கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார், அவர் தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவருமானவர் (1 சாமு. 2:7).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/1eq8wUdQHgo
கர்த்தர் அன்னாளுடைய வேண்டுதலைக் கேட்டு அவளுக்கு சாமுவேல் என்னும் குமாரனைக் கொடுத்தார். அவனைப் பால் மறக்கப்பண்ணின பின்பு, அவள் கர்த்தரோடு செய்த பொருத்தனையின்படி அவனைக் கொண்டு கர்த்தருடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய ஏலியிடம் விட்டாள். அதன்பின்பு அவள் இருதயம் கர்த்தருக்குள் களிகூர்ந்து அவரை துதித்த வேளையில், கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார், அவர் தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவருமாயிருக்கிறார் என்று துதித்தாள்.
சோம்பல் தரித்திரத்தைக் கொண்டு வரும், சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும் என்று நீதி.6:9-11ல் எழுதப்பட்டிருக்கிறது. வீணரைப் பின்பற்றுகிறவன் வறுமையால் நிறைந்திருப்பான் என்றும் புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான் என்றும் வேதம் எச்சரிக்கிறது. ஆனால் உத்தமமாய் கர்த்தரை பின்பற்றுகிறவர்கள் கூட சில வேளைகளில் தரித்திரத்திலும் கஷ்டத்திலும் காணப்படுவது உண்டு. தேசத்தில் எளியவன் இல்லாமலிருப்பதில்லை என்றும் வேதம் கூறுகிறது. தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள் என்று இயேசுவும் கூட மத். 26:11ல் கூறினார். ஆண்டவரும் கூட தலைசாய்க்க இடமில்லாதவராய் காணப்பட்டார்.
சிலவேளைகளில் கர்த்தரே தரித்திரம் அடையும் படிக்குச் செய்கிறார். ஏலியின் குமாரர்களாகிய ஓப்னி, பினகாஸ் அவர்களுடைய பாவம் கர்த்தருடைய சன்னிதியில் மிகவும் பெரியதாயிருந்தது. அவர்கள் தேவனுடைய பலியையும், காணிக்கைகளையும் துச்சமாய் மதித்தார்கள், ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூடிவருகிற ஸ்தீரிகளோடும் பொல்லாததை நடப்பிக்கிறவர்களாகவும், தகப்பன் சொல்லைக் கேளாதவர்களாகவும் காணப்பட்டார்கள். ஏலியும் அவர்களுடைய தவற்றைக் கண்டும் காணாதவன் போல் காணப்பட்டு, கர்தத்தரைப் பார்க்கிலும் தன் குமாரர்களை மதித்தான். ஆகையால் கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் ஏலியிடம் வந்து, உன் வீட்டாரில் மீதியாயிருப்பவன் எவனும் ஒரு வெள்ளிப்பணத்துக்காகவும் ஒரு அப்பத்துணிக்கைக்காகவும கெஞ்சுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். கர்த்தர் ஏலியின் குடும்பத்தாருக்கு அவர்கள் பாவங்களினிமித்தம் தரித்திரத்தையும் அழிவையும் கட்டளையிட்டார். கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், துணிகரமான பாவங்களைச் செய்யும் போதும், கர்த்தருடைய காரியங்களை அற்பமாக எண்ணும் போதும் தரித்திரம் உங்களைப் பிடிக்கும், கடன் தொல்லைகள் உங்களைச் சூழ்ந்து கொள்ளும் என்பதை ஏலியின் குடும்பத்திலிருந்து கற்றுக் கொள்ளுகிறோம். அதுபோல ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை தருகிற கர்த்தரை மறந்து, என் சாமார்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று இருதயத்தில் சொல்லும் போது, கர்த்தர் உங்கள் மேட்டிமைகளினிமித்தம் உங்களைத் தாழ்த்தி தரித்திரமடையும் படிக்குச் செய்வார். ஒருநாள் நேபுகாத்நேச்சார், பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்றான், இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. மனுஷரினின்று தள்ளப்படுவாய், வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய், மாடுகளைப்போல் புல்லை மேய்வாய் என்று கூறிற்று, அவனுடைய வாழ்க்கையில் அப்படியே சம்பவித்தது. நமக்கு நன்மை செய்து நம்மை உயர்த்துகிற கர்த்தரை மறக்கும் போது, அவர் நம்மைத் தாழ்த்துகிறவர்.
கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான், அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும் என்றும் வேதம் கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்குப் பயந்து ஜீவிக்கும் போது அவர் உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது, அவரிடத்தில் பட்சபாதமில்லை. அவர் வேதனையில்லா ஆசீர்வாதங்களை உங்களுக்குத் தருகிறவர். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார், அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார் என்றும் வேதம் கூறுகிறது. ஆகையால் உங்கள் சிறுமையைக் கண்டு சோர்ந்து போகாதிருங்கள். கர்த்தருக்குப் பயந்து அவரை சேவியுங்கள். அப்போது ஐசுவரிய சம்பன்னர் உங்களை ஆசீர்வதித்து மகிழப்பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar

