தேடும் இரட்சகர் (Seeking Saviour).

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார் (லூக்கா 19:10). 

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/gzZrsD0SP6k

ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரிய வானுமாயிருந்த  சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன் இயேசு எப்படிப்பட்டவர் என்பதை அறிய விரும்பி அவரைப் பார்க்க வகைதேடினான்.  சகேயு என்ற பெயரின் அர்த்தம்,     சுத்தமானவன் என்பதாகும்,     ஆனால் அவனோ சுத்தமானதும்,     உண்மையானதையும் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்தான். சிலர் நல்ல வேதாகமப் பெயர்களை வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கைக்கும் பெயருக்கும் எந்த பொருத்தமும் இருப்பதில்லை.  சகேயு  வரிவசூலிப்பவர்கள் எல்லாருக்கும் தலைவனாகக் காணப்பட்டான்,     இவர்கள் ரோமர்களின் கைக்கூலிகளாய் காணப்பட்டதினால்,     யூதர்கள் இவர்களை  முழுவதுமாய்  வெறுத்தார்கள். 

ஒருநாள் இயேசு எரிகோவின் வழியாய் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டவுடன் இயேசு எப்படிப்பட்டவரோ என்பதையறிய அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குள்ளாய் வந்தது. கர்த்தருடைய பிள்ளைகளே,     இயேசு எப்படிப்பட்டவர்,     அவர் இரட்சிக்கிறவர்,     விடுவிக்கிறவர்,     நோய்களிலிருந்து விடுதலை தருகிறவர்,     அவர் மனதுருக்கம் உள்ளவர்,     நன்மை செய்கிறவர்,     கிருபையுள்ளவர் என்று அவரைக் குறித்து கூறிக்கொண்டுபோகலாம். சகேயு குள்ளனாய் காணப்பட்டதினால்,     கூட்டத்திற்கு முன்பாக ஓடி,     ஒரு காட்டத்தி மரத்தின் மேல் ஏறியிருந்து இயேசுவின் வருகைக்காய் காத்திருந்தான். அவன் ஐசுவரிய வானாயிருந்தும்,     ஒரு தலைவனாகக் காணப்பட்டிருந்தும்,     அவனுடைய அந்தஸ்து எல்லாவற்றையும் விட்டு,     இயேசுவைக் காண வேண்டும் என்ற வாஞ்சையால்,     தன்னைத் தாழ்த்தி,     அத்தி மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டான். கர்த்தருடைய பிள்ளைகளே,     இயேசுவண்டை வரும்போது நம்முடைய மேன்மைகளையெல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு,     தாழ்மையோடு அவரைத் தேடி வரவேண்டும். இயேசு எங்கும் நிறைந்திருப்பவர்,     எல்லாம் அறிந்தவர்,     சர்வ வல்லமையுள்ளவர். அவர் அத்தி மரத்தின் கீழ்வந்து,     அண்ணாந்து பார்த்து,     அவனைக் கண்டு: சகேயுவே,     நீ சீக்கிரமாய் இறங்கிவா,     இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். எங்கும் நிறைந்திருக்கிற ஆண்டவருடைய கண்களுக்கு மறைவாய் யார்தான் தன்னை ஒளித்துக் கொள்ளமுடியும். ஆகையால் நான் செய்வது ஆண்டவருக்குத் தெரியாது என்று ஒருநாளும் நினைத்துவிடாதிருங்கள். அவர் உங்கள் ஒவ்வொருவருடைய உட்காருதலையும்,     எழுந்திருக்குதலையும் அறிந்தவர். ஆண்டவர் சகேயுவைப் பார்த்து இறங்கி வா என்றவுடன் தன் வாழ்க்கையின்  எல்லாநிலைகளிலிருந்தும் அவன்  இறங்கிவருகிறவனயாய் காணப்பட்டான். சிலர்  ஆண்டவரண்டை நெருக்கி வருவதற்கு ஐசுவரியம்,     உயர்ந்தவேலைகள்,     உயர்படிப்புகள்,     குலம் கோத்திரங்கள்,     பாரம்பரியங்கள் தடையாய் காணப்படுவதுண்டு. இயேசு அவன் வீட்டில் தங்கவேண்டும் என்றும் கூறியது,     அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. எல்லாரும் பாவி என்று ஒதுக்கின தன்வீட்டில் தங்கும் படிக்கு வருகிறேன் என்ற ஆண்டவரின் அன்பின் மேன்மை அவனைத் தொட்டது. இயேசுவின் முகத்தைப் பார்த்தவுடன் அவனுடைய வாழ்க்கையே மாறினது. 

சகேயு நின்று,     கர்த்தரை நோக்கி: ஆண்டவரே,     என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன்,     நான் ஒருவனிடத்தில்  எதையாகிலும்  அநியாயமாய் வாங்கின துண்டானால்,     நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். உடனே இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு உன் வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது,  நீ  ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறாய் என்றார். ஆண்டவரோடு ஏற்பட்ட ஒரு சந்திப்பு சகேயுவின் வாழ்க்கையை தலைகீழாய் மாற்றியது,     பாவியாய் காணப்பட்டவன்  இரட்சிப்படையும்படிக்குச் செய்தது,     மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுக்கும் படிக்குச் செய்தது,     ஆபிரகாமின் குமாரனாய்,     அதன் மூலம் இயேசுவின் பிள்ளையாய் மாற்றியது. கர்த்தருடைய பிள்ளைகளே,     சகேயுவைப் போல உங்கள் வாழ்க்கையில் இயேசுவோடு உண்மையான சந்திப்பு (Encounter) ஏற்பட்டதுண்டா? இயேசுவோடு காணப்படுகிற உறவு உங்கள் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியதுண்டா? கனியுள்ள ஜீவியம் காணப்படுகிறதா? அவைகளிலிருந்து தான் இயேசு நம்வாழ்க்கையை சந்தித்திருக்கிறார் என்பதை அறியமுடியும்.  சகேயுவை போலக் காணாமல் போனவர்களைக் கர்த்தருடைய கண்கள் இன்றும் தேடுகிறது. அப்படிப்பட்டவர்களை ஆபிரகாமின் பிள்ளைகளாக்கி, ஆபிரகாமின் ஆசீர்வாதங்களைக் கொடுக்க விரும்புகிறார். ஆகையால் இதுவரைக்கும் உங்கள் வாழ்க்கையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கவில்லையென்றால் இன்றைக்கே கொடுத்துவிடுங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar