போர்வையை விரித்துப்பிடி :-

ரூத் 3:15. அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப் பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/y7MNm-UXorw

ரூத் என்பவள் காலையிலிருந்து சாயங்காலமட்டும் வயல்வெளியில் கதிர் பொறுக்கிக்கொண்டிருந்தாள். கடுமையாக வேலை செய்து அவள் ஒரு மரக்கால் வாற்கோதுமையை சம்பாதித்தாள். இந்நாட்களில் ஒரு நாள் வேலையென்பது சுமார் எட்டு மணி நேரமாய் காணப்படுகிறது. சிலருக்கு பத்து மணி நேரம், சிலருக்கு பன்னிரண்டு மணி நேரம் வேலையாய் காணப்படுகிறது. ரூத் குறைந்தது எட்டு மணி நேரமாவது வேலை செய்து ஒரு படி வாற்கோதுமையை சம்பாதித்தாள். அநேக வேலைகளில் அதிகமாய் எதிர்பார்த்தும் கொஞ்சம் தானே வந்தது என்று சொல்பவர்கள் உண்டு. ஒரே நிறுவனத்தில் அதிக வருடங்கள் வேலை செய்து குறுகிய சம்பள உயர்வுதான் எனக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்பவர்கள் அநேகர் உண்டு.

பின்பாக ரூத் போவாசின் போர்வைக்குள்ளாக தஞ்சமடைய தன்னை அர்பணித்துக்கொண்டு அவனுடைய போர்வையின் கீழ் கடந்து சென்றாள். போவாசின் செட்டைகளுக்குள்ளாக ஆரோக்கியம் உண்டு என்பதைக்கண்டு அவனிடம் கடந்து சென்றாள். ரூத் என்பவள் மணவாட்டி சபையாகிய நமக்கு அடையாளமாக காணப்படுகிறது. அதேபோல,போவாஸ் என்பவன் பரலோக போவாசகிய இயேசுவுக்கு அடையாளமாக காணப்படுகிறான். ரூத் போவாசை தன் தஞ்சமாக நினைத்து அவனிடம் கடந்து சென்றபோது, அவளுக்கு போவாசின் கண்களில் தயவு கிடைத்தது. அப்பொழுது போவாஸ் சொன்னான் உன் போர்வையை விரித்துப்பிடி என்பதாக. ரூத்தும் விசுவாசத்தோடு தன்னுடைய போர்வையை விரித்து பிடித்தாள். அப்பொழுது போவாஸ் ஆறு படி வாற்கோதுமையை அளந்து அவள் மடியில் போட்டான். ரூத்திற்கு எதிர்பாராத ஆசிர்வாதம் அவள் வாழ்க்கையில் கடந்து வந்தது. அவள் கடினப்பட்டு வேலை பார்த்தபோது அவள் சம்பாதித்தது வெறும் ஒரு படி கோதுமை; ஆனால் போவாசை தன் தஞ்சமாக கொண்ட பிறகு அவள் போவாசிடம் இருந்து பெற்றுக்கொண்டது ஆறு படி கோதுமை. இப்பொழுது ரூத்திற்கு கிடைத்தது மொத்தம் ஏழு படி கோதுமை. ஏழு என்றாலே பூரணம். உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக (ரூத் 2:12) என்ற வசனத்தின்படி நிறைவான பலனை ரூத் பெற்றுக்கொண்டாள்.

நீங்களும் பரலோக போவாசை தஞ்சமாக கொண்டு அவருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலம் புகுவீர்களென்றால், இயேசு உங்களை பார்த்து சொல்லுகிற காரியம் உன்னுடைய போர்வையை விரித்து பிடி என்பதாக. விசுவாசமென்னும் உன் போர்வையை விரித்து பிடி. ஒரு படி ஆசிர்வாதத்தை, ஒரு படி நன்மையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு பரலோக போவாசாகிய இயேசு உங்களுக்கு ஆறு படி ஆசீர்வாதம், ஆறு படி நன்மை என்று அளந்து போட்டு, மொத்தம் ஏழு படி ஆசீர்வாதங்களை உங்கள் வாழ்க்கையில் கட்டளையிட்டு உங்களுக்கு நிறைவான பலன் உண்டாகும்படி உங்களை ஆசிர்வதித்து கர்த்தர் மகிழப்பண்ணுவார். எந்த சூழ்நிலையில் இருந்தாலும் இயேசுவின் மீது வைத்திருக்கும் உங்கள் விசுவாசம் இன்று விருத்தியடையட்டும். விசுவாசத்தோடு உங்கள் போர்வையை விரித்துப்பிடியுங்கள். கர்த்தர் உங்களை மகிழப்பண்ணுவார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org