தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியுங்கள்.

அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய், தேவனுக்கு  ஏற்றவைகளைச்  சிந்தியாமல் மனுஷருக்கு  ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார் (மத். 16:23).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/QoVEgM8U12g

நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று இயேசு தன்னுடைய சீஷர்களைப் பார்த்துக் கேட்ட போது,     பேதுரு நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். அப்பொழுது அவர்,     தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய  சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். சீஷர்களுக்குள் தன்னைக்குறித்து மேசியா என்ற வெளிப்பாடு வந்ததுமுதல் இயேசு தாம் எருசலேமுக்குப்போய்,     மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு,     கொலையுண்டு,     மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினார். உடனே பேதுரு,     ஆண்டவரிடம் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லுவது போல அவரைத் தனியே அழைத்துக் கொண்டு போய்,     தன்னை ஆண்டவருடைய ஆலோசனைக் காரனாகக் காட்டி,     இது உமக்கு நேரிடக்கூடாதே,     இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். யார்,     யாரைக்  கடிந்துகொள்ளுவது? சாதாரண ஒரு மனுஷன் சர்வலோகத்தையும் வார்த்தையினால் சிருஷ்டித்த வல்லமையுள்ள தேவனைக் கடிந்துகொள்ள முயல்கிறான். இயேசு திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ,     சாத்தானே,     நீ எனக்கு இடறலாயிருக்கிறாய் என்றார். யூதாஸைக் குறித்து கர்த்தர் கூறும் போது கூட உங்களில் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றாரே ஒழிய பேதுருவைப் போல அப்பாலே போ சாத்தானே என்று கடிந்து கொள்ளவில்லை,     நீ எனக்கு இடறலாயிருக்கிறாய் என்றும் கூறினார்.

இயேசுவைப் பற்றிய கொஞ்சம் வெளிச்சம் பேதுருவுக்குள் வந்த உடன்,     அவர் மேசியா என்று தேவனால் வெளிப்படுத்தப் பட்டு அதை அறிந்தவுடன்,     அவனுடைய வெளிப்பாட்டைக் குறித்து ஆண்டவரும் மெச்சினபோது,      இயேசு இந்த பூமியில் வந்த நோக்கத்தையே தடைசெய்யும் படிக்கு முயல்கிறான். இந்நாட்களிலும் இயேசுவைப் பற்றி,     அவருடைய வார்த்தையைப்பற்றிய கொஞ்சம் வெளிச்சம்  கிடைத்த உடன்,     எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக்கொண்டு திரிகிற திரளான ஊழியர்களும்,     விசுவாசிகளும் உண்டு. ஆகையால் வரங்களையும்,     கிருபைகளையும்,     தாலந்துகளையும்,    ; நாம் பெற்றுக் கொள்ளும் போது,     இன்னும் நம்மை ஆண்டவருக்கு முன்பாக தாழ்த்த கற்றுக் கொள்ளவேண்டும். பொதுவாக ஆண்டவர் கிருபைகளையும்,     ஈவுகளைக் கொடுக்கும் போது,     அதைத் திருப்பி எடுப்பதில்லை. ஆகையால்தான் இந்நாட்களில் விழுந்துபோன நிலையிலிருந்தும் அனேகர் நாங்கள் இன்னும் தேவசித்தத்தில் காணப்படுகிறோம் என்று தவறாக நினைத்துக் கொண்டு ஊழியம் செய்கிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே,     தேவ சித்தத்தின் மையத்தில் காணப்படுகிற ஒரு நபரை எப்படி அறிந்து கொள்ளுவது,     கிறிஸ்து இயேசுவின் சாயலில் கொஞ்சம் கொஞ்சமாக அவர் மாறுவதை வைத்துத்தான் அறிந்து கொள்ள முடியும். அவருடைய கனியுள்ள வாழ்க்கையிலிருந்துதான் அறிந்து கொள்ள முடியும். 

இயேசு பேதுருவைப் பார்த்து,     அப்பாலே போ சாத்தானே என்று கடிந்துகொண்டதுமின்றி,     நீ தேவனுக்கு  ஏற்றவற்றை  சிந்தியாமல் மனுஷருக்கு  ஏற்றவற்றை சிந்திக்கிறாய் என்றும் கூறினார். நாம் தேவனுக்கேற்றவைகளை சிந்திப்பதற்குப் பதிலாக,     மனிதனுக்கேற்றவைகளை சிந்திக்கும்படிக்குச் சாத்தான் செய்கிறான். மனிதர்களைக் கவர்ந்துகொள்ளுவதற்கும்,     அவர்களுக்குப் பிரியமானதைச் செய்யும்படிக்குத் தூண்டுகிறான். இன்று அனேக ஊழியர்களுக்குள் ஜனங்களைக் கவர்ச்சிப்பது எப்படி என்பது தான் பெரிய நோக்கமாய் காணப்படுகிறது. அதற்கென்று எப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை சபையில் செய்யலாம் என்பது எண்ணமாகக் காணப்படுகிறது. ஜனங்களும் அப்படிப்பட்ட இடங்களைத் தான் விரும்பும் படிக்குச் சத்துரு செய்கிறான். சவுல் ராஜா ஜனங்கள் சிதறிப்போகாமல் தன்னோடு காணப்படும் படிக்கு,     ஆசாரியர்கள் செலுத்தவேண்டிய பலிகளை அவனே செலுத்தினான். சாமுவேல் தீர்க்கதரிசிக்காகக் காத்திருக்க அவனுக்கு மனமில்லை. அவனுக்கு ஜனங்களை தன்னோடு வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் காணப்பட்டதே ஒழிய தேவச்சித்தத்தைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லை. ஆகையால் ராஜாங்கத்தை இழந்தான். கர்த்தருடைய பிள்ளைகளே,     தேவனுக்கேற்றவைகளை சிந்தியுங்கள்,     உன்னதங்களுக்குரிய மேலானவற்றை நாடுங்கள்,     மனுஷருக்கு ஏற்றவற்றை சிந்தித்து,     பிசாசிற்கு இடம் கொடாதிருங்கள்,     அப்போது கர்த்தர்  உங்களை ஆசீர்வதித்து  உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar