யோசுவா & யோசுவா :-

சக 3:1,2 அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான். அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/ezwFiA81NkQ

சகரியா தீர்க்கதரிசி சுமார் எட்டு தரிசனங்களை கண்டான். அவற்றில் நான்காவது தரிசனத்தில் யோசுவா என்ற ஆசாரியன் சுத்திகரிக்கப்படுவதையும், அவனுக்கு கிரீடம் சூட்டப்படுவதையும் குறித்து சகரியா 3:1-10 வசனங்களை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்களின் இரண்டு முக்கியமான பிரயாணங்கள் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. ஒன்று எகிப்துவிலிருந்து கானானை நோக்கியும், மற்றொன்று பாபிலோனிலிருந்து எருசலேமை நோக்கியும் இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணப்பட்டதாய் காணப்படுகிறது. இந்த இரண்டு பிரயாணங்களிலும் யோசுவா என்ற இரண்டு வெவ்வேறு நபர்கள் முக்கிய பங்கு வகித்ததை நாம் பார்க்கமுடிகிறது. யோசுவா என்ற பெயருக்கு மூலபத்தில் இயேசு (Jesus) என்ற அர்த்தம் அதாவது இரட்சகர் என்ற அர்த்தமாய் காணப்படுகிறது.

இரண்டு பிரயாணங்களிலும் யோசுவா என்ற நபர்களை கர்த்தர் தேர்ந்தெடுத்ததோ, வேதாகமத்தில் குறிப்பிட்டிருப்பதோ, ஏதோ தற்செயலாக நடந்த சம்பவங்கள் அல்ல. இன்று அநேகர் நினைப்பதுண்டு நான் சபைக்கு தற்செயலாக வந்தேன்; ஒரு நபர் வாகனங்களை ஓட்டி உதவி என்னை அழைத்து வந்தார், நான் தற்செயலாக வந்தேன் என்று சொல்வதுண்டு. சிலர் சொல்வதுண்டு நான் எப்பொழுதும் போல வழக்கத்தின்படி ஓய்வுநாளில் ஆராதனைக்கு கலந்துகொள்கிறேன், இது தற்செயலான காரியம் என்று. சில திருமண அழைப்பிதழில் இந்த காரியம் கர்த்தரால் வந்தது என்ற வசனத்தை போட்டு, பின்பு சிலர் யோசிப்பார்கள் இது உண்மையாகவே கர்த்தரால் நடந்ததா என்று. தேவ ஜனங்கள் ஒன்றை அறிந்துகொள்ளவேண்டும். கர்த்தரால் தெரிந்த்துக்கொள்ளப்பட்ட நீங்கள் தற்செயலாக சபைக்கு வருவதில்லை; தற்செயலாக ஆராதனை கூட்டத்திலும், ஜெபக்கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. உண்மையாய் உத்தமமாய் இயேசுவுக்காக நிற்கிற உங்கள் வாழ்க்கையில் எதுவும் தற்செயலாய் நடக்கவில்லை. இது தேவனுடைய அநாதி திட்டமும், பரிசுத்த ஆவியானவரின் தெய்வீக கிரியைகளாகவும் காணப்படுகிறது என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் பிரயாணத்தில் இருந்த யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை இரட்சிப்பவனாக காணப்பட்டான். இன்றும் பரலோக யோசுவாவாகிய இயேசு நம் ஒவ்வொருவரையும் எகிப்து என்னும் அடிமைத்தன வாழ்விலிருந்து சுயாதீன எருசலேமுக்கு நேராக நடத்திச்செல்கிற இரட்சகராகவும், பாவ வாழ்க்கையிலிருந்து பரிசுத்தமான வாழ்க்கை வாழவும், நாம் பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைக்கவும் செய்கிற இரட்சகராகவும் இயேசு காணப்படுகிறார்.

இரண்டாவது பிரயாணத்தில் யோசுவா என்ற ஆசாரியன் காணப்பட்டான். நமக்கும் இன்று பரலோக யோசுவாவாகிய இயேசு, பிரதான ஆசிரியராகவும், நமக்காக எப்பொழுதும் பிதாவின் சமூகத்தில் வேண்டுதல் செய்கிறவராகவும் காணப்படுகிறார். யோசுவா என்ற ஆசாரியன் கர்த்தருக்கு முன்பாக நிற்கும்போது, சத்துரு அவனை எப்படி யோபுவை குற்றப்படுத்த முற்பட்டானோ, அதுபோல, யோசுவாவையும் குற்றப்படுத்துகிறவனாக காணப்பட்டான். சந்துருவின் ஒரு பிரதானமான வேலை எப்பொழுதும் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்களை குற்றப்படுத்துவது. ஆகையால், ஒருபோதும் கர்த்தருடைய பிள்ளைகள், கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியக்காரர்களை குறைகூறவும், சத்துருவைப்போல குற்றப்படுத்தவும் கூடாது. ஆண்டவர் சத்துருவுக்கு கொடுத்த பதில் கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார். இன்றும் உங்களை சத்துரு குற்றப்படுத்த நினைத்தால் இயேசு அவனை பார்த்து சொல்லுவார் உன்னை நான் கடிந்துகொள்ளுகிறேன் என்று.

இன்றும் பரலோக யோசுவாவை இரட்சகராகவும், பிரதான ஆசிரியராகவும் நம்முடைய வாழ்க்கையில் இயேசுவாக கொண்டிருப்பது, நமக்கு கிடைத்த பெரிய சிலாக்யமாக காணப்படுகிறது.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org