உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர், உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது, உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும் (சங். 18:35).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/U8Ku6nlv0Zs
வாழ்க்கையில் உயர்வடையவேண்டும் என்பது அனைவருடைய விருப்பமாகும். சிலவேளைகளின் படிப்பும், அனுபவமும், அறிவும் அதற்கு உதவியாய் காணப்படுகிறது. ஆனால் கர்த்தருடைய காருணியம் உன்னைப் பெரியவனாக்கும் என்று வேதம் கூறுகிறது. உங்களோடு படித்தவர்கள், நல்ல புத்திக் கூர்மையுடையவர்கள் இன்று தாழ்ந்த நிலையில் காணப்படும் போது, கர்த்தர் உங்களை உயர்ந்த நிலையில் அவருடைய காருண்ணியத்தினால் வைத்திருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். அவரை சார்ந்து கொள்ளுகிற அத்தனை பேருக்கும் அவருடைய காருணியம் வெளிப்படும்.
தாவீது இந்தப் பாட்டின் வார்த்தைகளைக் கர்த்தர் தன்னைத் தன்னுடைய எல்லா சத்துருக்களின் கைக்கும் சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்த நாளிலே பாடினான் என்று சங்கீதத்தின் தலைப்பு கூறுகிறது. தாவீதின் வாழ்க்கையில் பல விதங்களில் கர்த்தருடைய காருணியம் வெளிப்பட்டது. அவன் தன் குடும்பத்தாரால் வெறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வனாந்தரத்தில் ஆடுகளுக்குபின்னால் காணப்பட்ட வேளையில் கர்த்தருடைய காருணியம் அவனுக்கு வெளிப்பட்டது. சிங்கத்தின் வாய்க்கும், கரடியின் வாய்க்கும், கோலியாத்தின் கைக்கும் அவன் தப்புவிக்கப்பட்ட வேளையில் கர்த்தருடைய காருணியம் அவனுக்கு வெளிப்பட்டது. ஆகீஸ் என்ற ராஜாவிற்குப் பயந்து தன்னை ஒரு பயித்தியக்காரனைப் போலக் காட்டின வேளையில் கர்த்தருடைய காருணியம் அவனைத் தப்புவிக்கும்படிக்குச் செய்தது. யூதாவின் குடிகள் அவனை எப்ரோனிலே ராஜாவாக்கின வேளையிலும், பின்னாட்களில் அனைத்து இஸ்ரவேல் கோத்திரங்களும் இணைந்து அவனைச் சமஸ்த இஸ்ரவேலின் மேல் ராஜாவாக்கின வேளையிலும் கர்த்தருடைய காருணியம் அவனுக்கு வெளிப்பட்டது. அதுவே அவனைப் பெரியவனாக்கிற்று, பூமியிலுள்ள பெரியோருக்கு ஒத்த நாமத்தைக் கொடுத்தது.
கர்த்தருடைய பிள்ளைகளே, அனேக வேளைகளில் நீங்கள் கர்த்தரை விட்டு வழி விலகிச் சென்றபோது கூட கர்த்தருடைய காருணியமே உங்களை அவரண்டை இழுத்துக் கொண்டது என்பதை மறந்து விடாதிருங்கள். அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன் என்று எரே.31:3 கூறுகிறது. அவருடைய அன்பையும், மனதுருக்கத்தையும், சாந்தத்தையும், தயவையும், காருணியத்தையும் எண்ணி அனுதினமும் காத்தரை மகிமைப் படுத்துங்கள். அப்போது, கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர் என்று சங். 5:2ன் படி மேன்மேலும் அவருடைய காருணியம் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் வெளிப்படும்.
கர்த்தருடைய காருணியம் உங்களை உயர்த்தும் போது அதே தயவை நீங்களும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துங்கள். அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிக்கேய சபை மக்களுக்கு எழுதும் போது, உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம், பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல, நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமில்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களான படியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம் என்றான். அதே பட்சமும், அன்பும் தயவும் உங்கள் மூலம் மற்றவர்களுக்கு வெளிப்படட்டும். அனேக வேளைகளில் விசுவாசிகள் சுயநலவாதிகளாய் காணப்படுகிறார்கள். ஏழைகளைக் குறித்த கரிசனை இல்லை, சபைகள் இல்லாத இடங்களில் சபைகள் தோன்ற வேண்டும் என்ற வாஞ்சை இல்லை, நான் என்குடும்பம் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளாகவே காணப்படுகிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே கர்த்தருடைய காருணியம் உங்களைப் பெரியவனாக்கி வைத்திருக்கும் போது, அதே காருணியம் உங்கள் மூலம் மற்றவர்களுக்கும் வெளிப்படட்டும். அப்போது, இன்னும் அதிகமாய் கர்த்தருடைய காருணியம் உங்களுக்கு வெளிப்பட்டு, நீங்கள் வரவரப் பலக்கும் படிக்குச் செய்யும்
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar