ஆவியானவர் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்:-

ஆகா 2:5. நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைபண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்.

For audio podcast of this Manna Today, please click the link,

ஆண்டவர் உங்களுக்கு கொடுத்த பிரதானமான உடன்படிக்கை, வாக்குத்தத்தங்களில் ஒன்று ஆவியானவர் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார் என்று வேத வசனம் கூறுகிறது. இயேசுவும் அதே வாக்குத்தத்ததை இந்த உலகில் வாழும்போது சொன்னார்: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று. அந்த வாக்குத்தத்தம் பெந்தேகோஸ்தே நாளில் நிறைவேறியது. மாத்திரமல்ல, இயேசு சொன்னார்: நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன் (யோவா 16:7) என்று சொன்னார். தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவர் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பதால் நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதிருங்கள் என்று மேற்கூறிய வசனம் சொல்லுகிறது. தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2 தீமோ 1:7). உலகத்தில் நடக்கும் சம்பவங்கள் ஒருவேளை கடினமாக இருந்தாலும், ஆவியானவர் உங்கள் நடுவில் இருக்கிறார் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக கர்த்தருடைய வேலையை செய்யும் உங்கள் நடுவில், ஆலய பணியில் ஈடுபட்டிருக்கும் உங்கள் நடுவில் ஆவியானவர் நிலைகொண்டிருப்பார். நீங்கள் பயப்படாமல் காரியத்தை நடப்பியுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இந்த உலகில் பிசாசின் ஆவி, மனித ஆவி, பரிசுத்த ஆவி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதில் நாம் பரிசுத்த ஆவியானவருக்கு முழுவதும் இடம்கொடுத்து வாழ வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார் (ஆதி 1:2). இந்த வார்த்தைக்கு மூலபதத்தில் ஆவியானவர் அடைகாத்துக்கொண்டிருந்தார் என்றும் அர்த்தம் காணப்படுவதாக வேத வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். எப்படி கோழி தன் முட்டைகளை அடைகாக்குமோ, அதுபோல பரிசுத்த ஆவியானவர் இந்த முழு உலகத்தையும், முழு வானத்தையும் அடைகாத்தார். ஒழுங்கீனமாய் இருந்த காரியங்களை சரி செய்ய ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடினார், அடைகாத்தார். அண்ட சராசரங்களையும் அடைகாத்த பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேல் நிலைகொண்டிருக்கிறார். அவர் உங்களை தேற்றி, ஆற்றி, பாதுகாத்து நடத்துவார். ஒழுங்கீனமாய் காணப்படுகிற அணைத்து காரியங்களையும் ஆவியானவர் சரிபடுத்துவார். ஆவிக்குரிய வரங்களையும், கனியையும் கொடுத்து ஆசீர்வதிப்பார். ஆகையால் பயப்படாதேயுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org