கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள் (சங். 92:13).
ஓய்வு நாளின் பாட்டாகிய சங்கீதம் என்று 92-வது சங்கீதத்திற்குத் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆறு நாட்களும் வேலைச் செய்து, ஒரு நாளைக் கர்த்தரைத் தேடுவதற்கும், அவரை ஆராதிப்பதற்கும், ஆலயத்திற்குக் கடந்து செல்லுவதற்கும் ஓய்வு நாளாக நாம் கைக்கொள்ளவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்(ஆதி. 2:2). ஓய்வு நாளில் ஜெப ஆலயத்திற்குக் கடந்து செல்லுவதை இயேசுவும் வழக்கமாக வைத்திருந்தார் (லூக்கா 4:16). நாமும் சபை கூடிவருதலை விட்டுவிடக்கூடாது என்று வேதம் எச்சரிக்கிறது. நாம் ஓய்வுநாளைக் கனம் பண்ணி கருத்தாய் கைக்கொள்ளும் போது கர்த்தர் நம்மைச் செழித்திருக்கச் செய்வார்.
கர்த்தருடைய ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்களாய், நிலைத்திருக்கிறவர்களாய் நாம் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நீங்கள் கர்த்தருடைய வசனத்திற்கும், பரிசுத்த ஆவியின் வல்லமைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிற சபையைக் கண்டுபிடித்து, அங்கே நிலைத்திருந்து, கனிகொடுத்து வளரவேண்டும். சிறிய காரியங்களுக்காய் கூட சபைகளை விட்டு ஒடி நிலையற்றுத்திரிகிற ஆத்துமாக்களைக் கடைசி நாட்களில் பார்க்கிறோம். பிசாசு பூமியெங்கும் நிலையற்று அலைந்துதிரிவது போல, அவனுடையவர்களே அலைந்து திரிவார்கள். ஆகையால் கர்த்தருடைய ஜனங்கள் அவர் உங்களை நட்டிருக்கிற இடத்தில் நிலைத்திருந்து கனிகொடுங்கள். அப்படிப்பட்டவர்கள், தேவனுடைய பிரகாரங்களில் செழித்திருப்பார்கள். ஆசரிப்புக் கூடாரத்தில் பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் என்று மூன்று பகுதிகள் உண்டு. பரிசுத்த ஸ்தலமும், மகா பரிசுத்த ஸ்தலமும் திரைச்சீலைகளால் மூடப்பட்டிருக்கும். பிரகாரம் மட்டும் திறந்த பகுதியாக, எல்லாரும் பார்க்கக்கூடிய பகுதியாய் காணப்படும். நாம் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நாட்டப்பட்டவர்களாய் காணப்படும் போது, பிரகாரங்களில் எல்லாருடைய கண்களும் காணக் கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார். கர்த்தருடைய பெட்டி ஓபேத்ஏதோதின் வீட்டில் டிலே மூன்று மாதங்கள் காணப்பட்ட வேளையில், கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார். அவன் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டதை அந்த தேசத்தின் குடிகளும், ராஜாவின் கண்களும் காணும்படிக்குக் கர்த்தர் செய்தார்.
கர்த்தருடைய ஆலயம் நாம் கர்த்தருடைய வழிகளைக் கற்றுக்கொள்ளுகிற பள்ளிக்கூடமாய் காணப்படுகிறது. கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். (ஏசாயா 2:2-3). சரீர சுகத்தைப் பெற்றுக்கொள்ளுகிற மருத்துவ சாலையும் கர்த்தருடைய ஆலயமே, அன்னாளும், பதினெட்டு வருஷமாய் கூனியாய் காணப்பட்டவளும் அற்புதத்தையும், விடுதலையையும் பெற்றுக்கொண்ட இடம் கர்த்தருடைய ஆலயமாய் காணப்படுகிறது. கர்த்தர் நம்மை ஆலயத்தின் சகல நன்மைகளினாலும், சம்பூரணத்தினாலும் ஆசீர்வதிக்கும் போது,நீங்கள் உலகப் பிரகாரமாக எல்லா விதங்களிலும் செழித்திருப்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar

