வாலிபமும், வயோதிபமும்.

நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை. தீங்கு நாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்….. இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை (பிரசங்கி 12:1-7).

பிரசங்கி புத்தகம் சாலோமோன் இராஜாவால் எழுதப்பட்டது. சாலோமோன் பெரிய ஞானி, அறிவில் சிறந்தவர். ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தைக் கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார்.   அவன் மகா பெரிய ஐசுவரியவானாகவும் காணப்பட்டான். சாலோமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாய் எண்ணப்படவில்லை. உலகப் பிரசித்தி பெற்ற எருசலேம் தேவாலயத்தைக் கட்டினான். அவர் கண் இச்சித்ததையும், அவர் இருதயம் விரும்பினதையும் ஒன்றையும் அவன் பெற்றுக் கொள்ளாமல் இருந்ததில்லை. பிரசங்கி 12-ம் அதிகாரத்தில் வயோதிபத்தின் அவலநிலையைப்  பாடல் நடைமுறையில் அழகாக எழுதி, அப்படிப்பட்ட நிலைமை வருவதற்கு முன்பு வாலிபத்திலே சிருஷ்டிகரை நினைக்கவேண்டும் என்று நமக்கு ஆலோசனை கூறுகிறார்.

வாலிப நாட்களில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காரியம் நமக்கு ஒரு சிருஷ்டிகர் உண்டு. அவரை நினைத்து சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்கு நல்ல காலம் உண்டு என்றாலும் அது வாலிபம் ஆகும். ஒரு கணக்கு கூறுகிறது கிறிஸ்துவுக்குள்ளாய் வருகிறவர்களில் 100 சதவிகிதத்தில் 95 சதவிகிதம் பேர் 50 வயதிற்குள்ளாக வருகிறார்கள். அதிலும் 30 வயதிற்குள்ளாய் வருகிறவர்கள் தான் அதிகம். ஆம் கர்த்தர் கொடுத்த வாலிப நாட்களில் சிருஷ்டிகரை நினைக்க வேண்டும். ஏன் நாம் வாலிபத்தில் சிருஷ்டிகரை நினைக்க வேண்டும்?  வாலிபர்கள் ஆண்டவருடைய கரங்களில் காணப்படுகிற அம்புகள்(சங்.127:4). வாலிபப்பிராயம் நல்ல பெலன், ஆரோக்கியம் உள்ள நாட்கள். ஆண்டவருக்காக ஏதாகிலும் செய்யக்கூடிய நாட்கள்.  இன்று உலகத்தின் அதிபதியாகிய பிசாசு வாலிபர்களை உலக சினேகிதத்திற்கு நேராக, மாம்ச இச்சைகளுக்கு நேராக, மது மயக்க மருந்துகளுக்கு நேராக, நாகரீகம் என்று கூறி அசுத்தமான பழக்கவழக்கங்களுக்கு நேராக இழுத்துக்கொண்டிருக்கிறான்.  ஆனால் நம்முடைய சிருஷ்டிகரோ அவரை நினைக்கும் படிக்கு உங்களை அழைக்கிறார்.

ஏன் வேதம் நம்மை வாலிபத்தில் தேவனை நினைக்கும்படி துரிதப்படுத்துகிறது? வாலிபத்திற்குப் பின்பு வயோதிபம் வருகிறது. அவைகள் தீங்கு நாட்கள். ஒருவரும் பிரியப்படாத நாட்கள். ஆண்டவருக்கென்று ஒன்றும் செய்யக்கூடாத நாட்கள். வியாதியாகிய தீங்கு நம்மைத் தாக்குகிற நாட்கள்.  கைவிடப்படுகிற நாட்கள். நேசிப்பாரற்ற நாட்கள். அப்படிப்பட்ட நாட்கள் வருவதற்கு முன்பு ஆண்டவரைக் சொந்த இரட்சகராகக் கண்டுகொள்ளவேண்டும்.

வயோதிபத்தின் அவல நிலையை பிர. 12:2-7-ல் வாசிக்கிறோம். சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், அந்தகாரப்படாததற்குமுன்னும்,  மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத் திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப்போய், ஏந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து, பலகணிவழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும்,  ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப்போகாததற்குமுன்னும்,  மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, பசித்தீபனமும் அற்றுப்போகாததற்கு முன்னும், மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும், வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி, இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை. சரீரமானது பூமிக்குத் திரும்பும் என்று எழுதப்படவில்லை. மண்ணானது பூமிக்குத் திரும்பும் என்று எழுதப்பட்டிருக்கிறது. வேதம் சரீரத்தை மண் என்று அழைக்கிறது. ஆதியிலே தேவன் மனுஷனை மண்ணினால் உருவாக்கி, அவனுடைய நாசியிலே ஜீவ சுவாசத்தை ஊதினார். மனுஷன் ஜீவ ஆத்துமாவானான். ஆதாம் பாவம் செய்த போது, ஆண்டவர் கூறினார், நீ மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய். இன்று  நம்முடைய  அலங்கரிப்பெல்லாம் மண்ணானதும், மண்ணுக்கு திரும்புகிற சரீரத்திற்கும் தான். மனுஷனை மண்ணென்று ஆண்டவர் நினைவுகூறுகிறார். ஆனால், ஆவி தன்னை தந்த தேவனிடத்திற்கு போகும். உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?(பிர.3:1). ஒவ்வொரு மனுஷனுடைய ஆவியும் தேவனுடையது. காரணம்  அவரே அந்த ஆவியை மனுஷனுக்குள்  வைத்தார். துன்மார்க்கனும், சன்மார்கனும் யார்  மரித்தாலும் அவனுடைய ஆவி தேவனிடத்திற்கு போகும். ஆத்துமா நித்தியத்தை நிர்ணயிக்கும். நித்திய வீட்டை நிர்ணயிக்கும். மண்ணான சரீரம் மண்ணுக்குத் திரும்புவதற்கு முன்பு  நாம் நம்முடைய சிருஷ்டிகரை நினைக்க வேண்டும். வாழ்கையை ஓடி முடித்தபிறகு அல்ல, வயதான பிறகும் அல்ல, வாலிபத்திலே நாம் நம்முடைய ஆண்டவரை நினைக்க வேண்டும். இதையறிந்து வாலிபத்தில் இயேசுவை இரட்சகராகக் கண்டு கொள்ளுகிற மனுஷன் பாக்கியவான். தீங்கும், உபத்திரவமும் நிறைந்த வயோதிபத்திற்கு முன்பு வாலிபத்தை ஆண்டவருக்காக சமர்ப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar