கர்த்தரின் ஆலயத்தைக் கட்டுங்கள்:-

I நாளாகமம் 22 : 11. இப்போதும் என் குமாரனே, நீ பாக்கியவானாயிருந்து, கர்த்தர் உன்னைக் குறித்துச் சொன்னபடியே உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனேகூட இருப்பாராக.

தாவீது தன்னுடைய குமாரனுக்கு உபதேசித்த வார்த்தை தான் மேல்சொன்ன வசனம். தாவீதுக்கு, கர்த்தருக்கு ஆலயத்தை கட்டவேண்டுமென்ற ஆவல் இருந்தபோதிலும் கர்த்தர் உன்னுடைய மகன் சாலொமோன் எனக்கு ஆலயத்தை கட்ட வேண்டும்; நீ அல்ல என்று கூறிவிட்டார். பின்னும் தாவீது கவனமாக செய்த காரியங்கள் என்ன?

முதலாவது, தன்னுடைய குமாரனிடம் கர்த்தருக்கு ஆலயத்தை கட்டவேண்டுமென்ற தரிசனத்தை பகிர்ந்துகொண்டான். அதோடு நின்றுவிடவில்லை.

இரண்டாவது, தாவீது ஆலயத்துக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் சவதரித்து வைத்தான். மட்டுமல்ல, தன் குமாரனிடம் இதை காட்டிலும் நீ அதிகமாய் சவதரிப்பாய் என்றும் நீ எழும்பி காரியத்தை நடப்பி என்றும் உற்சாகமூட்டினான்.

மூன்றாவது, தன் குமாரனாகிய சாலொமோனுக்கு உதவி செய்ய இஸ்ரவேலின் பிரபுக்கள் மற்றும் சபையார் எல்லாருக்கும் கட்டளையிட்டான்.

நான்காவது, தாவீது சொன்ன ஆச்சரியமான காரியம் இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன் (1 நாளா 29 : 3 ) என்பதாக சொன்னான்.

ஐந்தாவதாக, தாவீது மிகவும் விலாவரியாக ஆலயத்து பணிகளில் யார் யார் ஈடுபட வேண்டும், எப்படி கட்ட வேண்டும் என்று தெளிவாக சொல்லிக்கொடுக்கிறவனாக காணப்பட்டான்.

ஆறாவதாக , யார் கர்த்தருடைய ஆலயத்தை கட்ட மனப்பூர்வமாய் காணிக்கையை கொடுக்கிறீர்கள் என்று தாவீது கேட்டபோது, அநேகர் தங்கள் காணிக்கையை மனப்பூர்வமாய் கொடுத்தினால் தாவீது சொன்னான் என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன் ( 1 நாளா 29 : 17) என்பதாக.

இந்த கடைசி நாட்களில் ஆலயத்தை கட்ட வேண்டும் என்ற வாஞ்சை ஒவ்வொருவருக்கும் இருப்பது மாத்திரமல்ல, அடுத்த தலைமுறைகளுக்கும் அதன் முக்கியத்துவத்தை சொல்லித்தருகிறவர்களாக நாம் காணப்படவேண்டும். காரணம் ஒரு புள்ளி விவரம் இப்படியாக சொல்கிறது; ஒரு சில மாவட்டங்களை மாத்திரம் பார்க்கலாம். சிவகங்கை மாவட்டத்திலுள்ள 952 கிராமங்களில் மொத்தம் 95 – 150 சபைகள் தான் இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் 950 கிராமங்களில் மொத்தம் 300 சபைகள் தான் இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 843 கிராமங்களில் மொத்தம் 200 – 250 சபைகள் தான் இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 664 கிராமங்களில் மொத்தம் 300 சபைகள் தான் இருக்கிறது. இவை அனைத்தும் கத்தோலிக்க, பாரம்பரிய மற்றும் ஆவிக்குரிய சபைகளை உள்ளடக்கிய புள்ளிவிவரங்கள். இந்தியாவில் சபைகள் இல்லாத கிராமங்கள் ஏராளம். அநேக மலை பிரதேசங்களில் சபைகள் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் என்ன செய்யப்போகிறோம்.

தாவீது, சாலொமோனை போல ஆலயத்தை கட்டுங்கள், செயல்படுங்கள்; இஸ்ரவேல் ஜனங்களை போல ஆலயத்துக்கு தேவையான காணிக்கைகளை மனப்பூர்வமாய் கொடுங்கள். அப்பொழுது கோரேசுக்கு திறந்த வாசலை கொடுத்தவர் உங்களுக்கும் திறந்த வாசலை கொடுப்பார். ஆலயத்தின் நன்மையினால் நீங்கள் திருப்தியாவீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களயோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org