கர்த்தருடைய சத்தத்தை கேட்பீர்கள்:-

வெளி 1:10. கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

யோவான் கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானான். யூதர்கள் கர்த்தருடைய நாள் என்பது வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையை என்று சொல்லி ஆசரிப்பார்கள். சீஷர்கள் இயேசு உயிர்த்தெழுந்த நாளாகிய இதே ஞாயிற்றுக்கிழமையை கர்த்தருடைய நாள் என்று அழைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நாளில் யோவான் ஆவிக்குள்ளானான். அந்த நேரத்தில் அவன் கர்த்தருடைய பெரிதான சத்தத்தை கேட்டான். அதே சத்தத்தை நாமும் ஒவ்வொருநாளும் கேட்டிட முடியும். நாம் ஆவிக்குள்ளாக நம்மை தற்காத்து கொண்டால் அவருடைய சத்தத்தை கேட்கமுடியும்.

இன்றைக்கு அநேகர் சொல்லுகிற காரியம் கர்த்தர் என்னோடு பேசுவதில்லை என்பதாக. உண்மையை சொல்லவேண்டுமென்றால் நாம் நம்முடைய செவியை அவருடைய சத்தத்துக்கு அவருடைய அலைவரிசையில் வைக்கவில்லை. நம்முடைய வாழ்க்கையில் பாவத்திற்கு எதிர்த்துநின்று, பரிசுத்த வாழ்க்கையை வாழ ஒப்புக்கொடுத்து, எல்லாவற்றிலும் தாழ்மையின் சிந்தையை தரித்துக்கொள்ளும்போது பரிசுத்த ஆவியானவர் இலகுவாக நம்மை நிரப்பிவிடுவார். சுத்த மனசாட்சி நாமெல்லாருக்கும் இந்நாட்களில் காணப்பட வேண்டும். நாம் வாழ்கிற இந்த உலகத்தில் எங்கு திரும்பினாலும் பாவம் பெருகி இருக்கிறது, ஆகையால் பாவமில்லாத வாழ்க்கை வாழ்வது கடினம் என்று இனியும் குழந்தை கிறிஸ்துவர்களாக நாம் காணப்படலாகாது. பாபிலோனில், இராஜாவின் போஜனத்தால் தீட்டுப்படலாகாது என்று தானியேல் ஒரு தீர்மானம் பண்ணினான். தன்னை தற்காத்துக்கொண்டான். அதுபோல நாமும் பாவம் நிறைந்த உலகில் யோசேப்பை போல பாவத்திற்கு விலகி ஓட முடியும். அப்பொழுது நாமெல்லாரும் ஆவிக்குள்ளாவோம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இன்று அநேக வேளைகளில் நம்முடைய செவிகளை துற்செய்திகளும், கபட்டு செய்திகளும், பிறனை பழிவாங்கும் பேச்சுகளும், சினிமா பாடல்களும், வஞ்சனையான பேச்சும், இரட்டை அர்த்தம் உள்ள கேலி சிரிப்புகளுக்கு மாத்திரமே அதிகம் பயன்படுத்துகிறோம். ஆகையால் தான் நாம் ஆவிக்குள்ளாக முடியவில்லை. அதன் தொடர்ச்சியாக கர்த்தருடைய பெரிய சத்தத்தை கேட்க முடியவில்லை.

அன்று யோவான் கர்த்தருடைய சத்தத்தை துல்லியமாக கேட்டான் என்றால் இன்று நாமும் அவருடைய சத்தத்தை கேட்க முடியும். என் ஆடுகள் என் சத்தத்தை அறியும் என்று கர்த்தர் சொன்னார். ஆகையால் எப்பொழுதும் ஆவிக்குள்ளாக உங்களை தற்காத்து அனலுள்ளவர்களாய் இருங்கள். கர்த்தர் உங்களோடு பேசும் சத்தத்தை கேட்பீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org