நெகே 6:3. அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.
நெகேமியா அலங்கத்தை திறப்பு (Gap)இல்லாமல் கட்டிமுடித்தான். கர்த்தருடைய பணியை சரியாக, உண்மையாக, நேர்த்தியாக செய்ததை சன்பல்லாத்து மற்றும் சில பகைஞர்கள் கேள்விப்பட்டார்கள். எப்பொழுதெல்லாம் நாம் கர்த்தருக்காக உண்மையாக வேலை செய்கிறோமோ அதை சத்துரு கேள்விப்பட்டு சும்மா இருக்கமாட்டான். அந்த வேலையில் எப்படியாவது குறுக்கிட்டு அதை சீர்குலைக்க பல முயற்சிகளை செய்வான். சன்பல்லாத்து நெகேமியாவின் வேலையை கெடுக்கும்படியாக தந்திரம் பண்ணி அவனை ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று சொன்னார்கள். ஆனால் நெகேமியா தன்னுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தான். சன்பல்லாதுவின் பேச்சுக்கு செவிசாய்க்காமல் சொன்னான் நான் பெரிய வேலையைச் செய்கிறேன். அதை விட்டு நான் வர முடியாது என்று சொல்லிவிட்டான். அநேக வேளைகளில் நாம் கர்த்தருடைய பனி இருக்கிறது என்றால், அதை இரண்டாம் வேலை என்று அற்பமாக நினைப்பதுண்டு.
இந்த உலகத்தில் நமக்கு அநேக வேலைகள் இருக்கிறது. சம்பாத்தியம் செய்ய வேலை பார்க்கிறோம், தொழில் செய்கிறோம். வீட்டிலிருக்கும் வேலைகளையும் செய்கிறோம். குடும்பங்களுக்கு தேவையான காரியங்களை செய்து தருகிறோம். இவைகளெல்லாம் முக்கியமானவைகலே. ஆனால் இவைகளெல்லாவற்றிலும் பெரிதான வேலை நமக்கு காணப்படுகிறது. அது கர்த்தருடைய இராஜ்ஜியத்தை கட்டும் வேலை. அந்த வேலைக்கும் அனைவரும் முதலிடம் கொடுத்து செய்ய வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
எருசலேமின் அலங்கம் இடிபட்டு சுமார் தொண்ணூறு வருடங்கள் ஆகிவிட்டது. இடிந்துபோன அலங்கத்தை கட்ட கர்த்தர் ஒருவனை தேடிக்கொண்டு இருந்திருக்க கூடும். குறிப்பிட்ட காலத்தில் கர்த்தர் நெகேமியாவின் இருதயத்தில் பாரத்தை போட்டார். அலங்கத்தை எடுத்துக்கட்டும் பாரத்தை போட்டார். அந்த பாரம் நெகிமியாவை அழுத்தியது. அவன் கடந்து சென்று அலங்கத்தை கட்ட ஆரம்பித்தான். அந்த நல்ல வேலைக்கு அநேகர் தோள் கொடுத்தார்கள். சுமார் தொண்ணூறு வருடங்களாக இடிபட்டு போன அலங்கம் ஐம்பத்திரெண்டு நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது.
நெகேமியாவை போல கர்த்தருக்காக பெரிய வேலை செய்ய கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். கர்த்தருடைய வேலை செய்யும் போது வருகிற ஆனந்தம், சந்தோசம், சமாதானத்தை போல வேறெந்த வேலைகளிலும் நாம் பார்க்கமுடியாது. அந்த உன்னத வேலையை செய்ய உங்களை ஒப்பு கொடுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

