ஆபிரகாமின் ஆசையும் களிகூறுதலும்:-

யோவா 8:56. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.

ஆபிரகாமுக்கும் ஆண்டவருக்கும் உள்ள உறவு மிகவும் உன்னதமானது மேன்மையானது. ஒரு சிநேகிதனை போல ஆண்டவர் ஆபிரகாமுடன் இருந்தார். பொதுவாக நண்பர்களுடன் அநேக இரகசியங்களை பகிர்ந்துகொள்வதுண்டு. அதுபோல தான் ஆண்டவரும் ஆபிரகாமுக்கு எதையும் மறைக்கவில்லை. நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? (ஆதி 18:18) என்று கர்த்தர் சொல்லுகிறார். சோதோம் கொமோரா பட்டணங்கள் அழிக்கிப்படுவது போன்ற காரியங்களை கர்த்தர் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தியிருந்தாலும் எல்லாவற்றிலும் மேன்மையான வெளிப்பாடு ஒன்றை ஆபிரகாம் பெற்றுக்கொண்டான்.

ஆபிரகாமுக்கு ஆண்டவர் ஒரு வாக்குத்தத்ததை கொடுத்திருந்தார். ஆண்டவர் ஆபிரகாமை வெளியே அழைத்து வானத்திலிருக்கும் நட்சத்திரங்களையெல்லாம் எண்ணக்கூடுமானால் எண்ணு என்றார். கணக்கிலடங்காத நட்சத்திரங்கள் வானத்திலிருந்ததை ஆபிரகாம் பார்த்தான். கணக்கிலடங்காத இந்த வானத்து நட்சத்திரங்களை போல உன் சந்ததியை பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் ஆபிரகாமிடம் சொன்னார். ஆபிரகாம் வானதிலிருக்கும் நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தார். ஒன்றன் பின் ஒன்றாக எண்ணிக்கொண்டே வந்தார். ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக எல்லா நட்சத்திரங்களையும் பார்த்தார். அந்த நட்சத்திரங்கள் தான் நீங்கள். அப்படியாக அவனுடைய சந்ததியாகிய நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டே வந்தபோது ஒரே ஒரு நட்சத்திரம் மிகவும் பிரகாசமாக இருப்பதை பார்த்தான். ஒருவேளை ஆபிரகாம் வியந்திரக்க கூடும் இவ்வளவு கோடான கோடி நட்சத்திரங்கள் வானதிலிருக்கும் போது ஒரே ஒரு நட்சத்திரம் இவ்வளவு அழகாக ஜொலிக்கிறதே என்று பார்த்திருக்க கூடும். ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும் (எண் 24:17) என்று வசனம் சொல்லுகிறது. இரண்டு நட்சத்திரங்கள் என்றோ பல நட்சத்திரங்கள் என்று சொல்லவில்லை. மாறாக ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும் என்று வசனம் சொல்லுகிறது. அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தை தான் சாஸ்திரிகள் பார்க்கும்படி வந்தார்கள். அந்த நட்சத்திரம் விடிவெள்ளி நட்சத்திரமாகிய கிறிஸ்து இயேசுவாய் காணப்படுகிறார். இந்த உன்னதமான வெளிப்பாட்டை இயேசு தன் சந்ததியில் வரப்போவதை கண்டு ஆபிரகாம் ஆசைப்பட்டு களிகூர்ந்தான். அந்தப்படியே ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்து (மத் 1:1) இந்த உலகத்தில் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக பிறந்தார்.

மாத்திரமல்ல, ஈசாக்கை பலியிட சென்றபோது ஆட்டுக்குட்டியை ஆபிரகாம் பலியிடும்படி கர்த்தர் காட்டினார். தன்னுடைய சந்ததியில் வரப்போகும் இயேசு உலகத்தின் ஜனங்களை மீட்டெடுக்க அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியாக கொண்டுபோகப்படுவார் என்பதையும் ஆபிரகாம் கண்டு ஆசையோடு களிகூர்ந்தான். இயேசுவே சொல்லுகிறார் ஆபிரகாம் இந்த நாளை கண்டு களிகூர்ந்தான். இருந்தாலும் ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (யோவா 8:58) என்று இயேசு சொன்னார். அதே ஆசையும் களிகூறுதலும் உங்களுக்கும் இருக்கட்டும். காரணம் உங்களை மீட்டெடுக்கும்படி இயேசு பிறந்தார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org