சமுத்திர அலைகளின் மேல் நடக்கிறவர்.

அவர் ஒருவரே வானங்களை விரித்து,    சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர் (யோபு 9:8).

கர்த்தர் சமுத்திரத்தின் அலைகளின் மேல் நடக்கிறவர் என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. சமுத்திரத்தில் அலைகள் எப்பொழுது எழும்பும்? காற்றின் அளவை பொறுத்து அலைகள் எழும்பும். காற்று சமுத்திரத்தின் தண்ணீரின் மேல் உராய்ச்சுகிற வேகத்தின் அளவைப் பொறுத்து அலைகளின் அளவு காணப்படும். காற்று மெதுவாக வீசும் போது,    அலைகளின் அளவு குறைவாய் இருக்கும்,    காற்று அதிகமாய் வீசும் போது அலைகளின் அளவு பெரிதாயிருக்கும்.   சீஷர்கள் படகில் பிரயாணம் செய்த வேளையில் எதிர்காற்றின் நிமித்தம் அலைகளினால் படகு அலைவுபட்ட வேளையில்,    இரவின் நாலாம் ஜாமத்திலே,    இயேசு கடலின்மேல் நடந்து,    அவர்களிடத்திற்கு வந்தார் என்று மத். 14:25ல் எழுதப்பட்டிருக்கிறது. அவர் படகில் ஏறியவுடனே  காற்று அமர்ந்தது,    உடனே அலைகளும் அமர்ந்தது. இயேசுவுக்கு சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு ஆபிரகாமின் நாட்களில் வாழ்ந்தவர் என்று கருதப்படுகிற யோபு,    ஆண்டவர் சமுத்திரத்தின் அலைகளின் மேல் நடக்கிறவர் என்றார். கர்த்தர் சமுத்திரத்தின் மேல் மாத்திரமல்ல,    அதில் எழும்புகிற அலைகளின் மேலும் நடக்கிறவர்.

கர்த்தருடைய பிள்ளைகளே,    உங்கள் வாழ்க்கை என்னும் படகு பலவிதமான பிரச்சினைகள் என்னும் காற்றினால் அலைவுபடுகிற வேளையில்,    கர்த்தர் உங்களை விடுவிக்கும் படிக்கு உங்களண்டை வருவார். உங்கள் பிரச்சினைகள் சமுத்திரத்தின் அலைகள் போல மிகப் பெரிதாகக் காணப்படும் போதும் அவற்றின் மேலும் நடந்து வந்து உங்களை விடுவிப்பார். அமிழ்ந்து போன பேதுருவை தூக்கிவிட்டவர் உங்களையும் உங்கள் கஷ்டங்களிலிருந்து விடுவிக்க வல்லவர். ஆண்டவருக்குச் சிறிய,    பெரிய பிரச்சினைகள் என்று வித்தியாசமில்லை,    அவர் சர்வ வல்லமையுள்ள தேவன். யோபுவின் பாடுகள் மிகவும் பெரிதாய் காணப்பட்டது. ஒரே நாளில் ஆஸ்தி,    ஐசுவரியங்கள்,    பிள்ளைகள் எல்லோரையும் இழந்தான். பின்பு சாத்தான் அவனுடைய உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலை மட்டும் கொடிய பருக்களினால் அவனை வாதித்தான்.  அவனுடைய மனைவி தேவனை தூஷித்து ஜீவனை விடு என்று கடிந்துகொண்டு விலகிவிட்டாள். நண்பர்கள் மூன்று பேர் வந்து,    அவனுடைய துக்கம் மகா கொடிய துக்கம் என்று கண்டு,    ஏழு நாட்கள் ஒன்றும் பேசாமல் அவனோடு கூட தரையிலே அமர்ந்திருந்தார்கள். அவனுக்காக பரிதவிக்கவும்,    ஆறுதல் சொல்லவும் வந்தவர்கள்,    பின்பு மூன்று பேரும் மூன்று முறை வைத்து ஒன்பது முறை யோபுவை மறைமுகமாகக் குற்றம் சாட்டினார்கள். அதில் ஒன்பதாவது முறை சோப்பார் என்ற நபருக்குப் பதிலாக எலிகூ என்ற வாலிபனும் யோபுவில் குற்றம் கண்டுபிடிக்கிறவனாகக் காணப்பட்டான். கடைசியில் அவனுடைய மகா கொடிய துக்கத்தின் மத்தியில் கர்த்தர் வெளிப்பட்டு அவனுக்கு விடுதலையைக் கொடுத்தார்,    அவனுடைய வாழ்க்கையில் எழும்பின எல்லா கொந்தளிப்பின் அலைகளையும் அமரச் செய்தார். அதுபோல உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற எல்லா கொந்தளிப்பின் அலைகளின் மேல் கர்த்தர் நடந்து,    உங்கள் எல்லா பிரச்சினைகளையும்   மாற்றி உங்களை விடுவித்து மகிழச் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar