சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்:-

சங் 89: 9. தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.

ஆண்டவர் சகலத்தையும் ஆளுகிறவர். இப்பூமியில் பெரும்பான்மையான பகுதி சமுத்திரமாய் காணப்படுகிறது. அரசியலில் கட்சிகள் ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் தங்களுக்குள்ளே மனமேட்டிமை, பெருமை அடைந்துவிடுவார்கள். நாங்கள் தனி பெரும்பான்மையான ஆட்சிக்காரர்கள் என்பதாக அவர்கள் ஊடகங்களில் சொல்லுவார்கள். அதுபோல சமுத்திரம் தனி பெரும்பான்மையான இடத்தை உடையது. அப்படிப்பட்ட மிகப்பெரிய சமுத்திரத்தின் பெருமையை நம் ஆண்டவர் ஆளுகிறார் என்று வசனம் சொல்லுகிறது.

உங்களுக்கும் மேலானவர்கள், பெருமை பிடித்தவர்கள் சமுத்திரத்தை போல உங்களுக்கு விரோதமாக எழும்பி, உங்களை ஒடுக்க நினைக்கிறார்களா? ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அப்படி பெருமை பிடித்தவர்கள் எல்லாரையும் ஆளுகை செய்கிறவர் தான் நாம் ஆராதிக்கும் சர்வ வல்லமையுள்ள தேவன். அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.

இயேசு படகில் சீஷர்கள் கூட பயணம் செய்துகொண்டிருந்தார். கடலின் சீற்றத்தால் படகு மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. கொந்தளிக்கும் அலைகளை பார்த்து இயேசு பயப்படவோ, ஓடவோ இல்லை. இயேசு எழுந்திருந்து சீறிக்கொண்டிருந்த காற்றையும் கடலையும் அதட்டினார். அதுபோல தான் நம் வாழ்வில் சமுத்திரத்தை போல ஜனங்கள் எழும்பினாலும், அவர்களை ஆளுகை செய்கிற கர்த்தர் எல்லா சூழ்நிலையிலும் இருந்து காத்து உங்களை இரட்சிப்பார் என்பதை தேவ ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

மாத்திரமல்ல, அதின் அலைகள் எழும்பும்போதே அதை அடங்க பண்ணுகிறார். யோபு சொல்லுகிறான் அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப்பண்ணி, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார் (யோபு 26:12). தாவீது சொல்லுகிறான், சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர் (சங் 65:7) என்பதாக.

ஒருவர் சொன்னார் என்னுடைய நிறுவனத்தின் முதலாளி மிகவும் பெருமைபிடித்த கோபக்காரர். அவர் வந்தால் யாருடைய வேலை பறிபோகும் என்பதே தெரியாது என்பதாக. அதை பார்த்து கொண்டிருந்த ஒரு தேவபிள்ளை சொன்னான் இந்த முதலாளியையும் ஆளுகை செய்கிறவர் என்னுடைய ஆண்டவர். ஆகையால் அவருடைய அனுமதி இல்லாமல் எனக்கு ஒன்றும் சம்பவிக்காது என்பதாக.

லஞ்சம் வாங்கும் பெருமைபிடித்த ஒரு தாசில்தாரர் சொன்னார் நீ வாங்கும் இடத்தை எப்படி லஞ்சம் கொடுக்காமல் வாங்கப்போகிறாய் என்று பார்க்கலாம் என்று சவால் விட்டார். கிறிஸ்துவை சேவிக்கும் தேவ மனிதன் சொன்னார் என் ஆண்டவர் பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவர் என்று அவருக்கு பதில் சொல்லிவிட்டு வந்தார். சில வாரங்களில் தாசில்தாரர் வேறொரு இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். அந்த தேவ மனிதனுக்கு வர வேண்டிய இடம் பின்பு கிடைத்தது.

வசனம் சொல்லுகிறது நம் ஆண்டவர் ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார் என்பதாக. ஆண்டவர் ஆளுகை செய்கிறார், அணைத்து உயிர்களே பாடுங்கள் என்ற பாடலை போல, காண்கிற அனைத்தையும் ஆளுகை செய்கிற கர்த்தரை தெய்வமாக கொண்டிருப்பது நமக்கு கிடைத்த பெரிய சிலாக்கியம்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org