உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால்வைக்காதே(நீதி. 25:17).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/rDvJBc5sVaY
விருந்தோம்பல் என்பது கர்த்தருடைய பிள்ளைகளுடைய நற்குணமாகக் காணப்படுகிறது. விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிராம் கூட, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே வந்த வேளையில், உடனே அவன் கூடார வாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரை மட்டும் குனிந்து, ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன், அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம் இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்று அவர்களை அதிகமாய் விசாரித்தான் என்று வேதம் கூறுகிறது. கனம்பொருந்திய சுனேம் ஊராளாகிய ஸ்திரீயும் எலிசா தீர்க்கதரிசிக்குப் போஜனம் கொடுத்து, மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைத்துத் தங்க வைத்தாள். பெத்தானியாவில் காணப்பட்ட மார்த்தாள், மரியாள், லாசருவின் குடும்பமும் இயேசுவை அதிகமாய் விசாரித்தார்கள்.
தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி என்றும் நீதி. 27:10ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நம்முடைய அயலகத்தார் வீட்டில் அடிக்கடி செல்லக் கூடாது, அப்படிச் சென்றால்; அவர்களுக்கு நம்மேல் வெறுப்பு வந்துவிடும். நாம் செல்லுகிற நேரம், அங்கே காணப்படுகிற மணி நேரங்கள், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியதாய் காணப்படக் கூடாது. சிலர் உடன் நண்பர்கள், உறவினர்கள், விசுவாசிகளுடைய வீடுகளில் சென்று ராத்திரி நீண்டநேரம் காணப்படுவதுண்டு. அழையாமலே சென்று அவர்களுடைய நேரத்தை வீணடிப்பவர்களும் உண்டு. சில வேளைகளில் சிலரை வேண்டா வெறுப்போடு வீடுகளில் ஏற்றுக்கொள்ளுவார்கள். எம்மாவூர் சீஷர்களுடன் இயேசு நடந்து சென்ற வேளையில், இயேசு அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார், அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரைவருந்திக் கேட்டுக்கொண்டார்கள், அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார். இயேசுவின் வாழ்க்கை முழுவதும் நமக்குப் பாடமாகக் காணப்படுகிறது. இது ஊழியர்களுக்கும் மிகவும் பொருந்தும். தங்களது சொந்த சபையை விட்டுவிட்டு அடிக்கடி வெளியூர்களுக்கும், வெளிதேசங்களுக்கும் அழைக்கப்படாமலே கடந்து செல்வார்கள். இப்படிப்பட்டவர்கள் மற்ற ஊழியங்களுக்கு ஆசீர்வாதமாகக் காணப்படுவதற்குப் பதிலாக பாரமாகிவிடுவார்கள். திரும்பிச் செல்லும் போது தங்கள் சொந்த சபைகளில் நான் இந்த தேசத்திற்குக் கடந்து சென்றேன், அங்கே இப்படிப்பட்ட அதிசயங்கள் நடந்தது என்று பொய்ச்சாட்சிகளைக் கூறி சொந்த ஜனங்களை நம்பவும் வைத்துவிடுவார்கள். நாளடைவில் அவர்கள் சொந்த ஊழியமும் ஜனங்களும் நலிவடைந்து போய்விடும்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களை மற்றவர்கள் சலித்து வெறுக்கிற ஒரு நபராய் நீங்கள் ஒருநாளும் காணப்படாதிருங்கள், அழையா இடத்திற்குக் கடந்து செல்லாதிருங்கள். அடிக்கடி மற்றவர்களுடைய வீடுகளுக்குக் கடந்துசென்று அவர்களுடைய சமாதானத்தைக் கெடுத்துவிடாதிருங்கள். கர்த்தர் உங்களுக்குத் தெளிந்த புத்தியைத் தந்து நடத்துவாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar

