கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளுங்கள்.

நீங்களோ இவ்விதமாய்க்  கிறிஸ்துவைக்  கற்றுக்கொள்ளவில்லை.  இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே,    நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து,    அவரால் போதிக்கப்பட்டீர்களே (எபே. 4:20,21).

கர்த்தருடைய வருகையின் நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற கர்த்தருடைய ஜனங்கள்,    அதிகமாக கிறிஸ்துவைக் கற்றுக் கொள்ள வேண்டும்.  கிறிஸ்துவைப் பற்றிக் கற்றுக் கொள்ளுவது வேறு,    கிறிஸ்துவைக் கற்றுக் கொள்ளுவது வேறு. 

கிறிஸ்துவைப் பற்றிக் கற்றுக் கொள்ளுவது,    அவரைப்பற்றிய  தலைமட்ட அறிவைத் தரும். பல உலகத் தலைவர்கள் கூட கிறிஸ்துவைப் பற்றி,     அவருடைய உபதேசங்களைப் பற்றி அதிகமாய் அறிந்து வைத்திருக்கிறார்கள். மனிதக் குலத்தின் சிறந்த போதகர் இயேசு கிறிஸ்து என்று மகாத்மா காந்தி அவர்கள் கூறினார்கள். இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்றும்,    தேவன் மனிதனாய் அவதரித்தார் என்றும்,    அவர் ஆராதிக்கப் படத்தக்கவர் என்றும் சுவாமி விவேகானந்தர் கூறினார்.   நசரேயனாகிய இயேசு பாலஸ்தீன தேசத்தில் வாழ்ந்த நாட்களில் நான் வாழ்ந்திருப்பேனேயாகில் அவருடைய பாதத்தை என் கண்ணீரினால் அல்ல,    என்னிருதயத்திலிருந்து வழிகிற இரத்தத்தால் கழுவியிருப்பேன் என்றும் அவர் கூறினார். இந்நாட்களில் காணப்படுகிற அனேகக் கிறிஸ்தவர்கள் கூட உலக ஜனங்கள் ஆண்டவரைப்பற்றி அறிந்திருக்கிற அளவு கூட அறியவில்லை. ஆனால் கிறிஸ்துவைக் கற்றுக் கொள்ளுவது என்பது,    உறவைக்(relationship)  குறிக்கிறது,    இயேசுவோடு நெருங்கி ஜீவிப்பதைக் குறிக்கிறது,    உண்மையான  சீஷத்துவத்தைக் குறிக்கிறது,    ஆண்டவரோடு சஞ்சரிப்பதைக் குறிக்கிறது.

கிறிஸ்துவைக் கற்றுக் கொண்டவன்,    பழைய  மனுஷனைக்  களைந்துபோட்டு,    புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டவன்,     பழைய மனுஷனுடைய பாவ சுபாவங்களைக் களைந்தவன். மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நடவாமலிருந்து,    சகல அசுத்தங்களுக்கும் விலகி ஓடுகிறவன்.  ஒருவன்  கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்,    பழையவை ஒழிந்துபோயின,    எல்லாம் புதிதாயின (2 கொரி. 5:17) என்ற வார்த்தையின் படி, வார்த்தையில்,    நடக்கையில்,    பார்வையில்,    அனுதின வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை வெளிப்படுத்துகிறவன். கர்த்தருடைய பிள்ளைகளே,    உலகம் உங்களில் இயேசுவைப் பார்க்க விரும்புகிறது,    சாட்சியின் ஜீவியத்தைக் காண விரும்புகிறது. நீங்கள் தான் பூமிக்கு உப்பு,    உலகத்திற்கு வெளிச்சம் என்று வேதம் கூறுகிறது. ஒருநாளும் சாரத்தை இழந்து விடாதிருங்கள். உத்தமமாய் ஜீவிக்க உங்களை அர்ப்பணியுங்கள்,    உங்கள் வெளிச்சம் மற்றவர்களுக்கு முன்பாக பிரகாசிக்கட்டும். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar