மத் 5:3 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/1lLEmC8-JHA
இயேசு தன்னுடைய மலை பிரசங்கத்தில் வாயைத் திறந்து பேசிய முதல் வார்த்தை ஆவியில் எளிமை வேண்டும் என்பதாக. உலகத்தில் பழமொழி உண்டு வலிமையே வெல்லும் என்று. ஆனால் வேதம் சொல்லுகிறது எளிமையே வெல்லும் என்பதாக. இயேசு மிகவும் எளிமையானவர். அவருக்கு தலை சாய்க்க இடமில்லாதிருந்தது. அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார் (ஏசா 42:2) என்று அவரை குறித்து வசனம் சொல்லுகிறது. இராஜாக்கள் அந்நாட்களில் குதிரைகளில் பயணம் செய்வார்கள்; ஆனால் இயேசு கழுதையின் மேல் பயணம் செய்தார். இன்றைய அரசியல் தலைவர்கள் தங்களுக்கு உயர்ந்த வாகனத்தையே வைத்துக்கொள்ள பிரயாசப்படுகிறார்கள். இயேசுவினுடைய ஊழியமும் மிகவும் எளிமையாக எல்லாரும் புரிந்துகொள்ளத்தக்கதாக இருந்தது. அதுபோல நாமும் நம்முடைய வாழ்க்கையில் எளிமையான வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
வேதத்தை வாசிப்பதில் எளிமை காணப்படவேண்டும். ஒருவர் சொன்னார் நான் வேதாகமத்தை இரண்டு முறை முழுவதுமாக படித்துவிட்டேன், எனக்கு எல்லாம் தெரியும் என்பதாக. வேதத்தை 1000 முறை படித்திருந்தாலும் புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல வேதத்தின் மேல் வாஞ்சையுள்ளவர்களாக படிக்க வேண்டும்.
ஜெபிப்பதில் எளிமை காணப்பட வேண்டும். முழங்காற்படியிட்டு ஜெபிப்பது நம்மை தாழ்த்தி ஜெபிப்பதற்கு அடையாளமாக காணப்படுகிறது. அப்போஸ்தலன் யாக்கோபின் முழங்கால் தடித்து வீங்கிவிட்டது என்று சரித்திரம் சொல்லுகிறது. அந்த அளவிற்கு அவன் முழங்காலில் நின்று ஜெபித்தான். புறமதத்தினர்கூட முழங்கால்படியிட்டு அவர்கள் தொழுகை செய்ய எந்த இடத்திலும் தயங்குவதில்லை. ஆனால் இன்றைய சபையில் அநேக இடங்களில் போதகர் முழங்கால்படியிட்டு ஜெபிப்போம் என்று சொன்னால், எல்லாரும் உட்கார்ந்துவிடுகிறார்கள்.
உடுத்துவதில் எளிமை காணப்பட வேண்டும். மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது (1 பேது 3:3,4). இன்றைய காலத்தில் சுவிசேஷகர்கள், ஊழியக்காரர்கள் தாங்கள் உயர்ந்த மினுக்கான வஸ்திரங்களை உடுத்துவதையே விரும்புகிறார்கள். அநேகர் பார்க்கும்போது அவர்கள் உடுத்தியிருக்கும் உடையும், காலணிகளும் எடுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பிரமாண்டங்கள், பந்தா, பகட்டு போன்றவற்றை அறவே தேவ ஜனங்கள் தவிர்க்க வேண்டும்.
பவுல் சொல்லுகிறான் நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக (கலா 6:14) என்றும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன் (பிலி 3:7,8) என்றும் சொல்லுகிறான். நாமும் அதுபோல எதை செய்தாலும் இயேசு மகிமைப்பட வேண்டும், எல்லாவற்றிலும் இயேசு பெருகவும் நாம் சிறுகவும் வேண்டும் என்ற சிந்தையில் ஆவியில் எளிமையுள்ளவர்களாய் இருப்போம். அப்பொழுது பரலோக இராஜ்யத்தை நாம் சுதந்தரித்துக்கொள்ளுவோம்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org