உங்கள் மதிப்பு என்ன?

கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே, ஆகையால் தேவனுக்கு  உடையவையாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள் (1 கொரி. 6:20).

ஒரு பொருளின் விலையை வைத்து அதின் மதிப்பை அறிந்து கொள்ளலாம்.  விலைகள் அதிகரிக்கும் போது அதன் தரமும் அதிகரிக்கும். நீங்களும் நானும் விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள் என்று மேற்குறிப்பிடப்பட்ட வசனம் கூறுகிறது.  அந்த விலை இயேசு  கிறிஸ்துவின்  இரத்தமாகக்  காணப்படுகிறது.  தேவன் தம்முடைய  சுயரத்தத்தினாலே  சம்பாதித்துக் கொண்ட தமது  சபை என்று அப். 20:28ல் எழுதப்பட்டிருக்கிறது.  சபை என்பது  கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மைக் குறிக்கிறது. ஆகையால்  நாம் அத்தனை பேரும் இயேசு  கிறிஸ்துவின்  இரத்தத்தினால்  விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள். இதையறிந்த மோசே பூமிக்குரிய இஸ்ரவேலர்களாகிய தன்னுடைய ஜனத்தையும், ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நம்மையும் தீர்க்கதரிசனக் கண்களில் கண்டு, இஸ்ரவேலே நீ பாக்கியவான், கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? என்று உபா. 33:29ல் எழுதினார்.  கர்த்தரால் கிரயத்திற்குக் கொள்ளப்பட்ட,  இரட்சிக்கப்பட்ட ஜனங்களுக்கு ஒப்பானவர்கள் ஒருவரும் இல்லை. ஆகையால், உங்களையும்,  உங்கள் குடும்பத்தையும், பிள்ளைகளையும் மதிப்பிற்குரியவர்களாய் கருதுங்கள்.

ஆண்டவர் நம்மை ஏன் கிரயத்திற்குக் கொள்ளவேண்டும்?.  தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத்  தேவசாயலாகவே  சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார் என்று ஆதி.1:27ல் எழுதப்பட்டிருக்கிறது. நமக்குள் இருப்பது அவருடைய  சுவாசம், அவர் நாசியில் ஊதினதின்  நிமித்தம்  நமக்குள்  ஜீவஆத்துமா வந்தது. அதோடு சகல சிருஷ்டிகளின் மேல் ஆளுகையும் தந்தார், பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது  ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக, அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும்,  பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும்  ஆளக்கடவர்கள் என்றார்(ஆதி. 1:26).  ஆனால் நம்முடைய  ஆதிப்பெற்றோராகிய  ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த வேளையில் தங்களையும், தங்களுக்குக் கர்த்தர் சகல சிருஷ்டிகளின் மேலும்  கொடுத்த ஆளுகையையும் பிசாசிற்கு விற்றுப் போட்டார்கள்.  அதினிமித்தம்  தேவசாயலை இழந்து, பாவசாயலை அணிந்து, பாவத்தின் பாரத்தைச் சுமக்கிறவர்களானார்கள். 

பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்க, அவனுக்குக் கிரயம் செலுத்த வேண்டும். ஆகையால் இயேசு மிக உயர்ந்த விலையைக் கொடுக்கும் படிக்குத்  தீர்மானித்தார். அவருடைய சொந்த  இரத்தைத்யே  கொடுத்து  நம்மைக் கிரயத்திற்கு கொள்ளும் படிக்குத்  தீர்மானித்தார்.  பார்வோனின்  அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்க ஆட்டுக்குட்டியின் இரத்தம் போதுமான தாயிருந்தது. ஆனால் இப்பிரபஞ்சத்தின் அதிபதியாகிய பொல்லாத பார்வோனாகிய பிசாசின் பிடியிலிருந்து நம்மைக் கொள்ளும் படிக்குத் தன் சொந்த  இரத்தத்தையே  கர்த்தர் கொடுத்தார். நாம் வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,  குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய  கிறிஸ்துவின்  விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டவர்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, நம்முடைய மதிப்பு விலையேறப்பெற்றது. ஆகையால்  நாம்  நம்முடைய மதிப்பை உணர்ந்து  இராஜாவின்  பிள்ளைகள் என்ற அந்தஸ்துடன் ஜீவிக்க வேண்டும். நாம் நமக்குரியவர்கள்  அல்ல,  இயேசுவுக்குரியவர்கள்.  ஆகையால், தேவனுக்கு  உடையவையாகிய  உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை எப்பொழுதும் மகிமைப்படுத்துங்கள். ஒருபோதும் தகாத காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளாதிருங்கள், அநாகரிகமான  காரியங்களைச்  செய்யாதிருங்கள்.  கடன் வாங்காதிருங்கள்,  உங்களுக்கு  இருக்கிறவைகளில்  வாழப் பழகிக் கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கையின் மூலமும், வார்த்தையின் மூலமும், கிரியையின் மூலமும், ஊழியத்தின் மூலமும், எப்பொழுதும்  கர்த்தரை  மகிமைப்படுத்துவதற்குக்  கர்த்தர் தாமே நமக்குக் கிருபை புரிவாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org