உனக்குக் குறித்திருக்கிறதைக் கர்த்தர் நிறைவேற்றுவார்.

எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்,    இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு (யோபு 23:14).

யோபு பாடுகளின் பாதையில் கடந்துசென்ற வேளையிலும் கூட கர்த்தர் அவனுக்காக எதை முன்குறித்து வைத்திருக்கிறாரோ அதை அவர் நிறைவேற்றுவார் என்றான். அனேக வார்த்தைகளினால் தன் நண்பர்களுக்கு  தன்னுடைய நீதியை வெளிப்படுத்த முயற்சி செய்து தோற்றுப்போன வேளையில்,    கர்த்தர் அவருடைய சித்தத்தின்படி மாத்திரம் செய்வார் என்பதைப் புரிந்துகொண்டான். கர்த்தருடைய பிள்ளைகளே,    கர்த்தர் உங்களுக்கு எதைக் குறித்திருக்கிறாரோ அதை  அவர் நிறைவேற்றுவார்.  அவருடைய வேளை வரும் போது,    அவர் எல்லாவற்றையும்  உங்களுக்காகச் செய்து முடிப்பார். இதைப் புரிந்துகொள்ள முடியாததினால் அனேக வேளைகளில் முறுமுறுக்கிறோம்,    சோர்வுற்றுப் போகிறோம். கர்த்தர்  அதினதின்  காரியங்களை  அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறவர்,    உங்கள் காரியங்களையும் அதற்கு என்று குறித்த வேளையில் நேர்த்தியாய் செய்துமுடிப்பார். 

யோபு வியாதிப்பட்டு கஷ்டப்பட்ட வேளையில்,     தன் உபத்திரவங்களை கர்த்தரிடம் சொல்ல அவரைத் தேடினான். நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்,    அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து,    என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து,    காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன் என்றான். ஆனாலும்,    நான்  முன்னாகப்போனாலும்  அவர் இல்லை,    பின்னாகப்போனாலும்  அவரைக்  காணேன்.  இடது புறம்,    வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார் (யோபு 23:3,4,8,9) என்று வேதனையோடு கூறினான். அவனுடைய உபத்திரவத்தின் நாட்களில்  நான்கு திசைகளிலும் கர்த்தரைத் தேடினான்,    ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சிலவேளைகளில் நாமும் பாடுகளின் பாதையில் கடந்து செல்லும் போது,    ஆண்டவர் என்னை மறந்துவிட்டாரோ,    எனக்கு உதவி செய்யவில்லையே என்று நாம் நினைப்பது உண்டு. ஆனால் நம்முடைய தேவன்  உலகத்தின் முடிவு பரியந்தம் நம்மோடிருப்பேன் என்று வாக்களித்திருக்கிறார்.    அவருடைய நாமம் இம்மானுவேல், என்றும் நம்மோடிருக்கிறவர்.    நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்பது அவருடைய வாக்குத்தத்தம்.  யோபு ஆண்டவரைத் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும்,    அவனுக்குள் அசைக்கமுடியாத விசுவாசம் காணப்பட்டது,    நான் போகும் வழியை அவர் அறிவார்,    அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் என்று விசுவாசத்தோடு கூறினான் (யோபு 23:10). கர்த்தருடைய பிள்ளைகளே,    சோதனை வேளைகளில் உங்கள் விசுவாசத்தை இழந்து போய்விடாதிருங்கள்,    பின்வாங்கிப் போய்விடாதிருங்கள். நீங்கள் போகிற பாடுகளின் வழியைக் கர்த்தர் அறிந்திருக்கிறார் என்ற நம்பிக்கை  உங்களுக்குள்ளாக்  காணட்டும். ஒவ்வொரு பாடுகளும் உங்கள் விசுவாச ஜீவியத்தைப் பொன்னாக மாற்றுகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். 

யோபு தன் வேதனையின் வேளையில் கூட,    என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது,    அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன். அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை,    அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன் (யோபு 23:11,12) என்றான். பொதுவாகக் கடினமான சூழ்நிலைகளில்,    கர்த்தருடைய கால்களின் அடிச்சுவடுகளைப் பற்றி  பிடித்து நடப்பதும்,    அவருடைய நீதி நெறியைவிட்டு விலகாதிருப்பதும்,    அவருடைய கற்பனைகளை  விட்டுப்  பின்வாங்காமல்,    அதை ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய் காத்துக்கொள்ளுவதும்  கடினமான காரியம். உபத்திரவங்களின் நாட்களில் சாட்சியைக் காத்துக் கொள்ளுவதும் மிகவும் கடினம். என்றாலும் நீங்கள் யோபுவைப் போல ஜீவிக்கும் போது,    அவனுக்குக் கர்த்தர் முன் குறித்ததை நிறைவேற்றி,    இரட்டிப்பாய் அவனை ஆசீர்வதித்ததைப் போல,    உங்களுக்குக்  குறித்ததையும் நிறைவேற்றி இரட்டிப்பாய் உங்களை ஆசீர்வதித்து  உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar