமாகக் கண்டு, சுவிஷேசத்தை அறிவிப்பது தன்மேல் விழுந்த கடமை என்று உணர்ந்து கர்த்தருக்காக வைராக்கியமாகச் செயல்பட்டார்.
உசியா ராஜா மரணமடைந்த பின்பு ஏசாயா கர்த்தருடைய ஆலயத்திற்கு நேராகக் கடந்து சென்றார். அங்கு இயேசுவைத் தரிசனமாகக் கண்டார், அவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தார், அவருடைய வஸ்திரத் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. அதோடு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தையும் கேட்டான்;. அதற்கு அடியேன் இருக்கிறேன்@ என்னை அனுப்பும் என்று தன்னை அர்ப்பணம் செய்தான். அந்த தரிசனம் அவனைக் கர்த்தருக்காக செயல்படும் படிக்குச் செய்தது. மேசியாவைக் குறித்தும், அவருடைய ஊழியத்தைக் குறித்தும், பாடு மரணத்தைக் குறித்தும், பல ராஜாக்களைக் குறித்தும் அனேக காரியங்களைத் தீர்க்கதரிசன கண்களில் கண்டு கூறினான். பூமியின் எல்லை எங்கும் உள்ளவர்களே, கர்த்தரை நோக்கிப் பாருங்கள் அப்போது இரட்சிக்கப்படுவீர்கள் என்று ஜனங்களுடைய இருதயத்தைக் கர்த்தருக்கு நேராகத் திருப்புகிற பாத்திரமாகவும் காணப்பட்டார். அதுபோல கர்த்தர் மோசேக்கு முட்செடியில் தரிசனமாகி எகிப்தில் அடிமைகளாய் காணப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களை மீட்கும் படிக்குச் செய்தார்.
கர்த்தருடைய பிள்ளைகளே! நம்மெல்லாருக்கும் கர்த்தர் ஒரு தரிசனத்தைக் கொடுத்திருக்கிறார். ஆத்தும ஆதாயப்பணி என்பது கர்த்தருடைய பிள்ளைகள் அத்தனை பேருக்கும் கர்த்தர் கொடுத்த தரிசனமாகக் காணப்படுகிறது. மந்தையில் சேராததும், மேய்ப்பனில்லாததுமான திரளான ஆடுகள் உண்டு என்பதையறிந்து, ஆத்தும ஆதாயப் பணிக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார். சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, சிலரை பயத்தோடே இரட்சிக்க நாம் அத்தனை பேரும்; செயல்படவேண்டும் என்பது கர்த்தர் உங்களைக் குறித்துக் கொண்ட நோக்கமாய் காணப்படுகிறது. அதுவே நம்முடைய தரிசனமாகக் காணட்டும். அறுப்புக்கு எஜமான் தேடுகிற வேலையாட்களாக நீங்கள் காணப்படக் கர்த்தர் உங்களுக்குஅருள்செய்வாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

