மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலை பெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் (ஏசாயா 54:10).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4UCpEjaO8_A
மனதுருக்கம் என்ற வார்த்தைக்கு இரக்கம் பாராட்டுவது என்பது அர்த்தமாயிருந்தாலும், அந்த வார்த்தையின் எபிரேய பதத்தின் அர்த்தமானது தாயின் கருப்பையைக் குறிக்கிறது. ஒரு ஸ்தீரி தன் கர்ப்பத்தின் பாலகனுக்குப் பாராட்டுகிற ஆழமான அன்பிற்கு ஒத்ததாகக் காணப்படுகிறது. ஒருநாள் இரண்டு ஸ்தீரிகள் ஒரு குழந்தைக்கு உரிமை கொண்டாடி சாலொமோன் ராஜாவிடம் வந்து வாதாடின வேளையில், அவன் ஒரு பட்டயத்தைக் கொண்டுவாருங்கள், பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதியை அவளுக்கும் கொடுங்கள் என்று சொன்னான். அப்போது உயிரோடிருந்த பிள்ளையின், உண்மையான தாயின் குடல் தன் பிள்ளைக்காய் துடித்தது, ஆகையால் பிள்ளையைக் கொல்லவேண்டாம், அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள், மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்துபோடுங்கள். அந்த உண்மையான தாயைப் போலத் தேவன் நம்மேல் கொண்ட அன்பின் நிமித்தம் அவருடைய உள்ளம் நமக்காகப் பொங்கும். எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது, என் இரக்கங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது என்றார். லாசரு மரித்த வேளையில், மரியாள் அழுகிறதையும் அவளோடே கூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே அவரும் கலங்கித்துயரமடைந்து, கண்ணீர் விட்டார். இயேசு திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தோய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம் என்றார். கர்த்தருடைய பிள்ளையே, அவர் உங்கள் மேல் மனதுருக்கம் கொண்டவர்.
மலைகளும், பர்வதங்களும் தானாக ஒருநாளும் நிலை பெயர்ந்து விலகுவதில்லை. நோவாவின் நாட்களில் ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று. ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது. பின்பு தண்ணீர் வற்றினது, ஆனால் பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று என்று வேதம் கூறுகிறது. அத்தனை நாட்கள் ஜலம் மலைகளுக்கு மேல் நின்றும் மலைகள் அழிந்துபோகாமலும் நிலை பெயராமலும் காணப்பட்டது. ஒருவேளை மலைகள் விலகி, பர்வதங்கள் கூட நிலை பெயர்ந்தாலும், கர்த்தருடைய கிருபை உங்களைவிட்டு ஒருநாளும் விலகாது, அவருடைய சமாதானத்தின் உடன்படிக்கை நிலை பெயராது, அதற்குக் காரணம் உங்கள் மேல் கர்த்தர் கொண்ட மனதுருக்கமாய் காணப்படுகிறது. பெலகீனப்பட்டுப் போனீர்களோ, அவருடைய மனுதுருக்கம் உங்களைத் தொட்டு விடுதலையாக்கும். எனக்கு இரக்கம் பாராட்ட யாருமில்லை என்று கலங்குகிறீர்களோ, அவருடைய மனதுருக்கம் உங்களை சந்திக்கும்.
தகுதியில்லாதவனுக்குக் கர்த்தர் கொடுக்கிற ஈவுதான் கிருபையாய் காணப்படுகிறது. ஆட்டிடையனாய் காணப்பட்ட தாவீதுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. அவனை அரியணையில் அரசனாக அமரவைத்தார், அந்த கிருபையின் மேன்மையை நினைத்து இதற்கு நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம் என்று நன்றியோடு கூறினான். கர்த்தருடைய பிள்ளைகளே, அவருடைய கிருபை உங்களை வாழவைக்கும், உயர்த்தும், உங்களை கனத்திற்குரிய பாத்திரமாய் வனையும். அதுபோல கர்த்தர் உங்களோடு செய்திருக்கிற சமாதானத்தின் உடன்படிக்கை ஒருநாளும் நிலை பெயருவதில்லை. அதற்குக் காரணம் அவர் உங்கள் மேல் கொண்ட அன்பு மலைகளையும், பர்வதங்களையும் பார்க்கிலும் உயர்ந்தது. நீங்கள் மலைகளைப் போல நம்புகிற மனிதர்கள் உங்களைக் கைவிடலாம், ஆனால் கர்த்தர் உங்களை ஒருநாளும் கைவிடுவதில்லை, அவருடைய அனாதி சிநேகம் கடைசி பரியந்தமும் உங்களை நடத்தும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar

