தேவ தயவு.

நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக. முட்செடியில் எழுந்தருளினவரின் தயை யோசேப்புடைய சிரசின்மேலும்,     தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின் மேலும் வருவதாக (உபா. 33:16).

மோசே மரிக்கும் முன்பு,     இஸ்ரவேல் ஜனங்களை,     கோத்திரப் பிதாக்களின் நாமங்களின் படி ஆசீர்வதித்தார். யோசேப்பு கோத்திரத்தை ஆசீர்வதிக்கும் போது,     முட்செடியில் எழுந்தருளி,     தன்னோடு பேசி,     தன்னை நடத்தின தேவனின் தயை,     யோசேப்புடைய சிரசின் மேலும்,       அவன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின் மேலும் வரும் என்று கூறி ஆசீர்வதித்தார். மோசே கர்த்தருடைய தயவை நன்கு உணர்ந்தவன். ஒருமுறை,     இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்த வேளையில்,     ஆண்டவர் கூறினார்,     இனி நான் உங்களோடு வருவதில்லை,     ஒரு தூதனை அனுப்புவேன் என்று. அதற்கு மோசே,     உம்முடைய சமூகம் எங்களோடு வரவில்லை எனில் எங்களை இந்த இடத்திலிருந்து அனுப்ப வேண்டாம்,     உம்முடைய சமூகம் இல்லாத கானானை விட,     உம்முடைய பிரசன்னத்தோடு காணப்படுகிற வனாந்தரமே மேல் என்று ஆண்டவரிடம் கூறினான். அதற்குக் கர்த்தர் என் தயையையெல்லாம் உனக்கு முன்பு கடந்து போகச் செய்வேன் என்று வாக்களித்தார். அந்த தயையின் நிமித்தம்,     இஸ்ரவேல் ஜனங்களை நாற்பது வருஷம்  வனாந்தரத்தில்  நடத்தவும்,     அவர்களைக் கானானின் எல்லை மட்டும் நடத்துவதற்கும் உதவிசெய்தது. தான் பெற்ற அதே தேவ தயவு யோசேப்பிற்கும் அவன் சந்ததிக்கும் கிடைக்குப்படிக்கு வேண்டி,     அவர்களை ஆசீர்வதித்தான். ஆகையால் யோசேப்புடைய குமாரர்களாகிய எப்ராயிம்,     மனாசே என்பவர்களுடைய சந்ததி பலத்ததாயும்,     அவர்களுடைய காணியாட்சி இஸ்ரவேலில் செழித்தும் காணப்பட்டது. தயவு என்பது,     மற்ற பதினொரு சகோதரர்கள் நடுவில் யோசேப்பின் தலை உயர்த்தப்பட்டது,     அதுபோல எட்டு சகோதரர்கள் நடுவில்,     தாவீது  ராஜாவாக  தெரிந்தெடுக்கப்பட்டான்,     அது தான் தேவ தயவாகக் காணப்படுகிறது.

கர்த்தருடைய பிள்ளளைகளே,     ஒரு வருடத்தின் கடைசி நாட்களில் வந்திருக்கிறோம். தேவனுடைய தயவு இம்மட்டுமாக உங்களை நடத்தினது. ஒருநாள் கர்த்தருடைய தயவை உணர்ந்த யாக்கோபு,     அடியேனுக்குத் தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல,     நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன், இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன் (ஆதி.32:10) என்று நன்றியோடு கூறினான். அதுபோல உங்களுடைய வாழ்க்கையில் நன்மை செய்த தேவனை நன்றியோடு நினைவு கூறுங்கள். நம்முடைய வேலைகள் கர்த்தருடைய தயவாகக் காணப்படுகிறது,     நல்ல குடும்ப வாழ்க்கை அவருடைய தயவு,     நம்மிடம் காணப்படுகிற அத்தனைக் காரியங்களும் கர்த்தருடைய தயவினால் வந்தது. ஒன்றும் நம்முடைய கைப்பெலனும்,     படிப்பும்,     சாமர்த்தியமும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

தேவ தயவு உங்கள் வாழ்க்கையில் வெளிப்படும் போது,     அது மனுஷ தயவு கிடைக்குப்படிக்குச் செய்யும். அந்த தயவு மற்றவர்கள் நடுவில் உங்கள் தலையை உயர்த்தும். தயவும்,     கிருபையும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய வார்த்தைகள். இயேசுவானவர் ஞானத்திலும்,     வளர்த்தியிலும்,     தேவகிருபையிலும்,     மனுஷர் தயவிலும் அதிக மதிகமாய் விருத்தியடைந்தார் என்று லூக். 2:52ல் எழுதப்பட்டிருக்கிறது. அந்த கிருபையும்,     தயவும் உங்கள் வாழ்க்கையிலும் வெளிப்படும். இனி வருகிற நாட்களில் கர்த்தருடைய தயவு உங்களை நடத்தும்,     உங்கள் வாழ்க்கையில்   நன்மையான ஈவுகளைக் கொண்டு வரும். தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி,     கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது. உத்தமமாய்,     உண்மையாய் ஜீவித்து,     அவரைச் சேவியுங்கள். அப்போது கர்த்தருடைய தயவு உங்களுடைய சிரசின் மேலும்,     உங்கள் சந்ததிகள் சிரசின் மேலும் இறங்கும். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar