பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேரே விருப்பமில்லை(சங். 73:25).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/iwy-2t-MYug
சங்கீத புஸ்தகத்தில் ஆசாபின் சங்கீதங்கள் பன்னிரண்டு காணப்படுகிறது. ஆசாபும் அவன் குமாரர்களும் ஆராதனை நடத்துகிறவர்களாகவும், நல்ல பாடகர்களாகவும், இசைக்கருவிகளை வாசிக்கிறவர்களாகவும், பாடல்களை இயற்றுகிற கவிஞர்களாகவும், தீர்க்கதரிசிகளாகவும் காணப்பட்டார்கள். ஆசாபின் ஆவிக்குரிய பிள்ளைகளை இந்நாட்களிலும் திரளாய் சபைகளில் பார்க்கமுடிகிறது. அவர்கள் பாடுகிறவர்களாகவும், இசைக்கருவிகளை வாசிக்கிறவர்களாகவும் மட்டும் இருந்தால் போதாது, தீர்க்கதரிசிகளாயும் எழும்ப வேண்டும். ஆசாப் தன்னுடைய தாலந்துகள் யாரிடத்திலிருந்து வந்தது என்பதை அறிந்திருந்தான், ஆகையால் அவைகளைத் தந்த ஆண்டவரை தன்னுடைய தாலந்துகளால் மகிமைப்படுத்தினான். அவனுடைய வாஞ்சையும் விருப்பமும் ஆண்டவர் பேரில் முழுவதுமாய் காணப்பட்டது, எனக்கோ உம்மை அண்டிக்கொண்டிருப்பதே நலம், உமது கிரியைகளையெல்லாம் சொல்லி வரும்படி உம்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன் என்றும், பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேரே விருப்பமுமில்லை என்று தன்னுடைய இருதயத்தை வெளிப்படுத்துகிறவனாய் காணப்பட்டான்.
பரலோகத்தில் அனேக ஆயிரம் தூதர்கள், இருபத்துநான்கு மூப்பர்கள், நான்கு ஜீவன்கள், திரளான பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் காணப்பட்டிருந்தும், அதின் வீதியெல்லாம் சுத்த பொன்னாயிருந்தும், மணவாளனுக்காய் அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போலிருந்தும், பளிங்குக்கு ஒப்பான ஜீவதண்ணீருள்ள நதிக் காணப்பட்டிருந்தும், பன்னிரண்டு விதமான கனிகளைத் தரும் ஜீவவிருட்சமிருந்தும், ஆசாப் கூறுகிறான் பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு என்று. நித்தியரைக் குறித்த வாஞ்சையும், நித்திய வீட்டைக்குறித்த வாஞ்சையும் அவனுக்குள்ளாக அதிகமாகக் காணப்பட்டது. கர்த்தருடைய பிள்ளைகளே உங்கள் வாஞ்சையும் தாகமும் எதின்மேல் இந்நாட்களில் காணப்படுகிறது. இயேசுவே உங்கள் வாஞ்சையாய் காணப்படுகிறாரா? அவருடைய சமூகம் உங்களுக்குப் பிரியமாய் காணப்படுகிறதா? சூலமித்தி நேசர் மேல் கொண்ட வாஞ்சையின் நிமித்தம், காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார், அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது. என்னை விருந்து சாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்@ என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே. திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள், நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்றாள். நேசர் மேலும், அவருடைய நித்திய வீட்டைக் குறித்த வாஞ்சையும் நமக்குள்ளாய் பற்றியெரியட்டும். இந்நாட்களில் காணப்படுகிற விசுவாசிகளுக்குப் பரலோகம் என்று ஒன்று இருக்கிறதா என்பதே சந்தேகமாய் காணப்படுகிறது. ஆகையால்தான் அதற்குரிய ஆயத்தங்களைச் செய்யாதவர்களாய் காணப்படுகிறார்கள்.
ஆசாபிற்கு தேவன் பரலோகத்தின் நம்பிக்கை மட்டுமல்ல பூமியிலும் அவரைத் தவிர வேறு விருப்பமும், ஆசையுமில்லை. பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிற கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு எதின்மேல் விருப்பம் காணப்படுகிறது? இயேசுவே நம்முடைய விருப்பமாய் காணப்படுகிறாரா? அவருடைய வார்த்தை தேனிலும் தெளி தேனிலும் மதுரமாய் காணப்படுகிறதா? ஜீவ அப்பம் நானே என்று இயேசு போதித்த வேளையில், இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்று அனேகர் பின்வாங்கிப் போனார்கள். அப்போது ஆண்டவர் சீஷர்களைப் பார்த்து நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களா என்று கேட்டார், அப்போது பேதுரு, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே என்று கூறினான். கர்த்தருடைய பிள்ளைகளே, இயேசுவே உங்கள் விருப்பமாய் காணப்படட்டும். அவரை அண்டி ஜீவியுங்கள், அவரை அறிகிற அறிவில் அனுதினமும் வளருங்கள். அதுவே நித்திய வீட்டில் நிரந்தரமாய் அவரோடு காணப்படுவதற்கு உதவிசெய்யும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar