Savings Accountல் பணம் இருக்கிறதா?

நீதி 6:6-8 சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும், கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/Mao9aupIjpE

ஆண்டவர் எறும்பினிடத்தில் ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார். நாகமானின் குஷ்டரோகம் நீங்கும்படியாக எலிசா தீர்க்கதரிசி யோர்தான் நதியில் ஏழு முறை மூழ்கவேண்டும் என்று சொன்னான். எலிசா சொன்ன இந்த இலகுவான காரியத்தில் நாகமனுக்கு சம்மதம் இல்லை. அப்பொழுது வேலைக்காரன் சொல்லுவான் எலிசா பெரிய காரியங்களை செய்ய சொன்னால் நீ செய்திருப்பீர். யோர்தானில் மூழ்குவது என்பது இலேசான காரியம் தானே என்று அவனுக்கு தகுந்த ஆலோசனையை கொடுத்தான். இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள். அவைகள் உனக்கு அறிவிக்கும் (யோபு 12:7) என்று யோபு சொல்லுகிறார். பெரிய உயிரினமான டைனசோர், ஜுராசிக் போன்ற உயிரினங்கள் மூலம் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னால், அது நமக்கு பிடிக்கும் காரணம் அது பெரிய உயிரினம். இப்படியிருக்க கர்த்தர் சொல்லுகிறார் எறும்பு எல்லா உயிரினங்களிலும் சிறியதாக இருந்தாலும் அதினிடத்திலிருந்து ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று. இயேசு பரலோக இராஜ்யத்தை குறித்து பேசும்போதும் சிறுபிள்ளைகளை போல மனம் திரும்ப வேண்டும் என்று சிறுபிள்ளைகளை முன்மாதிரியாக வைத்தார். ஆகையால் யாரையும் எந்த உயிரினங்களையும் நாம் அற்பமாய் எண்ணிவிடக்கூடாது.

பள்ளிக்கூடங்களில் எறும்பை வைத்தும், சிலந்தி பூச்சியை வைத்தும் நாம் நம்முடைய வாழ்க்கையில் அநேக காரியங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பார்கள். எறும்பிற்கு இருந்த நல்ல சுபாவம் அது சுறுசுறுப்பான உயிரினம் மாத்திரமல்ல, ஞானத்துடன் தன்னுடைய தானியத்தை சேகரித்து வைக்கும். நமக்கும் சேமித்துவைக்கும் நல்ல பண்பும் ஞானமும் இருக்க வேண்டும். ஒருவர் சொன்னார் சம்பளம் எனக்கு எல்லா மாதமும் முதல் தேதியில் வரும்; ஆனால் ஐந்தாம் தேதிக்குள் எல்லா சம்பளமும் செலவழிந்து போய்விடும் என்பதாக. இருசக்கர வாகனத்திற்கு Loan, வீடு கட்ட Loan, வட்டிக்கு கடன், வாடகை செலவு, நண்பர்களுடன் கேளிக்கை பொழுதுபோக்கு செலவு என்று எல்லாம் முதல் வாரத்திலேயே செலவழிந்து விடும் என்று சொன்னார். சிலர் தாங்கள் மற்ற உறவினர்களுக்கு , நண்பர்களுக்கு முன்பாக தாராள பிரபுவை போல காட்டி கொள்ளவேண்டும் என்று எண்ணி வீணாக அவர்களுக்கு செலவு செய்வது, வீணாக கடன் கொடுப்பது, வீணாக தகாத பொருட்களை வாங்குவது என்று தங்களை தானே குழியில் போட்டுக்கொள்ளுவார்கள். ஒருவர் சொன்னார் என்னுடைய வங்கியில் வெறும் பெயரளவில் தான் சேமிப்பு கணக்கு இருக்கிறது. ஆனால் அதில் போதிய சேமிப்பு இல்லை என்று சொன்னார்.

நாம் ஞானத்துடன் எறும்பை போல வாங்குகிற சம்பளத்தின் ஒரு பகுதியை சேமித்து வைக்கவேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். மணவாளன் வரும்போது எண்ணெய் இல்லாதிருந்த புத்தியில்லாத ஸ்திரீகளை போல, தேசத்தில் பஞ்சம் வரும்போது வேண்டிய பணம் நம்முடைய வங்கி சேமிப்பு கணக்கில் பணம் இல்லாமல் இருக்க கூடாது. வாங்குகிற சம்பளத்தில் இராயனுக்குரியதை இராயனுக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்திய பிறகு, உங்கள் அத்தியாவசிய காரியங்களுக்கு மாத்திரம் பொருட்களை வாங்கி, செய்ய தக்கவர்களுக்கு மாத்திரம் நன்மைகளை செய்து, கட்டாயம் மீதமுள்ள பங்கை மாதந்தோறும் சேமித்து வைக்கும் பழக்கம் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஞானத்தை எறும்பினிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். எறும்பிற்கு மேற்பார்வையிட பிரபுவும், தலைவனும், அதிகாரி போன்ற யாரும் இல்லாதிருந்தும், கடினமாக உழைத்து தானியத்தை சேர்த்து வைக்கும். கர்த்தருடைய பிள்ளைகளும் கடினமாக உழைத்து, ஞானத்துடன் சம்பாத்தியத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்று கர்த்தர் ஞானியின் மூலம் ஆலோசனை வழங்குகிறார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org