விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும் (எபிரேயர் 11:6).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/TLov89iHf5E
விசுவாச வாழ்க்கையினால் உலகத்தை ஜெயித்த விசுவாச வீரர்களின் பட்டியலை எபிரேயர் 11-வது அதிகாரத்தில் வாசிக்கிறோம். விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் காணப்படுகிறது. நாம் தரிசித்து அல்ல, விசுவாசித்து நடக்கும்படிக்கு அழைக்கப்பட்டவர்கள். ஆனால் கர்த்தருடைய வருகையின் நாட்களில் மனுஷகுமாரன் விசுவாசத்தைக் காண்பாரோ என்றும் வேதம் கேட்கிறது. விசுவாசம் குறைந்து போகிற நாட்கள் இவை, விசுவாச ஜீவியத்தில் பின்வாங்கிப் போகிற நாட்களாய் இந்நாட்கள் காணப்படுகிறது, விசுவாச துரோகங்கள் எங்கும் நேரிடுகிற காலமாய் காணப்படுகிறது. ஆகையால், விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஒடும்படிக்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்தமுடியாது. ஆபிராம் 75-வது வயதில் காணப்பட்ட வேளையில் ஊர் என்ற கல்தேயருடைய தேசத்தை விட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்கு போ என்று தேவன் சொன்னார். ஆபிராம் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து புறப்பட்டுச் சென்றான். பின்பு தரிசனத்தில் தோன்றி வானத்தின் நட்சத்திரங்களை எண்ணக் கூடுமானால் எண்ணு; அவ்வண்ணமாய் உன் சந்ததி இருக்கும் என்று கர்த்தர் வாக்குக் கொடுத்தார். ஆபிராம் கர்த்தரை விசுவாசித்தான்; அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் (ஆதி. 15:6). கர்த்தர் எதை வாக்கருளினாரோ அதை அப்படியே செய்தார். நாம் விசுவாசத்தோடு தேவனண்டை நெருங்கும் போது; அவருடைய வார்த்தையை நம்பும்போது; அவர் நமக்கு வாக்குக்கொடுத்ததை நிறைவேற்றுவார்; நமக்குப் பலன் அளிக்கிறவராயும் நன்மை செய்கிறவராயும் காணப்படுவார்.
விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான் என்று எபி.11:5-ல் எழுதப்பட்டிருக்கிறது. ஏனோக்கு தன் 65-வது வயதில் மெத்தூசலாவைப் பெற்றான். மெத்தூசலா என்ற பெயரின் அர்த்தம் அவன் மரிக்கும் போது வெள்ளம் வரும் என்பதாய் காணப்படுகிறது. வெள்ளத்தினால் அழிவு வரப்போகிறது என்பது நோவாவுக்கு முன்பாகவே ஏனோக்குக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவன் வெள்ளத்தினால் அழிவு வரப்போகிறது என்பதை விசுவாசித்தான். ஆகையால் அதன்பின்பு 300 வருடங்கள் தேவனோடு சஞ்சரித்தான். தேவனுக்குப் பிரியமான ஜீவியம் செய்தான், தேவனுக்குப் பிரியமானவன் என்ற சாட்சியையும் பெற்றான். ஆகையால் அவனுடைய 365-வது வயதில் வெள்ளத்தினால் அழிவு வருவதற்கு முன்பாகவே கர்த்தர் அவனை எடுத்துக்கொண்டார். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாய் வாழ்வது கூடாதக் காரியம். இனி வெள்ளத்தினால் அல்ல, அக்கினியினால் கர்த்தர் உலகத்தை அழிக்கப்போகிறார். நாம் காண்கிறவைகள் அத்தனையும் அக்கினிக்கு நேராக வைக்கப்பட்டிருக்கிறது என்று வேதம் கூறுகிறது. ஆகையால், அதை விசுவாசித்து நாம் கர்த்தருடைய வருகைக்காய் ஆயத்தப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
கடைசி நாட்களில் சத்துரு நம்முடைய விசுவாசம் ஒழிந்து போவதற்கு அனேக தந்திரங்களைச் செய்கிறான். கர்த்தர்: சீமோன் பேதுருவை நோக்கி, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார் (லூக்கா 22:31,32). ஆனால் நம்முடைய விசுவாசம் ஒழிந்து போகாதபடி நமக்காய் வேண்டுதல் செய்கிற கர்த்தர் பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கிறார். ஆகையால் நம்முடைய விசுவாசம் நமக்குள்ளாய் பெருகும். தேவனுக்குப் பிரியமானவர்கள் என்ற நற்சாட்சியைப் பெறுகிற பாத்திரங்களாக நாம் காணப்படுவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar

