உனக்கு பதில் செய்வார்.

கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,  கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச்சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள். ஏசாயா 61:1-3.

For audio podcast of this Manna Today, please click the link,

இயேசுவின் ஊழியத்தைக்குறித்து தீர்க்கதரிசனமாக எழுதப்பட்ட வார்த்தைகளாகக் காணப்படுகிறது. இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்ற வேளையில் ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்து இந்த வேதவசனங்களை வாசித்து இன்றையத் தினம் நிறைவேறிற்று என்று லூக்கா 4:16-21-ல் கூறினார். ஆண்டவர் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுத்து தன்னுடைய பிள்ளைகளுக்குப் பதில் செய்கிற கர்த்தர்.

சாம்பல் துக்கத்திற்கும், துயரத்திற்கும் அடையாளமாகப் பழைய ஏற்பாட்டின் நாட்களில் காணப்பட்டது. யோபு உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் வாதிக்கப்பட்ட வேளையில், அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான் (யோபு 2:7,8). அவனுடைய துக்கத்தை வெளிப்படுத்துவதற்காகச் சாம்பலில் அமர்ந்தான். தன்னுடைய குலத்திற்கு அழிவு வரப்போவதை மொர்தெகாய் அறிந்தபோது, அவன்; தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறினான் (எஸ்தர் 4:1). தேவன் அவர்கள் சாம்பலுக்குப் பதிலாக, துக்கம் துயரத்திற்குப் பதிலாக மகிழ்ச்சியைக் கொடுத்தார். அதுபோல சீயோன் சபையின் ஜனங்களான உங்களுடைய துக்கங்களையும்  துயரங்களையும் கர்த்தர் மாற்றுவார். உங்களுக்குப் பதில் செய்யும்படி கர்த்தர் எழுந்தருளுவார். உங்கள் துயரத்திற்குப் பதிலாக ஆனந்தத்தை அருளுவார். துக்கங்களும் துயரங்களும் பாடுகளும் நிரந்தரமானவைகள் அல்ல. கர்த்தர் உங்கள் சூழ்நிலைகளை மாற்றுவார். ஆகையால் சோர்ந்து போகாதிருங்கள்.

ஒடுங்கின ஆவி என்பது ரகசியமாய் அழுதுகொண்டிருக்கிற வாழ்க்கையாய் காணப்படுகிறது. மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாத காரியங்கள், பாரங்கள், வேதனைகள் நம்முடைய வாழ்க்கையில் சிலவேளைகளில் காணப்படலாம். அன்னாள் துக்கத்தோடு ஆலயத்திற்கு வந்தாள். மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள். அவள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது; அவள் சத்தமோ கேட்கப்படவில்லை. ஆசாரியனாகிய ஏலியால் கூட அவள் வேதனைகளைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால் கர்த்தர் அவளுடைய ஒடுங்கின ஆவியைக் கண்டு, அவள் வேதனைகளைப் பார்த்து துதியின் ஆடையைக் கொடுத்தார். சாமுவேலை பெற்றெடெடுத்த பின்பு, ஆண்டவரைத் துதித்து அவள் பாடின பாட்டு 1 சாமுவேல் 2-வது அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

கல்வாரி சிலுவையில் இயேசு நம்முடைய பாடுகளை அவர்மேல் ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், காரணம் அவருடைய பிள்ளைகள் துயரப்பட்டுவிடக்கூடாது, ஒடுங்கிப்போய்விடக்கூடாது.  கர்த்தர் உங்களுக்குப் பதில் செய்வார். அவர் உங்களுக்குப் பதில் செய்யும் போது, நீங்கள் அவருடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்கள் என்று அழைக்கப்படுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar