நீயும் நானும் மட்டும் (You & Me Only) :-

மத் 6:6 நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/aMh2dOx3FpU

தேவனோடு நாம் தனித்திருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். லியோனார்டு ரேவென்ஹில் என்ற தேவமனிதர் இப்படியாக சொன்னார்: பெரிய கழுகுகள் தனித்து பறக்கும், பெரிய சிங்கங்கள் தனித்து வேட்டையாடும், பெரிய மனிதர் தனித்து நடப்பார் என்பதாக. யோவான் ஸ்நானகன் வனாந்திரத்திலே கர்த்தரோடு தனித்திருந்தான். ஆகையால் தான் அவனைக்குறித்து வேதம் “தேவனால் அனுப்பப்பட்ட மனிதன் இருந்தான் (யோவா 1:6)” என்று அறிமுகம் செய்கிறது. நாம் தேவனோடு தனித்திருக்கும் அனுபவத்தில் ஒவ்வொருநாளும் இல்லை என்றால் எங்கேயும் தேவனால் நாம் அனுப்பப்பட்ட மனிதர்களாக இருக்கமுடியாது. இந்நாட்களில் ஊழியக்காரர்களுக்கும் இது பொருந்தும். தேவனோடு தனித்து நேரம் செலவழிக்காமல் கூப்பிடுகிற இடங்களுக்கெல்லாம் போகிற ஊழியக்காரர்களும், தேவனால் அனுப்பப்படாத இடங்களுக்கு செல்கிற ஊழியக்காரர்களாகவும், அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா சிங்கப்பூர் மலேசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு மாத்திரம் ஆதாயத்திற்காக செல்லும் ஊழியக்காரர்களை போலவும், சுவிசேஷம் விதைக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் மீண்டும் சுவிசேஷம் விதைக்கும் ஊழியக்காரர்களாகவும் இந்நாட்களில் அநேக ஊழியக்கார்கள் இருக்கிறார்கள். அதை ஆதரிக்கிற திரளான விசுவாச கூட்டமும் இந்நாட்களில் சபைகளில் இருக்கிறது.

மோசே இஸ்ரவேல் ஜனங்களை விடுவிப்பதற்கு முன்பாக சுமார் நாற்பது வருஷங்கள் தேவனோடு தனித்திருக்கும் அனுபவத்தில் ஆவியானவர் அவனை நடத்தினார். மோசேயிடம் கட்டளைகளை கொடுக்கும்போது தேவன் சொன்னார் ஒருவரும் உன்னோடு மலைக்கு வரக்கூடாது. அந்த மலையில் நீயும் நானும் தனியாக தான் இருக்க வேண்டும் என்பதாக. இயேசுவும் தன்னுடைய ஊழியத்தை துவங்கும்முன் 40 நாட்கள் வனாந்திரத்தில் ஒன்றும் புசியாமல் இருந்தார். இயேசு சீஷர்களை துரிதப்படுத்தி எப்பொழுதும் தேவனோடு தனித்திருக்க அவர் வாஞ்சித்தார்.

இயேசுவோடு நம்முடைய உறவு மணவாளன் மணவாட்டி உறவைபோன்றது. நம்முடைய ஊர்களில் புதிதாக திருமணமான தம்பதிகளை தனியாக இருக்க விடுவதில்லை. உறவினர்கள், நண்பர்கள் என்று அநேகர் அவர்களை வரவழைப்பார்கள் இல்லையென்றால் எங்கேயும் செல்லவும் விடமாட்டார்கள். மணவாளன் மணவாட்டிக்கு உள்ள தொடர்பை வர்ணிக்க உன்னதப்பாட்டில் அருமையான வசனம் இருக்கிறது. வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம். அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன் (உன் 7:11,12) என்பதாக.

அதுபோல, மரியாள் இயேசுவோடு தனித்திருப்பதை வாஞ்சித்தாள், தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை அவள் தெரிந்துகொண்டாள். தேவனோடு நாம் தனித்திருக்கும்போது முக்கியமாக ஒன்றை கடைபிடிக்க வேண்டும் என்று ஒரு மூத்த ஊழியக்காரர் சொன்னார். நாம் தனியாக தேவனிடம் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது உள்ளே கைபேசியை (Mobile) எடுத்துவிட்டு போகக்கூடாது, இதை பதினொன்றாவது கட்டளையாகக்கூட வைத்துக்கொள்ளுங்கள் என்று ஆலோசனையாக சொன்னார். காரணம் நாம் தனித்து ஆவியில் நிரம்பி ஜெபிக்கும்போது கைபேசியிலிருந்து வரும் சிறு வெளிச்சம் கூட நம்முடைய கவனத்தை திசை திருப்பும். ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்ப்பது நம்முடைய தரம் வாய்ந்த நேரத்தை (Quality time) எதிர்பார்க்கிறார்.

E.M பவுண்ட்ஸ் என்ற ஊழியக்காரர் சொன்னார் “ஜெபத்தின் இரகசியம் இரகசிய ஜெபமே (The Secret of Prayer is Praying in Secret “) என்பதாக. ஆகையால் இன்று இயேசு உங்களை பார்த்து ஒரு அழைப்பை விடுக்கிறார்: நீயும் நானும் தனித்திருக்க வேண்டும், நீ என்னோடு மாத்திரம் பேசும் நேரம் வேண்டும், நான் உன்னோடு மாத்திரம் பேசும் நேரமும் எனக்கு வேண்டும் என்பதாக. இயேசுவோடு தனித்திருங்கள், அப்பொழுது வழி இதுவே என்று சொல்லும் சத்தத்தை கேட்பீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org