நன்மையானவைகளைப் பேசுகிற இயேசுகிறிஸ்துவின் இரத்தம்.

புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும்,  ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். (எபி. 12:24).

இரத்தம் என்ற வார்த்தை வேதத்தில் முதல்முதலாக எழுதப்பட்ட இடத்திலேயே, இரத்தம் பேசும் என்பதை அறியமுடியும். ஆதியாகமம் 4:10-ல் அதற்கு கர்த்தர் காயீனை நோக்கி: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது, என்று கூறுகிறார். ஆபேலின் இரத்தம் தன் சகோதரனிடத்தில் பழிவாங்கும்படி கர்த்தரை நோக்கிகூப்பிடுகிறது. அதுபோல வெளிப்படுத்தல் 6:9,10-ம் வசனங்களில், தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்கள்,  பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர்  பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டு, பழிவாங்குதலுக்காகக் கூப்பிட்டார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் பூமியில் சிந்தப்பட்ட இரத்தங்கள் எல்லாம் கர்த்தரை நோக்கி பழிவாங்குதலுக்காகக் கூப்பிடுகிறது.

இயேசுகிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே நமக்கு நன்மையானவைகளை பேசுகிறது. சிலுவையில் தன் இரத்தம் முழுவதையும் சிந்தி மிகவும் கொடூரமான மரணத்தை சந்தித்தும் கூட, அவருடைய இரத்தம் பழிவாங்குதலுக்காக அல்ல, பிதாவாகிய தேவனை நோக்கி நமக்கு நன்மையானவைகளை செய்யும்படி கூப்பிடுகிறது. நம்மை ஆசீர்வதிக்கும்படிக்கு வேண்டுகிறது. இன்னும் ஒருவருஷம் இருக்கட்டும் என்று நமக்காகப் பரிந்துபேசுகிறது. சிலுவையில் ஆண்டவர் சொன்ன முதல் வார்த்தையும் கூட, பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது என்ன என்பதை அறியாதிருக்கிறார்களே.

இயேசுவின் இரத்தத்திற்கு வெளியே நமக்குப் பாதுகாப்பு இல்லை. இயேசுவின் இரத்தத்திற்குள்ளே ஆபத்தேயில்லை. ஆகையால் குடும்பமாய் இயேசுவின் இரத்திற்குள்ளாக ஒவ்வொரு நாளும் வந்துவிடுங்கள்.  குடும்பத்தின் பிள்ளைகள், குடும்பத் தலைவர்கள், தலைவிகள் அத்தனை பேரும் மேல் ஒவ்வொரு நாளும் இயேசுவின் இரத்தத்தை விசுவாசத்தோடு தெளித்துவிடுங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை வீட்டின் நிலைக்கால்கள், மேற்சட்டங்களில் பூசினதுபோல, உங்கள் வீடுகளையும், உங்களுக்கு உண்டான ஆஸ்தி, ஐசுவரியங்கள் அனைத்தையும் இயேசுவின் இரத்தத்திற்குள்ளாக கொண்டுவந்துவிடுங்கள்.

பிசாசை வேதம் திருடன் என்று அழைக்கிறது. அவன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான் (யோவான் 10:10).  ஆரோக்கியத்தை திருடுவான், ஐசுவரியத்தை திருடுவான், குடும்ப சமாதானத்தை திருடுவான். ஆனால் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம் நம்மை வாழவைக்கிறது. இயேசுவின் இரத்தம் அது கீலேயாத்தின் பிசின் தைலம், நம்மை சொஸ்தமடையச்செய்யும். நம்முடைய போக்கிலும் வரத்திலும் நம்மை பாதுகாக்கும். நன்மையானவைகளை உங்களுக்காக பேசும். கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் பாதுகாத்து, நன்மையானவற்றை உங்களுக்கு அருளிச்செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org

Tetelesthai Ellam Mudinthathu, Uthamiyae Vol. 8