ஆதியாகமம் 26 : 22. பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.
For audio podcast of this Manna Today, please click the link,
ஆபிரகாம் நாட்களில் உண்டான பஞ்சத்தை காட்டிலும் அதிகமான பஞ்சம் ஈசாக்கின் நாட்களில் தேசத்தில் உண்டானது. அந்த பஞ்ச நாட்களில் ஆண்டவர் சொல்லுகிற தேசத்தில் ஈசாக்கு குடியிருந்தான். கேரார் என்ற பட்டணத்தில் அவனும் அவனுடைய வேலைக்காரரும் வசித்துவந்தார்கள். இந்த பட்டணம் அந்நாட்களில் பண்டைய நகரமாகவும், மக்கள் அதிகமாக வசிக்க கூடிய நகரமாகவும் இருந்தது.
ஈசாக்கும் அவனுடைய வேலைக்காரரும் அங்கே தங்களுடைய மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவேண்டுமென்று கிணறு தோண்டினார்கள். மூன்று இடங்களில் அவர்கள் கிணறு தோண்டினார்கள். மூன்று இடங்களிலும் தண்ணீர் வந்தது. ஆனால் முதல் இரண்டு இடங்களில் கேரார் புத்திரர் அந்த இடம் எங்களுடையது என்று வாக்குவாதம் பண்ணினார்கள்.
ஈசாக்கு முதலில் வாக்குவாதம் பண்ணப்பட்ட இடத்திற்கு ஏசேக்கு என்று பெயரிட்டான். ஏசேக்கு என்றால் சர்ச்சை என்று அர்த்தம். ஈசாக்கு சோர்ந்து போய்விடவில்லை.
மீண்டுமாக இரண்டாவது இடத்தில் கிணறு தோண்டினான். அங்கேயும் தண்ணீர் வந்தது, அங்கேயும் கேரார் புத்திரர் வாக்குவாதம் பண்ணினார்கள். அந்த இடத்திற்கு சித்னா என்று பெயரிட்டான். சித்னா என்றால் வெறுக்கக்கூடிய இடம் என்று அர்த்தம். இன்னும் ஈசாக்கு சோர்ந்து போய்விடவில்லை.
மீண்டுமாக மூன்றாவது முறையாக இன்னொரு இடத்தில் கிணறு தோண்டினான். அங்கேயும் தண்ணீர் கிடைத்தது ஆனால் இந்தமுறை கேரார் புத்திரர் வாக்குவாதம் பண்ணவரவில்லை. ஈசாக்கு இந்த இடத்திற்கு ரெகொபோத் என்று பெயரிட்டான். ரெகொபோத் என்றால் திறந்த வெளி அல்லது விஸ்தாரமான இடம் என்று அர்த்தம்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முயற்சிக்கிற எந்த காரியத்திலும் தோல்வி ஏற்படுமென்றால் துவண்டு போகாதிருங்கள். ஈசாக்கை போன்று மீண்டும் மீண்டும் முயற்சிசெய்யுங்கள். ஏசேக்கு வரலாம் போகலாம், சித்னா வரலாம் போகலாம், ஆனால் முடிவில் கர்த்தர் உங்களுக்கு ரெகொபோத்தை வைத்திருக்கிறார். ரெகொபோத்தை பெற்றுக்கொள்ளும் வரைக்கும் ஓடுங்கள்.
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு சொல்லும்போது, I கொரிந்தியர் 9 : 24. பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
பரம கானானை பெற்றுக்கொள்ளும் வரைக்கும் ஓடுங்கள்.
சபையை கட்டி எழுப்ப, நல்ல வீடுவாசல்கள் உண்டாக, நல்ல திருமண காரியங்கள் நடக்க, நல்ல வேலை கிடைக்க, சமாதானமாய் வாழ, சந்தோசமாய் குடியிருக்க, தேசத்தில் நீங்கள் பலுகி பெருக கர்த்தர் உங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவார். அது ரெகொபோத்தாக இருக்கும்.
கர்த்தர் உங்களுக்கு ஒரு இடம் உண்டா க்குவராக. ஆமென்.
Robert Jegadish
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

