உங்களுக்கு நித்தியஜீவன் உண்டு:-

1 யோவா 5:13. உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.

யோவான் மிக முக்கியமான காரியத்தை சபை அறிய வேண்டும் என்றும் அதை எழுதி வைக்க வேண்டும் என்றும் ஆவல் கொண்டான். என்ன அது? கர்த்தருடைய பிள்ளைகளுக்கு நித்திய ஜீவன் உண்டு என்பதை ஒவ்வொரு தேவ பிள்ளைகளும் அறிந்து கொள்ள வேண்டும். உலகத்தில் அநேகருக்கு நித்திய ஜீவனை குறித்து அறிவில்லை.

சிலர் சொல்லுவார்கள் தங்களுடைய மரணத்திற்கு பின்பு ஏழு ஜென்மங்கள் உண்டு என்றும், சிலர் சொல்லுவார்கள் தங்களுடைய தாத்தா பாட்டி காக்காவாக மாறி வைத்த சோறை சாப்பிட்டு சென்றார்கள் என்று. சிலர் சொல்லுவார்கள் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் கல்லறைக்குள் சந்தோசமாக இருப்பானென்றும், தீமை செய்தால் கல்லறைக்குள் துன்பமாக இருப்பான் என்றும் கூறுவார்கள். முதியோர் மரித்து அவர்கள் பிள்ளைகளுக்கு பிள்ளை பிறந்தால், தங்கள் தகப்பன் இந்த பிள்ளையின் ரூபத்தில் மீண்டும் பிறந்தார் என்றும் சொல்லுவார்கள். இவ்விதமான மனிதனின் கூற்றுகளினால் தேவ ஜனங்கள் சிக்கி கொள்ள கூடாது என்று யோவான் விரும்பினான். வசனம் சொல்லுகிறது உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு.

எப்பொழுது நீங்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, மூழ்கி ஞானஸ்நாணம் எடுத்தீர்களோ, அப்பொழுதே உங்கள் பெயரை இயேசு தன்னுடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதிவிட்டார். இவ்வுலகத்தில் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, பிறரில் அன்பு கூர்ந்து, பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து, பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான். அப்படிப்பட்டவர்களுக்கு கர்த்தர் நித்திய ஜீவனை கொடுக்கிறார். ஸ்தேவான் மரிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக சொல்லுகிறான் கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று. காரணம் மரித்த அடுத்த மில்லி வினாடியில் தான் இயேசுவின் சமூகத்தில் இளைப்பாற போகிறேன் என்பதை அறிந்திருந்தான். இயேசுவும் மரிப்பதற்கு முன்பு அவருடைய ஆவியை தேவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.

இயேசு சொன்னார் நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார் (யோவா 11:25,26). உலகத்து ஜனங்களுக்கு இல்லாத ஒரு வெளிப்பாட்டை கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிறார். நமக்கு நித்திய ஜீவன் உண்டு என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். இவ்வுலக வாழ்விற்கு பிறகு நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் இருக்கிறது. இவ்வுலக வாழ்விற்கு பிறகு நாமெல்லாரும் யுகா யுகமாக இயேசுவோடு கூட இருக்க போகிறோம். அங்கே கண்ணீரில்லை, வேதனையில்லை, புலம்பலில்லை. உங்களுக்கு நித்திய ஜீவனை கொடுக்க இயேசு விருப்பமுடையவராய் இருக்கிறார். அவர் கடந்து சென்ற வழியில் நடக்க உங்களை ஒப்புக்கொடுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org