கர்த்தர் அக்கினி மதிலாய் உங்களுக்கு இருப்பார்:-

சக 2:5. நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இவ்வுலகத்தில் வாழும் நமக்கு பாதுகாப்பு மிகவும் அவசியம். கண்களுக்கு தெரிந்த ஆபத்துகளை காட்டிலும், கண்களுக்கு தெரியாத ஆபத்துகள் அதிகம். இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள கர்த்தர் அக்கினி மதிலாய் இருப்பார். விலங்குகள் சரணாலயம் போன்ற பகுதிகளில் விலங்குகள் தாக்க வரக்கூடாது என்பதற்காக பெரிய மதில்களை அரசாங்க கட்டிடங்களில் வைத்திருப்பார்கள். பெரிய பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள் தங்கள் வீடுகளை சுற்றிலும் பெரிய, உயரமான சுவர்களை பாதுகாப்புக்காக எழுப்புவார்கள். உலக தலைவர்களை சுற்றிலும் பாதுகாப்பிற்காக பலத்த காவலாளர்களை நியமித்துக்கொள்ளுவார்கள். அவர்களுடைய வாகனத்தை சுற்றிலும் படைகள் பாதுகாப்பிற்காக செல்லும். இவ்வகையான உலக பாதுகாப்புகளெல்லாம் நிரந்தரமற்றைவைகள்; மாத்திரமல்ல நம்பமுடியாதவைகள். காரணம் பாதுகாப்பிற்காக நிற்கும் காவலாளர்கள் கூட தங்கள் தலைவர்களை சுட்டு கொள்ள கூடிய காரியங்களை நாம் பார்க்கிறவர்களாக காணப்படுகிறோம்.

ஆனால் இவைகளெல்லாவற்றிலும் உயரிய இரண்டு பாதுகாப்புகள் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு காணப்படுகிறது. ஒன்று இயேசுகிறிஸ்துவின் இரத்தம். பழைய ஏற்பாடு காலத்தில் சங்காரக்காரன் அழிக்க வந்த போது யாருடைய வீடுகளில் இரத்தம் பூசப்பட்டிருந்ததோ, அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். இன்றைக்கு இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நமக்கு எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்கிறது. ஆகையால் எப்பொழுதும் நம்முடைய பிள்ளைகள், குடும்பங்கள், சபைகள், சொத்துக்கள் ஆகியவற்றை இயேசுவின் இரத்தத்திற்குள்ளாக ஒப்பு கொடுத்து ஜெபிக்க வேண்டும்.

இரண்டாவதாக, கர்த்தர் நம்மை சுற்றிலும் அக்கினி மதிலாக இருப்பாரென்றால், ஒரு சந்துருவும் நம்மை தொட முடியாது. கண்களுக்கு தெரியாத கன்னிகளிலிருந்து கர்த்தர் பாதுகாப்பார். எலிசா தீர்க்கதரிசி சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகொண்டு வந்தான். அவனுக்கிருந்தது ஒரே ஒரு வேலைக்காரன் கேயாசி மாத்திரமே. சீரிய இராஜா அவனை அழிக்க அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள். அதை கண்ட வேலைக்காரன் ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான். அதற்கு எலிசா சொன்னான் பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். எலிசாவின் வேலைக்காரன் கண்கள் திறந்த போது எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். இதனால் ஒருவனும் எலிசாவை தொட முடியவில்லை. இஸ்ரவேல் ஜனங்களுக்கு வனாந்திரத்தில் அக்கினி ஸ்தம்பமாக பாதுகாத்தார். அதே அக்கினி உங்களை பாதுகாக்கும். கர்த்தர் உங்களை சுற்றிலும் அக்கினி மதிலாய் இருப்பார். நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org