தாவீது ராஜா பர்சிலாவை நோக்கி, நீ என்னோடே கூடக் கடந்து வா, எருசலேமிலே உன்னை என்னிடத்தில் வைத்துப் பராமரிப்பேன் என்றான் (2 சாமு. 19:33).
கீலேயாத்தியனாகிய பர்சிலா மகாபெரிய ஐசுவரியவான். பர்சிலா என்ற பெயருக்கு இரும்பை போன்ற இருதயம் உடையவன் என்று அர்த்தம். அவன் தாவீது ராஜாவை உண்மையாய் சேவித்தான். தாவீது, அவன் குமாரனாகிய அப்சலோமினால் துரத்திவிடப் பட்ட வேளையில் மக்னாயிம் என்ற இடத்தில் தங்கியிருந்தான். அப்போது பர்சிலா அவனுக்கு மெத்தைகளையும், கலங்களையும், மண்பாண்டங்களையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயற்றையும், பெரும்பயற்றையும், சிறு பயற்றையும், வறுத்த சிறுபயற்றையும், தேனையும், வெண்ணெய்யையும், ஆடுகளையும், பாற்கட்டிகளையும், தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனங்களுக்கும் வனாந்தரத்திலே பசியும் இளைப்பும் தவனமுமாயிருந்த வேளையில் சாப்பிடுகிறதற்குக் கொண்டுவந்தான். தாவீது ராஜாவாக காணப்பட்ட வேளையில் மாத்திரமல்ல, அவன் துரத்திவிடப் பட்டு, ராஜமேன்மையை இழந்த வேளையிலும் கூட அவனுக்கு உண்மையுள்ளவனாயிருந்தான்.
அப்சலோம் மரணமடைந்த பின்பு, தாவீது மீண்டும் ராஜாவாக எருசலேமிற்கு திரும்பி வரும் வேளையில், பர்சிலா அவனை வழியனுப்பும் படிக்கு யோர்தான் மட்டும் வந்தான். தாவீது, பர்சிலாவை நோக்கி, நீ என்னோடே கூடக் கடந்து வா, எருசலேமிலே உன்னை என்னிடத்தில் வைத்துப் பராமரிப்பேன் என்றான். அந்த வேளையில் பர்சிலா ராஜாவைப் பார்த்து, நான் ராஜாவோடே எருசலேமுக்கு வர, நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்? என் குமாரனாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூட வருவான், உமது பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான். தாவீது மரணமடையும் வேளை வந்த போது கூட, அவன் தன் குமாரனாகிய சாலொமோனைப் பார்த்து, கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரருக்குத் தயைசெய்வாயாக, அவர்கள் உன் பந்தியிலே சாப்பிடுகிறவர்களுடன் இருப்பார்களாக, உன் சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் ஓடிப்போகையில், அவர்கள் என்னை ஆதரித்தார்கள் என்றான். தாவீது தனக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தவர்களைக் கடைசி மட்டும் ஆதரிக்கிறவனாகக் காணப்பட்டான்.
பரலோக தாவீதும், அவன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் கூட, அவரை உத்தமமாய், உண்மையாய், தடுமாறாமல் தொடர்ந்து பின்பற்றுகிறவர்களைக் கடைசி மட்டும் ஆதரிப்பார். அவர் தயவுள்ளவனுக்குத் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு உத்தமராகவும், புனிதனுக்குப் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு மாறுபடுகிறவராகவும் காணப்படுகிறவர். கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவரைத் தேடுவதில் இரும்பைப் போன்ற இருதயம் உடையவர்களாய் காணப்படுங்கள், அவரை உறுதியாய் பின்பற்றுங்கள். அநேக நேரங்களில் நம்முடைய பக்தி, காலையில் தோன்றுகிற பனியைப் போலக் காணப்படுகிறது, பனி, வெயில் அடித்த உடன் காணாமல் போவதைப் போல, நம்முடைய பக்தி காணாமல் போகிறது. ஆகையால், கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்க முடியவில்லை, ஆதரிக்க முடியவில்லை. உத்தமும், உண்மையும் உங்களைக் காக்கட்டும். உங்கள் மனச் சாட்சி உங்களைக் குற்றப்படுத்தாத ஜீவியத்தைச் செய்யுங்கள். பக்தியுள்ளவன் அற்றுப்போகிற, உண்மையுள்ளவர்கள் மனுப்புத்திரரில் குறைந்திருக்கிற காலகட்டத்தில் ஜீவிக்கிற கர்த்தருடைய ஜனம், உத்தமமாக அவரைச் சேவியுங்கள். அப்பொழுது உங்களையும், உங்கள் பிள்ளைகளையும் கர்த்தர் ஆதரிப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar

