நீ முள்ளுகளுக்குள்ளே காணப்படுகிற  லீலிபுஷ்பம்.

முள்ளுகளுக்குள்ளே  லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ,    அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள் (உன் 2:2).

For audio podcast of this Manna Today, please click the link,

மணவாளன்,    மணவாட்டியைக் குறித்துக் கூறுகிற வார்த்தையாய் இது காணப்படுகிறது. மணவாளனாகிய இயேசுவின், மணவாட்டியாகிய சபையும் கூட முட்களுக்களுக்குள் காணப்படுகிற லீலிபுஷ்பம் போன்றது. முட்களைப் போன்ற பலவிதமான நெருக்கங்களின் நடுவிலும் லீலிபுஷ்பமாக சபை காணப்படவேண்டும்.  சபைகளை இரண்டு விதங்களில் பிரிக்கலாம்,    ஒன்று பாபிலோனியச் சபை,    மற்றொன்று சீயோன் சபை.  வேதத்தைப் புரட்டி,    கிறிஸ்துவை மையப்படுத்தாமல்,    கூத்தாடிகளின் கூடாரமாய்,    இப்பிரபஞ்சத்தின் வேஷத்தைத் தரித்து,    தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளாத  எல்லா சபைகளும்   பாபிலோனிய சபைகளே. ஆனால் சீயோன் சபை,    கரைதிறை ஒன்றும் இல்லாமல் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்காக நியமிக்கப்பட்டு,    பயத்தோடும் நடுக்கத்தோடும் பரிசுத்த அலங்காரத்தோடும்  தேவனைச் சேவித்து,    வேதத்தை முக்கியப்படுத்தி,    இயேசுவின் சாயலுக்கு ஒப்பாக தன் விசுவாசிகளை மாற்றுகிற எல்லா சபைகளும்  சீயோன் சபைகளாய் காணப்படுகிறது. பொதுவாக உலகத்தானோடும்,    உலகத்தோடும்,    பிசாசோடும் ஒன்றித்துப் போகிற பாபிலோனியச்  சபைகளுக்கு நெருக்கங்களும்,    முட்களைப் போன்ற உபத்திரவமும் இருப்பதில்லை. ஆனால் சீயோனின் கூட்டத்திற்கு உபத்திரவங்களும் பாடுகளும் உண்டு. அனேக பாடுகளின் வழியாகத்தான் சீயோனின் கூட்டம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்.

தேவனை உண்மையாய் பின்பற்றுகிற கர்த்தருடைய பிள்ளையே,    உன்னை முட்களுக்குள்ளே காணப்படுகிற லீலிபுஷ்பமாகக் கர்த்தர் பார்க்கிறார். யோபுவின் வாழ்க்கையில் முட்களைப் போன்ற உபத்திரவங்கள் காணப்பட்டது,    அவன் தன் பிள்ளைகளையும்,    ஆஸ்தி ஐசுவரியங்களையும் இழந்து போனான்,    அவன் மனைவியும் அவனைக் கைவிட்டு தேவனைத் தூஷித்து உன் ஜீவனை விடு என்று கசந்துகொண்டாள். அவனுடைய நண்பர்களும் அவன் பாவம் செய்தான் என்று கூறி அவனை வேதனைப்படுத்தினார்கள். ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் அவன் தன் நீதியைக் கட்டியாய் பிடித்திருந்தான். உம்முடைய சுமுத்திரையான தராசிலே என்னை நிறுத்துப்பாரும் என்று ஆண்டவரை நோக்கிக் கேட்டான். கர்த்தருடைய கண்கள் அவனை தன் தாசனாகவும், உத்தமனாயும்,    சன்மார்க்கனாயும் கண்டது. ஆகையால் இரட்டிப்பாய் அவனைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். ஒருவேளை நீங்களும் பாடுகள்,    வேதனைகளின் பாதையில் கடந்து செல்லக் கூடும்,    தரித்திரங்களும் பற்றாக்குறைகளும் காணப்படலாம்,    நீதிக்குரிய ஜீவியம் செய்கிறேன்,    ஆனால் எனக்கு எத்தனை பாடுகள்,    நிந்தைகள் என்று வேதனைப் படக்கூடும்.  முட்களைப் போன்ற உங்கள் பாடுகளின் நடுவில் கர்த்தர் உங்களை தன்னுடைய வாசனையை வீசுகிற லீலிபுஷ்பமாகப் பார்க்கிறார்,    தன்னை பிரதிபலிக்கிற நிருபங்களாய் பார்க்கிறார்.

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு,    திடன் கொள்ளுங்கள்,    நான் உலகத்தை ஜெயித்தேன் என்று இயேசு கூறினார். உபத்திரவங்களும் பாடுகளும் உங்களை இயேசுவின் சாயலில் மாற்றும். அவருடைய வாசனையை வீசும் படிக்குச் செய்யும். ஆகையால் எந்த சூழ்நிலையிலும் உங்கள் சாட்சியை இழந்துவிடாதிருங்கள்,    சோர்ந்துபோய் விடாதிருங்கள்.   இக்காலத்துப்  பாடுகள் இனிவருகிற மகிமைக்கு ஒப்பானது அல்ல என்பதை உணர்ந்து தொடர்ந்து விசுவாசத்தோடு முன்னேறிச் செல்லுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar